பழித்தடம்
(Way of Revenge)
சுடலை மாடன் கோவிலில் பரந்து விரிந்து நின்றது ஆலமரம். முன்னால்
கண்மாய். இந்த கண்மாய் கிழக்கு திசையில் கணபதிபட்டி வரை நீள்கிறது. தெற்கில் தெக்கூர், வடக்கே வடக்கூர். ‘கதிரேசன் மலைக் கோவில்’ மலைச்சரிவு லிங்கம்பட்டி தான்டி
கடலையூர் வரை நீண்டு இருந்ததால் கோவில்பட்டியில் பாதி மேடான பகுதிகள் தான். கண்மாய்க்கு
தண்ணீர் எங்கு இருந்து வருகிறதோ, ஆரம்பம் எது முடிவு எது? யாருக்குத் தெரியும்?
கண்மாயில் எப்போதும் தண்ணீர் இருந்ததால் ஆலமரத்துக்கு வந்து சேராத பறவைகள்
இல்லை. தூங்கிக்கொண்டு இருந்த விதவிதமான பறவைகள் விழிக்கத் தொடங்கி இருந்தன.
காக்கா, மைனாக்கள் 'கண்மாய்' தண்ணீரில் தலையை முக்கியும், தலையைச் சிலுப்பியும்
குளிக்கத் தொடங்கியிருந்தன. இரை தேடப் போகும் முன் தத்தைகள் தம் குஞ்சிகளிடம்
கிளிப்பேச்சில் பிரியா விடை சொல்லிக்கொண்டு இருந்தன.
கோழிப்பண்ணையில் இருந்த போந்தாங்கோழிகளில் சிலதுகள் ஒன்றை
ஒன்று இடித்துக் கொண்டு, கோப்பையில் கொஞ்சமாய் கிடந்த
இரையைக் கொத்திக்கொண்டு இருந்தன. இரவின் நிசப்தம் கோழிகளால் களைந்தது. முட்டை
சேகரித்து வைத்து இருந்த மூலையிலிருந்த இரும்புத் தூணில் அரை மயக்கத்தில் கொச்சக்
கயிறால் கைகள் கட்டப்பட்டுக் கிடந்தவனுக்கு, கோழிகள் இரை கொத்தும் சத்தம்
வலது காதில் விழுந்தது. 'டயர்' செருப்பினால்
வாங்கிய அடியில் இடது காது சரியாகக் கேட்கவில்லை. வாயில் கட்டி இருந்த துணி, கிழிந்த உதட்டில் இருந்து வடிந்த இரத்தத்தால் நனைந்து காய்ந்து போய் இருந்தது. இதோ
விடியப் போகிறது விடியலைக்காண உயிரோடு இருக்கப் போகிறோமா இல்லையா எனத் தெரியாத
பயம் அவன் கண்களில் தெரிந்தது.
'கான்டிவலி' பகுதியில் இருந்த
வீடுகளைப் பார்த்த உடன் ‘தீப்பட்டி’ அட்டைகளை ஊதா தாளில் ஒட்டி மடித்து அம்மா முற்றத்தில்
காயப்போட்டிருந்த நியாபகம் தான் வந்தது அவனுக்கு, ஆண்களும் பெண்களும் இலவச கழிவறையிலும்,
கட்டண கழிவறையிலும் வரிசையில் காத்து இருந்தனர். அவர்களைக் கடந்து இரண்டடி சந்தில்
நுழைந்தான். சில வீடுகளின் முன் மூன்று அடியாக, நான்கு அடியாக கூடி மறுபடி ஒன்னரை அடி
என குறைந்த சந்திலிருந்து வெளியேறி, ‘பைரவர்’ கோவிலை கடந்ததும் இரண்டு எதிர்
எதிர் வீடுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி பன்னிரெண்டு அடியாக கூடி இருந்தது. மரங்கள்,
செடிகள் என கொஞ்சம் விசாலமாக இருக்க நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டான்.
‘புளியரை’ பகுதி மக்கள் அதிகம் வாழும் இடமாதலால்,
கையில் பேக்கோடு வந்த இவனைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்ட ஒருத்தன் "ஹே
மாப்ள... நல்லா இருக்கியாடே? என்ன சொல்லாமக் கொள்லாம வந்து இருக்க?"
எனக் கேட்டவனிடம் "வெளிநாட்டு வேலை விஷயமா வந்து இருக்கேன்."
என்று மட்டும் சொல்லிவிட்டு வேகமாக கடந்து போனான். சாலுக்கு வெளியே அடி பம்பில்
தண்ணீர் அடித்துக்கொண்டிருந்த 'பிலோமினா' இவனைப் பார்த்ததும், "யாத்தி... எம் புள்ள செத்து
பொழச்சி வந்து இருக்கே..." என கட்டிப் பிடித்து அழத் தொடங்கினாள்.
"ஏட்டி இப்ப ஏன் கரைஞ்சி ஊரைக் கூட்டுற நீங்க
உள்ள வாங்க மருமவனே” என பேக்கை கையில் வாங்கிக் கொண்டு சாலுக்குள் கூட்டிப் போனார்
ஸ்டீபன்.
'எட்டுக்கு எட்டு'
என்கிற அளவில் இருந்த அந்த வீட்டில், கட்டிலுக்கு
கீழ் பேக்கை வைத்து விட்டு உட்காருங்க என ஒரு நாற்காலியை நகர்த்தினார். கட்டிலில்
போர்வையை மூடி யாரோ படுத்து இருந்ததைப் பார்த்து கண்களால் அத்தையிடம் கேள்வி
கேட்டவனுக்கு...
"சின்னவன் ‘ஜெரோம்’ நைட்டு டான்ஸ்
புரோகிராம்ல ஆடிட்டு லேட்டா தான் வந்து படுத்தான், செத்த நேரத்தில் சாதம் ரெடியாகிடும் தண்ணி நொப்பி வச்சிருக்கேன்...
குளிக்கிறீயளா? எங்க அண்ணன், அண்ணி எப்படி இருக்காக?" எனக் கேட்டவளுக்கு...
"ம்ம்ம்... நல்லா இருக்காங்க, வெளிநாடு
போகும் முன்ன கூட்டிட்டு வரேன்.” என்றான்
இருள் சூழ்ந்து இருந்ததால் ரயில்வே ட்ராக்
பக்கத்தில் ஆளுயரம் வளர்ந்து இருந்த மல்லிகைப் பூ செடிகளுக்கு இடையில் டார்ச்
அடித்து தேடிக் கொண்டு இருந்தார்கள். "பைரவா... டேய்... பைரவா... காபிரியேல்
மாப்ள... எங்கடா இருக்கீங்க..." என அழுகையும் கதறலுமாய் கத்திக் கொண்டு
மல்லிக்கைப் பூ செடிகளுக்குள் தேடிக்கொண்டு இருந்தான் லாரன்ஸ்.
"இப்ப
கத்திக் கதறி என்னலெ பிரயோசனம், படிச்சிப் படிச்சி
சொன்னேனே... வடக்கூர் பொண்ணுங்க பின்னால சுத்தாதீங்கலேன்னு கேட்டீங்களாலெ... அந்த
பயலுக மட்டும் அம்புடட்டும் அந்த எடத்திலேயே மண்ணோடு மண்ணா அரைச்சுத் தேச்சிருவேன்..."
என கத்திக் கொண்டு லாரான்ஸை அடிக்கப் போனார் பொன்னையா.
"அவா வடக்கூர்காரி இல்ல 'உப்பத்தூர்க்காரி'
என்றான் லாரன்ஸ்.
"இதுல ஒண்ணும் கொறைச்சல் இல்ல... ஒரே ஆளுங்க
தானடா... வடக்கூர்காரன் தயவு இல்லாமலா உப்பத்தூர் பஸ்ல போனவனுகள வடக்கூர் விலக்குல
இறக்கி இருக்கானுக... ஆள் யாருன்னு சரியா பாத்தியாலெ..."
"நான் பாக்கெல தோட்டிலோவன்பட்டி
விலக்கு தாண்டுன பொறவு தான் பார்தேன் ரெண்டு பேருமில்ல, சந்தேகப்பட்டு அந்த பொண்ணு
கிட்ட கேட்டேன், நோட், டிபன் பாக்ஸ் கூட வாங்காம இறங்கிட்டாங்க, கூட எங்க ஊர்காரங்க வேற
இறங்கினாங்க, பயமா இருக்குன்னு சொன்னா..."
"செத்த மூதி... விளக்கு பிடிக்கத் தானலெ பஸ்லெ கூடப் போயிருக்க... அதைக் கூட ஒழுங்கா பண்ணமாட்டியாலெ... செத்த நேரம் வாயெ
மூடிக்கிட்டு கெட, அவனுகளுக்கு மட்டும் ஏதும் ஆனதுன்னு வை...
ஒன்னய சோலிய முடிச்சிட்டுத்தான்லெ மறுவேலை..." என்று பொருமினார் பொன்னையா.
கீழ் வானம் சிவந்தது. இருள் மெல்ல மறையத்
தொடங்கியது. மாலை முதல் நள்ளிரவு வரை அடியும், உதையும் வாங்கி மயங்கி கிடந்தவனின் மேல் கதிரவனின் ஒளி மெல்ல படரத்
தொடங்கியது. கண்களை மெல்லத் திறந்து பார்த்தான். கோழிகள் மும்முரமாக இரை மேயத்
தொடங்கி இருந்தன, முட்டை இட்ட சோர்வில் சிலதுகள் இன்னும்
எழும்பாமல், முனங்கிக்கொண்டு இருக்கும் இவனைப் பார்த்து "கொக் கொக்..."
என கொக்கரிக்கத் தொடங்கின. பெலனை எல்லாம் ஒன்று திரட்டி மெல்ல கட்டிப்போட்டு
இருந்த கம்பியில் சாய்ந்து எழுந்து நின்றான். கோழிகள் கலைந்து ஓடின கொக்கரிப்புச்
சத்தம் அதிகமாகியது.
ரோட்டில் சென்ற டூவீலர்கள் வேகம் குறைந்து வாசல்
முன்பில் வந்து ஹாரன் அடித்தது. செட்டினுள் படுத்திருந்த இரண்டு பேர் வேகமாக
எழுந்து கதவை நோக்கி நடந்தனர். கோவில்பட்டி டீக்கடைகளில் பால் ஊற்றி விட்டு திரும்பிய பால்காரர்கள் மூன்று பேர் TVS 50'யில்
நின்று கொண்டிருந்தனர்.
"லேய்... யார்ல அங்க பண்ணைக்குள்ள தூண்ல?”
“என்ன சொல்லுதீரு, என்ன சொல்லுதீரு” என மாறி
மாறிக் கேட்டான் ஒருவன்.
“திரும்ப ஒரு மட்டம் சொல்லணுமோவ்? காது
பொத்துப் போச்சோ லேய்?
“முட்டை வாங்க வந்தீரா? கோழி வாங்கவா?”
“இல்ல லேய், ஒனக்குச் செரைக்குதுக்கு
வந்திருக்கேன். தொறங்க லேய் ஹேட்ட...”
இரண்டு பேரும் பால்காரர் செல்லையாவின்
அதட்டல் குரலில் ஆடிப் போய் நின்றனர்.
"காப்பிய குடிச்சிட்டு கையிலயே டம்ளர வச்சிட்டு
இருக்க குளி மோனே..." என்றாள் பிலோமினா. இரண்டுக்கு மூன்று அடி அளவுள்ள
சமையலறை திண்டில் இருந்த பொறித்த அப்பளத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்து
விட்டு, மூலையில் சிறிய பள்ளம் போன்ற இடத்தில் கேனில் இருந்த தண்ணீரைக் கப்பில்
எடுத்து பக்கத்து திண்டில், அடுப்பில் மூடி இருந்த
பாத்திரங்கள் மீது படாமல் கீழே அமர்ந்து குளிக்கத் தொடங்கினான்.
"வாங்க மச்சான் எப்படி இருக்கீங்க..." எனக்
கேட்ட ஜெரோமிடம்...
"ம்ம்ம்... நல்லா இருக்கேன், குளிச்சிட்டு வா நிறைய வேலை இருக்கு..." என சொல்லிவிட்டு சாலுக்கு
வெளியே சேரில் உட்கார்ந்து தலையைத் துவட்டத் தொடங்கினான். பின் தலையில் காயம் ஆறி
தழும்பாய் இருந்த இடத்தில் மெல்ல தடவிக் கொண்டான். கண்கள் சிவக்கத் தொடங்கின.
கோழிக்கறி சாப்பிட்டு விட்டு ஆட்டோ ஒன்றைப் பிடித்து ஜெரோம் உடன் 'கான்டிவலி' ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தான்.
கோழிக்கறி சாப்பிட்டு விட்டு ஆட்டோ ஒன்றைப் பிடித்து ஜெரோம் உடன் 'கான்டிவலி' ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தான்.
"என்ன மச்சான்... இன்னும் பழசை மறக்கலையா?
ஏன் வந்ததும் வராததுமா 'அந்தேரி' போகணும்னு சொல்லுறீங்க... 'தராவி' போகலாம் அக்கா உங்கள பார்த்தா சந்தோஷப்படுவா..."
"ம்ம்ம்... போகலாம், 'ஜல்ஜீரா'
குடிக்கலாமாடா?"
"சரி மச்சான், எனக்கு 'நிம்பு' பாணி."
"மேரி, எப்படிலெ இருக்கா? மெர்ஸிக்கு இப்ப என்ன வயசு?"
"நல்லா இருக்கா, பொடுசு
அக்காவ மாதிரியே செம வாயி இரண்டரை வயசு ஆகுது, தமிழ், மராட்டி,
ஹிந்தின்னு பிச்சு உதறும் செம வாலு"
"பார்க்கணும் போல இருக்குடா... "
"அக்கா வீட்டுக்கு போகலாமே... 'அந்தேரி' வேண்டாம் மச்சான்."
"வாயெ மூட்டிடு வா... அதிகப் பிரசங்கித்தனமா
பேசாத..." என கோவத்தில் கத்தியவனின் குரலும், சிவந்த
கண்களையும் கண்ட ஜெரோம் ஆடிப் போனான்.
"ம்ம்ம்... " என்று மட்டும் பதில் வந்தது.
"யோசுவா, இப்போ எங்க
இருப்பான்?"
"அண்ணன் இப்போ வீட்டுக்கு வரதில்ல... 'Parle
G' பிஸ்கட் கம்பெனி வேலையிலிருந்து நின்னுட்டு 'தாதாகிரி' பண்ணிட்டு இருக்கான்."
"அந்தேரி ஸ்டேஷனுக்கு, ஆப்போசைட்ல
இருக்கிற McDonald's ரெஸ்டாரண்ட்க்கு வரச் சொல்லு..."
"அண்ணன் எதுக்கு மச்சான்?"
"McChicken Burger, அவனுக்கு
ரொம்ப பிடிக்கும் வாங்கி குடுக்க...'
"என்னது...?"
"சாலா.. எனக்கு ஒரு ‘கோடா' வேணும்."
"கோடா...? குதிரை எதுக்கு
மச்சான்...?"
"ஹாஹா ஹாஹா அடேய் என் அத்த பெத்த அறிவுக்
கொழுந்தே... வேட்டைக்குப் போக குதிரை
வேணும்டா..." என அட்டகாசமாய் சிரித்தவனை பிளாட்பாரத்தில் இருந்த அனைவரும்
திரும்பிப் பார்த்தனர்.
"வேட்டை... வேண்டாம் மச்சான்."
"போ போயி டிக்கெட் எடு கிளம்பலாம்."
கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள்
வேலை முடிந்து ஊர் திரும்பக் காத்திருக்கும் கூலித் தொழிலாளர்கள் என நிறைந்து
இருந்தது. உப்பத்தார் பஸ் கிளம்ப ஆயத்தமாக ஹாரன் அடித்ததும் பஸ்ஸை சுற்றி நின்று
கொண்டிருந்தவர்கள் ஏற ஆரம்பிக்கவும் காபிரியேல், பைரவன் பின் வாசலிலும் லாரன்ஸ் முன்
வாசலிலும் ஏறிக்கொண்டனர்.
பஸ் மார்க்கெட்டில் ஆள் ஏற்றி நகர்ந்த போது பைரவன்
பஸ்சினுள் முன்னேறி பின் வாசலில் இருந்து இரண்டு சீட் தள்ளி பச்சை நிறத்தில் தாவணி,
பாவாடை , வெள்ளை நிறத்தில் ஜாக்கெட்
அணிந்திருந்த இரண்டு பள்ளி மாணவிகளுக்கு பின்னால் நின்று கொண்டான். அவர்கள்
இருவரும் இவனைப் பார்த்ததும், அதில் ஒருத்தி, நோட்டு, டிபன் பாக்ஸ் குடுங்கண்ணா வச்சிருக்கேன் என
சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். பஸ்
வேலாயுதபுரம் ரயில்வே ஹேட்டைத் தாண்டியதும், மறுபடியும் பின்
வாசல் பக்கம் நகர்ந்து கொண்டான்.
"எலெ மாப்ள... உப்பத்தூர் வரைக்குத்தானலெ டிக்கெட்
எடுத்து இருக்க...?" என்று கேட்ட பைரவனிடம்...
"ஆமாடா... ஆனா சாத்தூர் ரோடு போனதும் 'ரெட்டியப்பட்டி' விலக்குல இறங்கி பஸ் ஏறி
வந்துடுவோம்." என்றான் காபிரியேல்.
"உப்பத்தூர் வரைக்கும் போவோம்லெ.. அரையாண்டு
லீவு முடிஞ்சி மறுபடி பாக்கெ ரொம்ப நாள் ஆகும்லடா..."
"அதுக்கு...? இதுக்கு மேல
பேசினன்னு வையி கெடாவிப் புடுவேன் கெடாவி..."
"அடிக்க வேணுனா செய்லெ ஊர் வரை
போலாம்லெ..."
"பேசாம வாலெ இல்லனு வையி வேலாயுதபுரத்தில் இறங்கி நாம்
பாட்டுக்கெ நடந்து போயிருவேன்."
“ஏழேய் மாப்ள பயப்படாதலெ, நான்கூட இருக்கேலெ
நீ பயந்தா எனக்குக் கொறச்சிலு இல்லா அது? எனச்சொல்லி நக்கலாகச் சிரித்தான்.
“சரிங்க குருநாதா, நீங்க சொன்னா சரத்தான்.”
"சரிலெ... சரிலெ கோவிக்காத உப்பத்தூர் போவேணாம்.”
"ம்ம்ம்... சலம்பாம வாலெ..." என காபிரியேல்
சொல்லி முடிக்கவும், அவள் திரும்பி பைரவனைப்
பார்த்து கண் சாடையில் போதும் போ என்பது போல் கண்ணால் பேசி சிரிக்கவும் சரியாக
இருந்தது.
"மாப்ள... மீனாட்சியே சொல்லிட்டா சாத்தூர்
ரோட்டில் இறங்கிப் போயிடுவோம்."
இவற்றை எல்லாம் பின் சீட்டில் இருந்து
பார்த்துக் கொண்டிருந்த நான்கு ஜோடிக் கண்கள் கோவத்தில் சிவந்தன.
"எங்கெ வர வந்து யாரு வீட்டு புள்ள மேல ஆச படுதானுவ பாரேன்... எவ்வளவு திமிரு இருக்கணும் செறுக்கிவுள்ளயா... இன்னையோட முடிவு கட்டுறேன்..."
இருள் சூழவும் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிப வயது ஆண்களில் ஒருவன்,
"மாமா... இனி இங்க தேடி ஒரு பிரயோஜனம் இல்ல... வடக்கூர் பெருசுங்க யாராவது எதுவும் பார்த்து இருக்கலாம்ல..." எனக் கூறியதை ஆமோதித்தார் பொன்னையா.
"எல்லோரும் கிளம்புங்கப்பா... சூரிக் கத்தி,
அருவா வெச்சிருக்கவன் வடக்கூர் எல்லைல முனியசாமி கோயில்ல ஒக்காருங்க...
மத்தவ எங் கூட வா... தலையாரிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு ஊர்ல வெசாரிக்க
சொல்லுவோம்."
கூட்டம் பின் தொடர்ந்தது. விசயம் கேள்விப்பட்ட தலையாரி, வயல் வேலைக்குப் போய்விட்டு வந்தவர்கள், ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தவர்களை ‘பெருமாள் கோவில்’ முன் வரவைத்தார்.
கூட்டம் பின் தொடர்ந்தது. விசயம் கேள்விப்பட்ட தலையாரி, வயல் வேலைக்குப் போய்விட்டு வந்தவர்கள், ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தவர்களை ‘பெருமாள் கோவில்’ முன் வரவைத்தார்.
"இந்தா பாருங்கப்பா... மூவாயிரம் தலக்கட்டு
உள்ள தெக்கூர்காரவுக மூன்னூறு தலக்கட்டு உள்ள நம்ம தயவ நாடி வந்துருக்காங்க...
இரண்டு இள உசுறு சம்பந்தப்பட்டு இருக்கு... யாருக்கும் எதுவும் தெரிஞ்சா முன்ன
வந்து சொல்லுங்க... நாளப் பின்ன ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிட்டுனா, நம்ம பிள்ளைக அவுக ஊருக்கு பஸ் ஏற, தண்ணி எடுக்க
நிம்மதியா போயிட்டு வரணும்ல..."
"என்ன தலயாரி மூவாயிரம் தலக்கெட்டுனா
பயந்துருவமா... என்ன பேச்சு பேசுதீரு... யார்கிட்ட..."
"இவன் யாருடா கோட்டிக்காரப்பய... நம்ம ரெண்டு
ஊரும் ஒண்ணா மண்ணா தானல பலகிட்டு இருக்கோம் அடுத்த ஊருகாரனால நமக்குள்ள ஏன் வீண்
வம்பு?"
"அதெல்லாம் இருக்கட்டும் வேய், இப்பம் நாம என்ன
செய்யணும்? அதெச் சொல்லும்.”
"உப்பத்தூர் பஸ் போன பொறவு ஊருக்குள்ள வந்தவங்க
யாரு, ரெண்டு பசங்க கூட நாலு உப்பத்தூர்காரங்க எறங்கி இருக்காங்க யாரும் பாத்தீயளா?”
கூடத்தில் கொஞ்சம் நேரம் அமைதி. அமைதியை ஆடு
மேய்க்கும் பெரியவர் களைத்தார். "இப்பத்தான் பொறி தட்டுது... கூட்ஸ் ரயில்
ஒண்ணு கவிழ்ந்துச்சே அந்த இடத்துக்கு பக்கத்துல நாலைஞ்சு பேரு சாராயம்
குடிச்சிட்டு இருந்தாங்க..."
"என்ன சொல்லுறீரு... எப்ப பாத்தீரு...?"
"ஆறு மணி வாக்குல..."
"சின்ன பசங்க யாரும் கூட இருந்தாங்களா? வேத்து
ஆளுவள பாத்தாக்க என்ன ஏதுன்னு விசாரிக்க வேணாமா?"
"கேட்டனே... வாழ மரம் வாங்க வந்து இருக்கோம்னு
சொன்னானுவ... ரெண்டு சின்னப் பசங்க படுத்து இருந்துசிங்க, என்னனு
கேட்டதுக்கு போதை அதிகமாகிட்டுனு சொன்னானுவ..."
"அய்யோ மாமா... மாமா..." என பொன்னையாவைப்
பார்த்து கதறி அழுதான் லாரன்ஸ்.
"ஏல தம்பி பேசாம இருப்பா... அழாத... ஹே...
என்னப்பா மூஞ்சப் பாத்துட்டு இருக்கீக... ஊர்ல உள்ள விடலைப் பயலுகள லைட்
எடுத்துட்டு விரசா வரச் சொல்லு..." என்ற தலையாரி வெண்கலப் பூண் போட்ட
சிலம்புக் கம்மை கையில் பிடித்து வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு ஓட்டமும்
நடையுமாய் நடந்தார். முனியசாமி கோவிலில் இருந்தவர்கள் விசயம் கேள்விப்பட்டு
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு மாதிரி ரயில்வே ட்ராக் நோக்கி, காய்ந்து கிடந்த பருத்தி செடிகளுக்கு இடையே ஓடத் தொடங்கினார்கள்.
‘கவுதம் நகர்’ ஸ்டேஷன் கடந்ததும் எழுந்து,
வாசலில் நின்று இருந்த நான்கு வரிசையில் இடது ஓரத்தில் நின்று கொண்டார்கள். ட்ரைன்
அந்தேரியில் நின்றதும் பின்னால் இருந்தவர்களின் உந்துதலில் எளிதாக இறங்க
முடிந்தது. விலக முடியாதபடி முன்டியடித்துக்கொண்டு ஏறிய கூட்டத்தை ஒருவழியாகக்
கடந்து Escalator படியில் ஏறி இறங்கியதும் வலது புறத்தில்
இருந்த McDonald’s ரெஸ்டாரண்ட்டினுள் நுழைந்து, மூலையில் இருந்த
சோபாவில் அமர்ந்த சிறுது நேரத்தில்...
"Excuse me order please..." நேபாளி பெண் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேட்க, காபிரியேல்...
“Three McChicken Burger with Extra Cheese
and French Fries please..."
"Any Cold Drinks Sir?"
"Three Red Bull."
"போன் பண்ணுனியா அண்ணனுக்கு?" என்றவனிடம்
"ம்ம்ம்... போன் பண்ணி சொல்லிட்டேன் வரான் மச்சான்."
என்றான் ஜெரோம்.
ஐந்து நிமிடத்தில், ட்ரேயில் இருந்த ஆர்டரை டேபிளில் பரப்பிட்டு புன்சிரிப்புடன் நகர்ந்தாள்
நேபாளிப் பெண்.
Push என எழுதப்பட்டிருந்த கண்ணாடிக் கதவை இரு கைகளாலும்
தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் 'யோசுவா'
கதவு தன்னிலைக்கு வர கொஞ்ச நேரம் ஆனது. சாம்பல் நிற குர்தா, கறுப்பு
ஜீன்ஸ், லெதர் பூட், Black Ray Ban
கண்ணாடி, பிரெஞ் தாடி என ஆறடி உயரத்தில் கம்பீரமாக எழுந்து நின்றவனைப் பார்த்த
யோசுவா சிறிது நேரம் தயங்கி, பின்பு கட்டி அணைத்துக்
கொண்டான்.
"ஜகாஸ் சாலா... து சமக் ரஹா ஹே பே... மாஸ்” என்று அவனுடைய உடுப்பினைப் பார்த்து வியந்து கூறி இடது புறங்கையில்
முத்தம் கொடுத்தான். ஜெரோமை நோக்கி "இன்னும் டான்ஸ், புட்பால்
மேட்ச்ன்னு தான் சுத்திட்டு இருக்கியா..." என கேட்டுவிட்டு பதிலுக்கு
காத்திராமல், "மச்சான் என்ன விசயம், எந்த நாட்டுக்கு போக விசா வேணும்? சிங்கப்பூர் தவிர
எங்க வேணுமினாலும் ரெடி பண்ணித் தரேன்” என்று சிரித்தான்.
"அதெல்லாம் வேண்டாம், எனக்கு
ஒரு 'கோடா' வேணும்."
"துப்பாக்கியா? துப்பாக்கி
எதுக்கு மச்சான்...?!" என பதறிய யோசுவாவைப் பார்த்து,
‘Red Bull’ குடித்துக் கொண்டு இருந்த
ஜெரோம்க்கு புரையேறிவிட்டது.
பால்காரர் செல்லையாவின் அதட்டலுக்குப் பயந்து
போன இருவரும் ஹேட்டைத் திறந்தனர்.
“யாரலெ கட்டிப் போட்டு வச்சிருக்கியெ?
"அது வந்து... அவன் திருட்டுப்பய, ஓனர் பையன்
தான் கட்டிப் போட்டு வச்சிருக்கான் எங்களுக்கு வேற எதுவும் தெரியாது..."
என்றனர்.
மூன்று பேரும் ஹேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே
நுழைந்தனர். கோழிகள் இருந்த கட்டிடம் அருகே சென்றதுமே கம்பி வலையின் வழியே தெரிந்த
காட்சியைப் பார்த்ததுமே...
"ஏழேய்... செறுக்கிமவனுவளா... சின்ன பயலெ என்னலெ
பண்ணி வச்சிருக்கியெ..." என கத்திக்கொண்டு ஓட கூடவே மற்ற இரண்டு
பால்காரர்களும் ஓடினர். உடம்பெல்லாம் இரத்தக் காயத்தோடு கம்பியில் சாய்ந்து மெல்ல
மெல்ல இரண்டு கால்களையும் உதறிக் கொண்டிருந்தவனை, பின் கைகளில் கட்டி இருந்த
கயிற்றை அவிழ்த்து விட்டு வாயில் கட்டி இருந்த துணியை எடுத்து விடவும், கைகளை வாயை
நோக்கிக் கொண்டு போனான். பால்காரர் ஓடிப் போய் பால் கேனைக் கொண்டு வந்து பாலைக் குடிக்கக்
கொடுத்தார். உடம்பில் இருந்த எறும்புகளைத் தட்டிவிட்டபடியே கேட்டார்,
"யாருப்பா நீ... எந்த ஊரு...?"
“NGO காலனி”
"யாரு வீட்டுப்பிள்ளடா
நீ...?"
"போஸ்ட்மேன் அருளானந்தம் மகன்."
"அடப்பாவி... லூர்து வாத்தியார் பேரனாடா நீ?"
செல்லையா கண் கலங்கியபடி கேட்டார்.
"ம்ம்ம்... " என தலையாட்டினான்.
“லேய்... நீ கீழத்தெரு ஈசானமுத்துவுக்கு
மகன்தானேலே?” என்று பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்து கேட்டார்.
“ஆமா, ஆமா.”
“லேய், ஒங்கப்பனுக்கு காலேஜ் கேண்டின்
பாட்டத்துக்கு எடுத்துக் கொடுத்தது யாருன்னு தெரியுமாலே, ஒனக்கு?”
“அய்யா சொல்லியிருக்கு.”
“என்னலேய் அய்யா சொல்லியிருக்கு.”
“லூர்து வாத்தியார்தான் எடுத்து தந்தாருன்னு.”
“அதுக்குப் பெறவுதாம்லே உங்கப்பன் சோத்துக்கு
கறிக்கொளம்பு தொட்டுக்கிட்டது, பொத்தக் கூரையைப் பிடிங்கிப் போட்டுப்புட்டு நாலு
ஓட்டுத் துண்டை மேல தூக்கி வெச்சான்.”
“ம்ம்ம்...”
“லேய் நாறப் பயலே! அணைக்கிற கையெக் கடிக்கப்
புறப்பட்டிருகியா நீ? உங்கப்பன் பேர, ஊர் பேர கெடுக்குதுக்கா லேய்
தலையெடுத்துருக்கே நீ?”
“மாப்புதாங்க அய்யா மாப்புதாங்க.”
'பஸ் வேலாயுதபுரம்
தாண்டிய சிறிது நேரத்தில் "வடக்கூர் விலக்கு கேட்டவங்க இறங்குங்க..." என கண்டக்டர் சத்தம் குடுக்க
"தம்பி இறங்கி ஏறுங்க..." என்று நால்வரில் ஒருவன் சொல்ல தயங்கியபடியே
இருவரும் இறங்கி படிக்கட்டு கம்பியைக் பிடித்துக் கொண்டிருந்தவர்களின் கையை
விலக்கி விட்டு பஸ்ஸை தட்டவும் கண்டக்டர் விசில் அடிக்காமலேயே பஸ் கிளம்பிப்
போனது. இருவரின் கழுத்திலும் கத்தி.
இருட்டின் மறைவில் இருந்து இரண்டு பைக்கை
எடுத்து வந்தனர்.
"ரெண்டு பேர்ல பைரவன் எவன்டா...?"
நெஞ்சில் கை வைத்து நான் தான் என்றான். "வண்டியில்
ஏறுங்கடா..." இருவரும் ஆளுக்கு ஒரு பைக்கின் பின் சீட்டில் ஏறவும் இரண்டு
பேர் அவர்களுக்குப் பின் ஏறிக் கொண்டனர். பைக் ரயில்வே டிராக்கைக் கடந்து அதை
ஒட்டியபடி சென்ற ஒத்தையடிப் பாதையில், இருட்டில் போய்க்
கொண்டிருந்தது. இருவரும் செய்வதறியாது உட்கார்ந்து இருந்தனர்.
"உனக்கு எதுக்கு இப்ப துப்பாக்கி அதான் MBA
படிச்சி முடிச்சி எத்தனை வருசம் ஆகிட்டு... 'சேட்'
கிட்ட சொல்லி நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரேன்,
போய் செட்டில் ஆகுற வழியப் பாரு அத விட்டு ஏன்?"
"வேலையைப் பத்தி அப்புறம் பேசுவோம், இப்போ ‘கோடா’
வாங்கித் தர முடியுமா? முடியாதா...?"
"நான் சொன்னா கேட்குற ஆளா நீ... சொல்லுறேன்னு
தப்பா நினைக்காத, அந்த ஆக்சிடண்ட் உண்மையில் உனக்கு வச்ச
குறியா...? ரோட்டில் தனியா தான போயிட்டு இருந்த உனக்கு
ஸ்கெட்ச் போட்டு இருந்தா மிஸ் ஆகி இருக்காது, வளைவுல
திரும்பும்போது உன் பைக்ல லைட்டா உரசி இருக்கு..."
"ஆமாடா... ரெண்டு கிலோ மீட்டரு பின்னாடியே
வந்து, சரியா அந்த வளைவுல வந்த உடன் வேகத்தை கூட்டி தட்டிட்டு போறான்... வாயக்
கிளறாத சொல்லிபுட்டேன்."
"சரி விடு... அந்த தடத்தில வண்டி ஓட்டுற
அம்புட்டு டிரைவரும் அந்த வளைவு வந்தாலே பயப்படுவானுக... ராத்திரி பத்து
மணிக்கு மேல மதுர பஸ் எல்லாம் இளையரசனேந்தல் ரோடு வழியா போயிடுது, இன்னும் எத்தன பேத்த கொல்லக் காத்திருக்கோ... நீ ஏன் இன்னும் கம்மாய்க்கரை வழியாவே சுத்திப் போற...? ‘கோடா' நான் வாங்கித் தரேன், ஆனா நானும் கூட வருவேன்."
“ஏன்டா... இப்ப என்னவாம்?”
“எசக்கேடான வேலை மச்சான் பாத்துக்கோ, காரியம்
பலிச்சாலும் பலிக்கும், தல அறுந்து தொங்கினாலும் தொங்கும்.”
"என்னைப் பார்த்தா எப்படி தெரியுது...? சவம்
இன்ன சமயம்னு இல்லாம பொசுக்குன்னு போற உசுரு தான்ல... ஒரு காரியத்தில் இறங்கிட்டா
உசுரு போனா மசுரு போச்சுன்னு இறங்கணும்.”
“வேண்டாம் மச்சான்.”
“அடேய்... நான் எதுலயும் இறங்கல, ஊருல
இருக்கும் வரை பாதுகாப்புக்குத்தான் கேட்டேன். 'சேட்' கிட்ட சொல்லி வேலைக்கு ரெடி பண்ணு, கிறிஸ்துமஸ்
ஊரில் கொண்டாடிட்டு நியூ இயர் உங்களோட இருந்துட்டு கிளம்புறேன்."
யோசுவாக்கு மகிழ்ச்சி தாங்கல...
"மச்சான் உண்மையாத் தான் சொல்லுறியா என்னால நம்ப முடியல, வா... தராவி போவோம் 'மேரி' வீட்டில் சாப்பிட்டு சாயங்காலம் ‘கோடா’ வாங்க
போகலாம்.
ஜெரோமுக்கு ஒண்ணும் விளங்கல... 'மச்சான் கிறிஸ்துமஸ் கொண்டாட மாட்டாரே... இப்ப மட்டும் எப்படி என்று
யோசித்துக் கொண்டே...' அந்தேரி ஸ்டேஷன் நோக்கி நடந்த அண்ணன்,
மச்சான் பின்னே நடக்கத் தொடங்கினான்.
செல்லையா அவனை மடியில் கிடத்தி "இவன்
வீட்டு ஆளுங்களுக்கு தகவல் சொல்லணும் ராத்திரி முழுக்க தேடியிருப்பாங்க, அதுக்கு முன்ன நம்ம ஊரு பெரியவங்க கிட்ட சொல்லு போ..." என கூட இருந்த
பால்காரரை அனுப்பி வைத்தார்.
"லேய்... ஏன்டா கோழி களவான்ட மாதிரி பேந்தப்
பேந்த முழிக்கீக... இப்ப நடந்ததை சொல்லப் போறீயாளா இல்லியாலெ...?"
"ஓனர் மகன் செண்பகராசுவும் இன்னொரு ஆளும் தான்.
இவனை வண்டியில் கொண்டு வந்து கட்டிப்போட்டாங்க... காலையில் 'மாரியப்பன்'
ஹோட்டலில் வச்சி பஞ்சாயத்து பேசி அனுப்பிவிடலாம், அது வரைக்கும் இங்க வச்சிருங்கன்னு சொன்னான்."
"கட்டப் பஞ்சாயத்து பேசுற அளவு பெரிய ஆளா
ஆகிட்டானா... தூக்குங்கடா இவனை" என்று சொல்லி முட்டைகளை ஏற்றும் மூன்று சக்கர
வாகனத்தின் பின்னால் ஏற்றி வண்டியை ஓட்டிக் கொண்டு ஊரைப் நோக்கிப் போனார்.
ஊர் பெரியவர்கள் எல்லையில் கூடி இருந்தனர். ஹோட்டல்கடை
மாரியப்ப அண்ணாச்சிக்கு டெலிபோனில் தகவல் சொல்லி இருந்தார்கள். ஊர்த்தலைவர் 'செண்பகராசு' வந்தா பிடித்து வைத்து போலீஸ்க்கு தகவல்
குடுக்கும்படி சொல்லி விட்டு வண்டியில் ஏறிக்கொண்டதும், வண்டி
கோவில்பட்டி நோக்கி வேகம் எடுக்க, அந்த வண்டியை நான்கைந்து டூவீலர்களில் ஆட்கள்
பின் தொடர்ந்தனர்.
ரயில்வே டிராக்கின், ஓரமாய் சென்ற பாதையில் சிறிது தூரம் சென்று டூவீலரை விட்டு இறங்கியதும்,
‘மலைச்சாமி’ பைரவனின் பின் மண்டையில் இரயில்வே ட்ராக்கில் கிடந்த பாறாங்கற்களில்
ஒன்றை எடுத்து அடிக்கவும் சூடான இள இரத்தம் சுற்றி இருந்தவர்கள் மீது பீச்சி
அடித்தது... முகம் குப்புற செம்மண் தரையில் விழுந்தவன் தலையிலிருந்து செங்குருதி
வழித்தோடியது.
"ஐய்யோ பைரவா.... அவனை ஒண்ணும் செய்யாதீகண்னே...
அப்பா இல்லாத ஒத்த பையன், நான் தான் அவனை கூட்டிட்டு வந்தேன்... என்னை என்ன
வேணுமினாலும் செய்யுங்க... அவனை விட்டுருங்கண்னே.." என சொல்லி முடிக்கவும், செருப்பு
ஒன்று கன்னத்தில் மின்னல் வேகத்தில் இறங்கியது...
"அண்ணனா... யாருக்கு யாருல... அண்ணன்.? உங்கப்பனுக்கு நான் பிறந்தனா? இல்ல என் அம்மா
வயித்துல நீ பிறந்தயால...? சிறுக்கிபயபுள்ள...
அண்ணன்கிற..." என சொல்லி எட்டி உதைத்தான் மலைச்சாமி.
"ஹே... நீ என்னப்பா எதும் சொல்லிட்டு செய்ய
மாட்டியா... சட்டையெல்லாம் இரத்தம் ஆகிட்டு... ரெண்டு பயலுகளையும் சத்தம் இல்லாமல்
அறுத்து தண்டவாளத்தில் போட்டுட்டு தடயம் இல்லாம, வந்த தடம் தெரியாம போய்ட்டுருக்க
வேணாமா..." என்றான் செண்பகராசு.
“தடயம் இல்லாமல் பண்ணவா... என்னை என்ன சொம்பப்பயன்னு
நினைச்சியா..."
"என்னடா பேசுற நீ..."
"கொல்லுறதுக்கும் ஒரு தராதரம் வேணும்டா... நம்ம
புள்ள மனசைக் கெடுத்தவனை சங்க அறுக்கணும்..."
"அப்போ இவனை என்ன பண்ண..."
"விடு போகட்டும்... தப்பிலி... பொடிப்பய என்ன
பண்ணிருவான் ஆங்க்... அவன் ஊருல போயி சொல்லட்டும், அப்பத்தான்
நம்ம புள்ளைக பின்னாடி சுத்தினா என்ன நடக்கும்னு அவனுகளுக்குத் தெரியும்."
என்று சொல்லி அழுது கொண்டிருந்தவனின் தலையில் மிதித்து கீழே தள்ளினான் மலைச்சாமி.
“அதுக்காக இப்படியே விடச் சொல்லுறியா... கால்
கைய மொடமாக்கி விடுவோம்..” என்று அருவாளை ஓங்கினான் சேகர்.
“அடச் சீய்... இவனெல்லாம் ஒரு ஆளு
மசுருன்னு...” எனச் சொல்லி அழுது கொண்டிருந்தவனின் அடி வயிற்றில் மாறி மாறி எட்டி
உதைத்தான் விஜி.
இரத்தம் சொட்ட விழுந்து கிடந்த பைரவன் அழுது
கொண்டு இருந்த காபிரியேலைப் பார்த்து "ஓடிருடா... மாப்ள... அம்மாவ, பாப்பாவ
பார்த்துக்கோ..." என ஈனக் குரலில் முனங்கி கையை ஆட்டினான்.
ஆட்டிய கையில் அருவாளை இறக்கினான் சேகர், விரல்கள் துண்டாகிச் சிதறியது.
"அய்ய்யோ மாப்ள.... அவனை விட்டுருங்க... அவன்
பாவம், அவன் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் அவனை விட்டா
யாரும் இல்ல..." என எழுந்து ஓடி வந்தவனை, விஜி எறிந்த கல், பறந்து வந்து மார்பில்
தாக்கி கீழே விழுந்து தீப்பொறி பறந்தது. காபிரியேல் நிலை குலைந்து கீழே சரிந்தான். ட்ராக் ஓரத்தில்
கிடந்த கற்கள் வாயில் குத்திக் கிழிக்கவே, இரத்தம் கொட்டியது. கொஞ்ச தூரம் தள்ளி
விழுந்து கிடந்த பைரவனின் கண்களில் இருந்து
இரத்தத்தோடு சேர்ந்து கண்ணீர் கொட்டியது.
"ஏலெய்... செண்பா... இவனை தூக்கி ஓரமா போடு,
அப்புறமா கொண்டு போய்
லிங்கம்பட்டில இருக்கிற ஒன்னோட கோழிப்பண்ணைல அடைச்சி வை காலையில் பார்த்துகிடலாம்...
லிங்கம்பட்டில இருக்கிற ஒன்னோட கோழிப்பண்ணைல அடைச்சி வை காலையில் பார்த்துகிடலாம்...
“லிங்கம்பட்டி போகணும்னா இவனுக ஊரு கண்மாய் தாண்டி,
ஊர் வழியா மேட்டில் ஏறித்தான போக முடியும்?”
“அதுக்கு? கோவில்பட்டி போயி, எட்டையபுரம்
ரோட்டைப் பிடிச்சி தெக்குத் திட்டங்குளம்’ வழியாப் பத்து கிலோமீட்டர் சுத்திப் போறியா...?”
“அதுக்கில்ல...”
“என்ன நொதுக்கில்ல... கழுத்தில் கத்தி வச்சி
கொண்டு போ சத்தம் போட்டான்னா அறுத்து அவன் ஊரு ரோட்ல போட்டுட்டு போ.. அடுத்து
எப்படா ட்ரெயின் வரும்?"
"ஏழரைக்கு..."
“வண்டி பெட்டியில் சரக்கு இருக்கு எடு...”
என்றான் மலைச்சாமி.
பருத்திக் காட்டின் வழியே ஓடியவர்கள் ரொம்ப
வருடங்கள் முன்பு கூட்ஸ் ரயில் ஒன்று கவிழ்ந்த இடத்தை அடைந்ததும் ஆளுக்கொரு பக்கம்
லைட்டை அடித்துக்கொண்டு பிரிந்து போய்த் தேடினார்கள். பொன்னையாவும், தலையாரியும் ரெயில்வே டிராக்கில் கொஞ்ச தூரம் நடந்ததுமே செருப்பில் 'பிசுக், பிசுக்' என்று சத்தம்
வர பொன்னையா டார்ச் வெளிச்சத்தில் செருப்பைக் பார்க்க... கறுஞ்சிவப்பு நிறத்தில் உறைந்து
போன இரத்தம் ஒட்டி இருந்தது. பொன்னையாவும் தலையாரியும் உறைந்து போய் நிற்க அவர்களை
உலுக்கியது லாரன்ஸின் அழுகுரல்.
"அய்யய்யோ... மாப்ள... அத்தை என் புள்ள
எங்கடான்னு கேட்டா என்னடா சொல்லுவேன்... என் பயல நேரத்துக்கு வீட்டுக்கு
கூப்பிட்டு வாடான்னு சொல்லுமே இப்ப என்ன பதில் சொல்லுவேன்..." என அழுதபடியே ரெயில்வே ட்ராக்கில் நைந்து, இரத்தத்தில் தோய்ந்து கந்தலாக சிவப்பு
நிறமாய் மாறி இருந்த வெள்ளைச்சட்டைத் துணிகளை கைகளில் வைத்துக் கதறினான்.
தராவியில் கிராஸ் ரோட்டில் இருந்த அந்த
அப்பார்ட்மெண்ட்டின் ஐந்தாவது மாடியின் இடது மூலையில் S.மேரி B.A B.Ed என்று இருந்த
போர்ட்க்கு கீழ் இருந்த காலிங் பெல்லை அழுத்த உள்ளே குருவிச் சத்தம் கேட்டு
முடித்ததும் மேரி வந்து பாதிக் கதவைத் திறந்தாள். அண்ணன் தம்பிகளைப் பார்த்து
வாங்க என கூறி முடிக்கும் முன் பின்னால் நின்று இருந்தவனைப் பார்த்தவுடன்...
"யாத்தி... யாரது... ‘காபிரியேல்’ மச்சானா?!
என கண்கள் விரியக் கத்தி... "வாங்க வாங்க எப்படி
இருக்கீங்க..." என கதவைத் திறந்தாள்.
"ரெண்டு வருசமாச்சி பார்த்து... இங்கயே இருந்து
இருக்கலாம்ல... ஊருக்குப் போயி மறுபடியும் பிரச்சனையில் மாட்டி ஏன்
கஷ்டப்படுதிய... ம்ம்ம்... அத்தை மாமா நல்லா இருக்காங்களா... பைரவன் அண்ணன் தங்கச்சி
பேச்சிய நல்லாப் படிக்க வச்சி கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்களே நீங்க ஒரு நல்ல
பொண்ணாப் பார்த்து சீக்கிரம் கல்யாணம் பண்ணப் பாருங்க..."
"ஹே... டீச்சரம்மா உன் பள்ளிக்கூடத்துல கேள்வி
கேட்கிற மாதிரி ஒரே நேரத்தில் எத்தனை கேள்வி கேட்கிற... எல்லோரும் நல்லா
இருக்காங்க... உன் புள்ளய எங்க..?”
"பக்கத்து பிளாட்ல இருக்கா.. இருங்க கூட்டிட்டு
வரேன் "
கையில் பார்பி பொம்மை ஒன்றை வைத்துக் கொண்டு
வீட்டினுள் நுழைந்தது குட்டித் தேவதை மெர்ஸி.
"ஜெரோம் மாமா...’' என்று
ஓடி வந்து சோபாவில் ஏறிக் கட்டிக்கொண்டது.
"அடிக்கடி வீட்டுக்கு வந்தா தான மூத்த மாமனை
அடையாளம் தெரியும்" என
யோசுவாவைப் பார்த்து சொன்னாள்.
யோசுவாவைப் பார்த்து சொன்னாள்.
"நான் யாருன்னு சொல்லு பார்க்கலாம்..."
என்று மெர்ஸியைக் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கேட்டான். தயங்காமல் சொன்னது...
"காபிரியேல் சித்தப்பா."
"அதெல்லாம் போட்டோவைக் காட்டி சொல்லிக்
கொடுத்து இருக்கேன்ல..." என்று சிரித்துக் கொண்டே கூறினாள் மேரி.
"மூணு பேரு வந்தும் பிள்ளைக்கு ஒரு பிஸ்கட்
பாக்கெட் கூட வாங்கிட்டு வரல பாரு... ச்சேய்..." எனக் கூறிவிட்டு கழுத்தில்
கிடந்த ஜெயினைக் கழட்டி குழந்தை கழுத்தில் போட்டு விட்டான்.
"என்ன மச்சான் இதெல்லாம்... ஏன் இப்படி
பண்ணுறீங்க... இவ்வளவு நாள் நீங்க அடுத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும், இனி
உங்களுக்காக வாழப்பாருங்க..."
"எனக்கு இனி என்ன பெரிய லட்சியம்... குடும்பம் அப்படி
எல்லாம் ஒண்ணும் இல்ல..."
"சும்மா இருங்க மச்சான்... இனி என்ன லட்சியமா?
பைரவன் அண்ணன் இறந்து பத்து வருசம் ஆக போகுது, அன்னைக்கு நடந்த கலவரம்,
பஞ்சாயத்துல நீங்க பேசி இருந்தா அவனுகளுக்குத் தண்டனை கிடைச்சிருக்கும், அத விட்டு இருட்டில் முகம் சரியா தெரியலன்னு பஞ்சாயத்துலயும், கோர்ட்லயும்
சொல்லி... அவனுக அந்த சம்பவத்த வச்சே பெரிய ரவுடி ஆகி, கட்டப் பஞ்சாயத்துன்னு
எத்தனை குடும்பத்தைக் கெடுத்து, கருவறுத்து... அப்பாவி மக்களோட நிலத்தைப் புடுங்கி...
ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணி இப்ப சிங்கப்பூரில் கம்பெனி வச்சி நடத்துற அளவுக்கு
வந்துட்டானுக... நீங்க பத்து வருசமா பைரவன் அண்ணனோட அம்மாவையும் தங்கச்சியையும்
பார்த்துட்டு இருக்கீங்க, இப்ப அவுங்க அம்மா
இறந்துட்டாங்க... பேச்சிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க... இனியாவது நீங்க
கல்யாணம் பண்ணி மாமா, அத்தைய கடைசி
காலத்தில் சந்தோசமா வைக்கலாம்ல..."
"எதுக்கு இப்போ இவ்வளவு லெந்தா மூச்சி விடாமல்
பேசுற... பைரவனோட அம்மா, ‘எனக்கு புருஷன், பிள்ளைதான்
இல்லாமல் போயிட்டு இருக்கிற பொட்டயப்புள்ளயவாது உசுர காப்பாத்திக் கரை
சேர்க்ககணும்னு’ சொன்ன பிறகு என்னை என்ன பண்ண சொல்லுற? சாட்சி சொன்னா அதோட
போயிடுமா? பழிக்குப் பழி'ன்னு ரெண்டு பக்கமும் கொலை விழுந்துட்டே
இருக்கும்.”
“இப்ப மட்டும் என்னவாம் சிங்கப்பூரில்
இருந்து வருசாவருசம் மீனாட்சியக்கா நினைவுநாளுக்கு வர்றவனுக... என்னமோ நீங்க தான்
அந்தக்கா இறந்ததுக்கு காரணம்கிற மாதிரி உங்க மேல கண்ணா திரியுறானுக.”
“ஹே... அதெல்லாம் ஒண்ணுமில்ல.”
“ஒண்ணுமில்லயா? ரெண்டு வருசம் முன்ன அவனுக
ஊரில் இருக்கும் போது தான உங்களுக்கு ஆக்ஜிடண்ட் ஆச்சிது உங்களுக்கு
எதுவும்ன்னா...” எனக் கூறி விம்மினாள்.
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எனக்கு இப்போ நீங்க எல்லாம் இருக்கீங்க தான... கைக் குழந்தையாப் பார்த்த உன் பிள்ளை சித்தப்பான்னு என் பேரோட சேர்த்து சொல்லுது... இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்?”
"மேரி சாப்பாடு ஆக்கு... மச்சான் கூட வெளிய
போகணும்.” என்று பேச்சை திசை திருப்பினான் யோசுவா.
"ஆரம்பிச்சிட்டியா... பத்து வருசம் முன்ன அந்த
பிரச்சனைக்குப் பிறகு, ரெண்டு வருசம் வந்து தங்கினவரு, அதுக்கு அப்புறம் ஒரு நாள்
ரெண்டு நாள்னு நல்லது, கெட்டதுக்கு தான் வந்தாரு, கடைசியா என் வீட்டுக்காரர் ஆக்ஜிடண்ட்ல இரண்டு வருசம் முன்ன இறந்ததுக்கு
வந்துட்டு போன பிறகு, ரெண்டாவது முறையா உயிர் பொழைச்சி... இப்பத்தான் வந்து
இருக்காரு... இப்பவும் நீ, பாந்த்ரா, அந்தேரின்னு
கூட்டிட்டுத் திரியாத உன் தாதாகிரியை உன்னோட வச்சிக்கோ..." என கண்
கலங்கினாள்.
"இப்ப எதுக்கு கண்ணைக் கசக்குற.... வெளிநாட்டு
வேலை விசயமா சேட் கிட்ட பேசணும், கொஞ்சம் வேலை இருக்கு... முடிச்சிட்டு நேரா
வீட்டுக்கு வரோம் போதுமா..."
"ம்ம்ம்.. சரி மச்சான், சாப்பிட்டு போயிட்டு
வாங்க..."
‘பாந்த்ரா’ ரெயில்வே ஸ்டேஷன் எப்போதும் போல் சுத்தமாக இருந்தது.
யோசுவா போன் எடுத்து கான்டாக்ட்ல ‘பப்லு’ என்று இருந்த பெயரை அழுத்தி போனை காதில்
வைத்தான்.
"ஆங்... பப்லு பாந்த்ரா வந்துட்டோம், எங்க
வரணும்... சரி... ரெண்டாயிரம் ரூபாயா... ம்ம்ம்... வாங்கிக்கோ..."
"சாலா... இவனுக்கு கமிஷன் ரெண்டாயிரம் ரூவா
வேணுமாம்... பக்கத்துல உள்ள அப்பார்ட்மெண்ட் தான் வா போலாம்... " எனக் கூறி
டாக்ஸியில் ஏறி "மாலிக் அப்பார்ட்மெண்ட்" என்று கூறினான்.
ஐந்து நிமிடத்தில் அப்பார்ட்மெண்ட் வந்தது. வெள்ளை ஜிப்பாவுடன் , பான் பீடா வாய் சிவக்க வரவேற்றான் பப்லு. மூன்றாவது தளத்துக்கு லிப்ட்
வந்ததும் வலது பக்கம் நான்காவது கதவின் முன் நின்று மூன்று முறை காலிங் பெல்லை ஒரே
சீரான இடைவெளி விட்டு அழுத்தவும் சிறிது நேரத்தில் கதவு திறந்தது. ஜல்வார் கமீஸ்
அணிந்த நடுத்தர வயது பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.
"அந்தர் ஆஜா... " என அழைத்து கதவைப்
பூட்டினாள்.
மேஜை மீது நான்கு துப்பாக்கியும், சிறிய மரப்பெட்டி ஒன்றில் தோட்டாக்களும் எடுத்து வைத்தாள்.
"எதாவது Decide பண்ணிட்டியா...
எது எடுக்கணும்னு...?" என்று கேட்டவளுக்கு...
மேஜையில் இருந்த துப்பாக்கிகளைப் பார்த்து
விட்டு "நீங்க என்ன Recommend பண்ணுறீங்க.."
என்றான்.
கைக்கு அடக்கமாக இருந்த ஒரு துப்பாக்கியை
எடுத்து இரண்டு பேருக்கும் முன்னாள் பிடித்துக் குறி வைத்தாள்.
"Glock 2010 Austrian Made, Semi-automatic, 50 Meter Firing
Range. 2 Laks Only."
"ஆங்க்... தீதி..." என்று மறுத்து தலை
ஆட்டினான் யோசுவா.
"ப்ச்..."
ஜேம்ஸ் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினான்.
"Springfield Professional 1911 9mm. 1, 50,000 only" என்றாள்.
நீட்டிப் பிடித்த துப்பாக்கியைக் கீழே வைத்து
விட்டான்.
யோசுவா ஒரு துப்பாக்கியை நோக்கி கையை கொண்டு
போக... எடுத்துக் கையில் குடுத்தாள்.
"Makarov PM, 9*18mm, Russian, 1lak
Only."
பிடித்துப் பார்க்காமலையே கீழே வைத்து
விட்டான்.
திடீரென இடுப்பில் இருந்து ஒரு துப்பாக்கியை
எடுத்து குறிவைத்தாள்,
"யாதவ் பிரதர்ஸ், அமர்ருவா,
உ.பி. ’தேஷி’ ‘காலா கோடா’ 7989 ரூபா, ஆறு புல்லட்
ப்ரீ... இது எடு இது பெர்பெக்ட்.." என்று கையில் திணித்தாள்.
உ.பி மாநிலத்தில், தயாரான நாட்டுத்
துப்பாக்கி ‘கருப்பு குதிரை’ என்று சொன்னதைக் கேட்டவுடன்,
"ஓடுமா...” என்று சந்தேகத்தோடு கேட்டவனிடம்,
“ஓடுமாவா? அதெல்லாம் பறக்கும்” என்றான்
யோசுவா.
"ஒன்னரை இன்ஞ் லெப்ட் சைட் தள்ளி பிடிச்சி
ஓட்டுனா நேரா ஓடும்” என டிப்ஸ் குடுத்தாள்.
பரிசோதித்துப் பார்க்க துப்பாக்கியை எடுத்து
அவளின் நெத்திக்கு நேராகப் பிடித்தான்.
"கொஞ்சம் தள்ளிப்பிடி..." என்று கையை
ஆட்டினாள்.
ஒன்னரை இன்ஞ் இடது பக்கம் தள்ளிப் பிடித்ததான்.
"ம்ம்ம்... இப்பப் பறக்கும்..." என்று
அமோதித்தாள்.
எட்டு, ஆயிரம்
ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தான், ஜேம்ஸ்.
வாங்கிக்கொண்டு, துணியில் சுற்றிக் கையில் குடுத்தாள், வாங்கி
இடுப்பில் சொருகி வைத்துக்கொண்டான். அறையின் ஓரத்தில் சேரில் அமர்ந்து இருந்த
பப்லுவின் கையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டைக் கையில் வைத்தான் யோசுவா. அவன் “
அண்ணா ஏ கியாகே..” என்று கெஞ்சியவனிடம் “அரே ரக்லே பஹோத்தே..” என்று சமாதானம் கூறி
ஜேம்ஸின் தோளில் கை போட்டு வாசலை நோக்கி நடந்தான்.
மூன்று நாளில் மெர்ஸி நன்றாக ஒட்டிக்கொண்டாள். நானும் கூட
வாரேன்னு அழுது அடம்பிடித்தவளை சித்தப்பா
உனக்கு பொம்மை, ஸ்கூலுக்கு போக பேக், புத்தகம் எல்லாம் வாங்கிட்டு வரேன் அம்மா கூட இருன்னு சொல்லியும், கண்ணீர் வடிய
பார்த்துப்போங்க மச்சான் என்று நிமிடத்திற்கு ஒருமுறை கூறிய மேரியைத் தலையில்
தட்டி எனக்கு ஒண்ணும் ஆகாது நியூ இயர்க்கு இங்க இருப்பேன்னு சொல்லிச் சமாதானப்படுத்தி இரயில் ஏறும் முன் போதும்
போதும் என்றாகி விட்டது.
யோசுவாவிடம், ‘அத்தை , மாமா , மேரியை அடிக்கடி போய் பாரு’
என்றும் ஜெரோமிடம் ‘சீக்கிரம் சினிமா டான்ஸ் ட்ரூப்ல சேரப்பாரு என்று கூறிவிட்டு
கிளம்பினான். யோசுவா கட்டிப்பிடித்து காதருகே மெல்ல ‘மச்சான் கோடா பத்திரம்’
என்றான்.
‘சத்ரபதி சிவாஜி’ டெர்மினலில் இருந்து நாகர்கோவில்
எக்ஸ்பிரஸ் மெல்ல நகரத் தொடங்கியது. டெர்மினலை விட்டு ட்ரைன் மறையும் வரை வாசலில்
நின்றவனுக்கு மெர்சியும், மேரியும் கைக்காட்டிக்கொண்டு இருந்தனர்.
35 மணி நேர பயணத்திற்குப் பின் இரவு பத்தரை மணிக்கு சாத்தூர்
வந்தவுடன், முகம் கழுவி, பேக்கில் இருந்து பொட்டலம் ஒன்றை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டான்.
‘நள்ளி’ ஸ்டேஷன் கடந்ததும் கையில் பொட்டலத்தோடு எழுந்து வாசலுக்குப் போனான். கொஞ்ச
நேரத்தில் பல வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை
ஏற்றிக்கொண்டு போன இரயில் கவிழ்ந்த இடத்தைக் கடக்கும் போது இஞ்சின் வேகம் குறைந்து
நிதானமான வேகத்தில் சென்றது, வாழைத் தோட்டத்தைப்
பார்த்தவுடன் பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்த ரோஜா இதழ்களை தண்டவாளத்தின்
ஓரத்தில் இருந்த கற்கள் மீது தூவிவிட்டுக்
கொண்டே வந்தான். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“காபிரியேல்... டீக்குடிக்க வாப்பா, அப்புறமா சீரியல் லைட்
கட்டிக்கிடலாம், ஏன் இந்த வருசம் வீட்டைச் சுத்தி இவ்வளவு சீரியல் பல்ப், கிறிஸ்துமஸ்
மரம், குடில் எல்லாம் வைக்கிற... நான் வாசல்ல ஒத்த ஸ்டார் கட்டச் சொன்னாலே
திட்டுவ..”
“அது ஒண்ணுமில்லம்மா அடுத்த பண்டிகைக்கு நான் இருப்பனா மாட்டனான்னு
தெரியாது அதான்...”
“அய்யோ... ஏன்டா அப்படி எல்லாம் பேசுற...?”
“அட ஏம்மா பதற்ற... அடுத்த வருசம் வெளிநாட்ல இருந்தாலும்
இருப்பேன்ல.”
“அது சரிடா, அப்போ ஏன் காலையில் பைக்க அந்தப் பாடு
படுத்திட்டுருந்த., சீட்டை மாத்தி வச்சிருக்க., போன வாரம் புகை குழாய் இரண்டு
மாட்டி வச்சி இருந்த, இப்போ பம்பர் ஒன்னுக்கு மூணு கம்பி வச்சிருக்க...”
“எம்மா... இருக்கிற வரை கொஞ்ச நாள் ஆல்டர் பண்ணி, ஆசை தீர
ஓட்டிட்டு, போகும் போது ஜெரோம் கிட்ட குடுத்துட்டுப் போறேன்.”
“சரிடா... நைட்டு கிறிஸ்துமஸ் ஆராதனைக்குப் போகும்போது பார்த்துப் போ தண்ணித் டேங்க் கட்டுறதுக்கு குழி
தோண்டி போட்டு இருக்காங்க. எவ்வளவு சொல்லியும் இன்னும் வடக்கூர் இரயில்வே ஹேட்
வழியா அஞ்சு கிலோ மீட்டர் சுத்தி தான கோவில்பட்டிக்கு போயிட்டு இருக்க, இன்னும்
எத்தனை நாள் அதையே நினைச்சிட்டு இருப்ப?”
“அட... ஏம்மா சும்மா அதையே சொல்லிட்டுருக்க நான் அதை மறந்து
பத்து வருசம் ஆகிட்டு.”
கையில் கிளாஸ் உடன் வந்த அருளானந்தம் “முதலில் டீ
குடிப்பா..” என கிளாசைக் கையில் குடுத்து விட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்து
கொண்டார்.
“வடக்கூர் விலக்கு கிட்ட தான உனக்கு பைக்ல அடிபட்டது.”
“அது தெரியாம நடந்த ஆக்ஜிடண்ட்ப்பா அத ஏன் பெருசு
படுத்துறீங்க?”
“அந்த ரயில்வே ட்ராக்ல எத்தனை பேர் இறந்திருக்காங்க, ஆடு,
மாடுன்னு ஒரு முறை ஆட்டோ கூட அடிபட்டுச்சே ஆறு மணிக்கு மேல அந்தப்பக்கம் போக
வடக்கூர் ஆளுங்களே பயப்படுவாங்க... மார்கெட் போயிட்டு சாத்தூர் பஸ்ல போகாம,
கடலையூர் பஸ்ல வந்து நம்ம ஊரில் இறங்கி நடந்து போறாங்க நீ என்னடான்னா சாமத்தில்
கூட அந்த வழியாத்தான் ஒத்தைல வார...”
“இங்க இருக்கப்போறது கொஞ்சநாள் தான...”
“அதுக்கில்ல... இன்னையோட பைரவனும், மீனாட்சியும் இறந்து
பத்து வருசமாகுதுல... அதான்...”
“சரிப்பா, சர்ச் போகும் போது அந்த வழியா போகல போதுமா?”
“அது போதும்பா.“ அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சொல்லிவிட்டுச்
சிரித்தார்கள்.
கிறிஸ்துமஸ் மரத்தின் மீது சீரியல் விளக்கு சுத்திவிட்டு
சுவிட்சைப் போட்டதும், வெளிச்சத்தில் வீடு பிரகாசமாய் ஜொலித்தது.
அமாவாசை இருட்டோடு Yamaha RX 100 ஹெட்லைட்
வெளிச்சம் போட்டி போட்டுக்கொண்டு சென்றது. கண்மாய் கரையைக் கடந்து, ரயில்வே கிராஸிங்கைத் தாண்டி இருந்த கருப்பசாமி கோவில் பின்புறம் இருட்டில்
பைக்கை நிறுத்தினான். நூறு மீட்டர் தொலைவில் விவசாயப் பண்ணைக்கு எதிரில் 'இறைவன் ஒயின்ஸ்' போர்ட் பச்சை நிறத்தில் மின்னியது.
வேலாயுதபுரத்துக்கும் ஒயின்ஷாப்க்கும் இடையில் கடைகள் , வீடுகள்
எதுவும் இல்லாததால் அந்த இடம் மட்டும் கொஞ்சம் வெளிச்சமாய் இருந்தது.
"அண்ணே ரெண்டு பீர்" என்று கேட்டான்.
"கூலிங் இல்ல, Strong தான் இருக்கு ஓகேவா? பார் குளோஸ் ஆகிட்டு."
"உள்ள ஆள் இருக்கே..."
"அடுப்பு எல்லாம் அமத்தியாச்சி, பாத்திரம் கழுவிட்டு இருக்காங்க அவுங்க ரெகுலர் கஷ்டமர்ஸ் கொஞ்ச நேரம்
இருப்பாங்க."
"பரவாயில்லண்ணே... குடுங்க."
ஒயின்ஷாப்பைக் கடந்து போகும் போது பாரின்
உள்ளே பார்த்தான், நான்கு பேர் அமர்ந்து இருந்தனர். கொஞ்சம் தூரம் தள்ளி Indica
Car ஒன்று நின்றிருந்தது.
ஒயின்ஷாப், பார் லைட் எல்லாம் அணைந்து ரோட் ஓரத்தில் இருந்த போர்ட் லைட் மட்டும் எரிந்து
கொண்டிருந்தது, இரண்டு கதவுகள் திறந்தபடி இருந்த காரினுள்
டிரைவர் சீட்டில் ஒருவன், பின் சீட்டில் இருவர் அமர்ந்து
இருக்க வெளியில் நின்று சிகரெட் குடித்துக்கொண்டு இருந்தான் செண்பகராசு.
கொஞ்ச நேரத்தில் கார் கதவுகள் சாத்தப்பட்டு
இன்சின் ஸ்டார்ட் ஆவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் காபிரியேல்.
‘விபத்துப் பகுதி கவனமாக செல்லவும்’ என்ற
போர்டை கடந்து வளைவில் திரும்பியதும் வேகம் குறைந்த கார் சட்டென நின்றது. முன்
சீட்டில் இருந்த செண்பகராசு இறங்கி முன்னே நடக்கவும், காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு இறங்கி நின்றான் மலைச்சாமி. பின்
சீட்டில் 'விஜியும், சேகரும் அறை
போதையில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து படுத்து இருந்தனர்.
பைக் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்து
கிடக்க அருகில் ஹெல்மெட் அணிந்த ஒருவன் குப்புறக் கிடந்தான்.
"இன்னும் எத்தனை பேர் தான் இங்குனக்குள்ள சாகப்
போறானுகளோ..."
"நீதானடா ஆரம்பிச்சி வச்ச..." என்று
மலைச்சாமியைப் பார்த்து திரும்பிச் சிரித்த செண்பகராசுவின் பொடணியில் "நங்க்"
என்று 'பைக் பம்பர்' தாக்கியது. தலை
குப்புற கீழே விழுந்தான்.
என்ன நடந்தது என்று குழம்பி, சுதாரித்து காரை நோக்கித் திரும்பி ஓட எத்தனித்த மலைச்சாமியின் முதுகில் பறந்து வந்து விழுந்தது 'பம்பர்', இரண்டு கைகளாலும் முதுகைத் தடவ முயன்ற போது இன்னொரு 'பம்பர்' பின் மண்டையைத் தாக்கியது.
பின்னந்தலையைப் பிடித்திருந்த கைகளை மடக்கி, இடுப்பில் இருந்து எடுத்த ‘Cable Tie’ வட்டத்தில்
விட்டு நுனியைப் பிடித்து இழுக்கவும் லாக் ஆகிக் கொண்டது. மலைச்சாமியை மிதித்து
கீழே தள்ளிவிட்டு, மெல்ல அசைந்து ஊர்ந்து எழும்ப முயன்ற
செண்பகராசின் முதுகில் பூட்ஸ் காலால் மிதித்து தரையில் அழுத்தி அவன் கைகளிலும் ‘Cable
Tie’ கொண்டு லாக் பண்ணினான். இருவரின் காலையும் கைக்கு ஒன்றாகப்
பிடித்து தர தர வென்று இழுத்துச் சென்று... தார் ரோட்டில் இருந்து பிரிந்து
ரயில்வே ட்ராக் நோக்கிப் போன செம்மண் ரோட்டின் இறக்கத்தில் உருட்டி விட்டான்.
காரின் பின் கதவுகள் திறந்ததைப் பார்த்தவன், பைக்கை நோக்கி ஓடி இடது பக்கம் கொக்கிகளில் மாட்டியிருந்த சைலன்ஸரைப்
பிடித்து இழுத்தான், எளிதாக கையோடு வந்தது...
கையில் அருவாளோடு ஓடி வந்து கழுத்துக்கு குறி
வைத்து ‘சீவலப்பேரி’ அருவாளை வீசிய விஜியை சைலன்ஸரால் தடுத்து, காலால் எட்டி உதைத்து அருவாள் பிடித்து இருந்த கையில் ஓங்கி அடிக்கவும்
அருவாள் கீழே விழுந்தது. காரில் இருந்து இறங்கிய சேகர், ஓடத்
தொடங்கினான்,
இடுப்பில் இருந்து உருவிய துப்பாக்கியை எடுத்து சுட்டான். இடது தொடையில் குண்டு பாய்ந்து வெளியேறியது. ஆ... என அலறிக் கொண்டு ரோட்டின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தான். விஜியின் கைகளை லாக் பண்ணி சேகர் விழுந்து கிடந்த பள்ளத்தில் தள்ளி விட்டான்.
இரண்டு பம்பர்களையும் கையில் எடுத்து ‘Clamp’ கிட்ட கொண்டு போகவும் அதில் பொருத்தி இருந்த காந்தத்தினால் ஒன்றன் கீழ்
ஒன்றாக ஒட்டிக் கொண்டது. டேங்க் கவரில் இருந்த LED ஹெட்லைட்டை
கையில் எடுத்து, ஹெல்மெட்டைக் கழட்டி கண்ணாடியில் மாட்டி
விட்டு, பைக்கை மறுபடியும் கருப்பசாமி கோவில் பின்புறம்
மறைவில் நிறுத்தி விட்டு ரோட்டின் ஓரத்தில் வந்து நின்று தலையில் LED லைட்டை மாட்டி ஆன் பண்ணினான்.
ரோட்டிற்கும் ரயில்வே ட்ராக்கிற்கும் இடையே
இருந்த பள்ளத்தில் நான்கு பேரும் விழுந்து கிடந்த இடத்தில் இருந்து ஆளுக்கொரு
திசையில் ஊர்ந்து கொண்டும் கிந்திக் கிந்தி நடந்து கொண்டும் இருந்தனர்.
இடது கையில் துப்பாக்கி, வலது கையில் பைக் சைலன்ஸர் உடன் பள்ளத்தில் இறங்கி ஓடினான்.
தலையிலிருந்து இரத்தம் சொட்ட பின்னால் கைகள்
கட்டப்பட்டு தடுமாறி தள்ளாடி நடந்த மலைச்சாமி, பின்னால் துரத்தி வந்த வெளிச்சத்தைப்
பார்த்து ஓட முயன்று ட்ராக் ஓரத்தில் கிடந்த கற்களில் கால் தடுக்கி கீழ விழுந்து
புரண்டு கத்தினான்...
"எவன்டா நீ.? ஒனக்கும் எங்களுக்கும் என்னடா சம்பந்தம்? என்னடா வேணும் ஒனக்கு...?"
"எமன்டா... உங்க உசுற எடுக்க வந்திருக்கும்
எமன்..." என உரக்கச் சொல்லிவிட்டு, பக்கத்தில் வந்தான்.
ஆறடி உயரத்தில், ஆசானுபாகுவான உடலுடன் வலது கையில் வைத்து
இருந்த சைலன்ஸரை தோளில் சாய்த்துப் பிடித்து, இடது கையில்
துப்பாக்கியைப் பிடித்தபடி எதிரில் நின்றான்.
வலது கையில் ‘கதாயுதம்’ இடது கையில் 'பாசக்கயிர்' வைத்தபடி எமன் கண் முன் வந்து போக, எதிரில்
நின்றவனைப் பார்த்து...
"காபிரியேல்..." என்று கத்தியவனின் மார்பில் 'பொந்த்த்’ என எமனின் 'கதாயுதம்' தாக்கியது.
"காபிரியேல்..." என்று மலைச்சாமி
கத்தியதைக் கேட்ட மற்ற மூன்று பேரும் கொஞ்ச நேரம் அசைவற்று நின்று திரும்பிப்
பார்த்தனர். பாறாங்கற்கள் பறந்து வந்து தாக்கியது. நின்ற இடத்தில் அலறிக் கொண்டு
சாய்ந்து விழுந்தனர்.
நான்கு பேரையும் துப்பாக்கி நுனியில் ஒரு
இடத்தில் சேர்த்து சைலைன்ஸரால் அடித்து விரட்டினான்.
'பாசக்கயிறும்' ' கதாயுதமும்'
பின்னால் இருத்து துரத்த நான்கு பேரும் பத்து வருடங்கள் முன்பு ஒரு
அப்பாவி உயிரைப் பலியிட்ட 'பலிபீடம்' நோக்கித்
தள்ளாடிப் போய்க் கொண்டிருந்தவர்களின் தடத்தில் பின் சென்றான் எமன்.
"எங்களை விட்டுரு... " என அலறினான்
மலைச்சாமி.
"விட்டுறவா....? அன்னைக்கு... நீ என்னை விட்டது தான்டா தப்பு.
பைரவனை விட்டுருக்கணும். என்னை விட்டுருங்கன்னு
கெஞ்சி மன்றாடினா மீனாட்சிய விட்டுருக்கணும், விஷம் ஊத்தி
கொன்னுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாள்னு இராத்திரியோட இராத்திரியா சுடுகாட்டில் பெட்ரோல்
ஊத்திக் கொளுத்தி இருக்க கூடாது."
"பண்ணினது தப்புத் தான் எங்கள நம்பி பொண்டாட்டி.,
பிள்ளை குட்டிக இருக்கு."
"எத்தனை குடும்பத்த அழிச்சிருக்கீங்க... ஆங்...
மீனாட்சி உன் தங்கச்சி, உன் இரத்தம் தானடா... உன் சித்தப்பா மக... எப்படிடா கொல்ல மனசு
வந்துச்சி?"
"புத்தி இல்லாமல் பண்ணிட்டோம். இனி பண்ண
மாட்டோம்."
"புத்தியில்லயா... பேச்சியைப் படிக்க
அனுப்பிட்டு ஒவ்வொரு நாளும் பத்திரமா வீடு கொண்டு வந்து சேர்க்க, கல்யாணம் பண்ணி கரை சேர்க்க எவ்வளவு கஸ்டப்பட்டு இருப்பேன்... பைரவன்
இறந்த பிறகும் நிம்மதியா வாழ விட்டீங்களாடா... ஆங்.. பைரவனோட அம்மா அவனை நினைச்சி
உருகியே உயிரை விட்டுருச்சி."
"எவ்வளவு பணம் வேணுமினாலும் வாங்கிக்கோ பைரவன்
தங்கச்சிக்கு குடு எங்கள விட்டுரு..."
"விட்டா...? சிங்கப்பூர்ல செட்டில் ஆகி,
சும்மாவாடா இருப்பீங்க... காட்டுல, குளத்துல,
தண்டவாளத்திலனு அப்பாவி ஜீவன்களை கொன்னு குவிப்பீங்க..."
கையில் துப்பாக்கியை எடுத்து நீட்டிப்
பிடித்தான்.
"என் கடமை முடிஞ்சிருச்சி... பைரவன் எனக்கு
சொன்ன செய்தி 'தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி..
அவனுகளை முடிச்சிரு...'
'கதம்... கதம்...' போய் சேருங்க..."
'கதம்... கதம்...' போய் சேருங்க..."
தோட்டாக்கள் நால்வரின் உடம்பிலும் சீறிப் பாய்ந்து
செம்மண்ணில் பதிந்தது. சிறிது நேரத்தில் நான்கு பேரும் ஆடி அடங்கிப் போனார்கள்.
ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி இருந்த காரை
ஓட்டிக் கொண்டு வந்து நான்கு பேரின் உடலையும் காரில் தூக்கிப்போட்டு, செம்மண் ரோட்டில் ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்கில் காத்து இருந்தான். இடது
பக்கத்தில், சற்று தள்ளியிருந்த சிக்கனலில் பச்சை விளக்கு
எரிந்தது. சிறிது நேரத்தில் வலது புறத்தில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
ரயிலின் வெளிச்சம் வெகு தூரத்தில் புள்ளியாய் தெரிந்தது.
பீர் பாட்டில்களில் நிரப்பி இருந்த பெட்ரோலை
நான்கு பேர் மீதும் ஊற்றினான், காரை ஸ்டாரட்
செய்து தண்டவாளத்தின் நடுவில் நிறுத்தி பேட்ரோல் டேங்க் மூடியை திறந்து வைத்து
விட்டு பள்ளத்தில் இறங்கி கருப்பசாமி கோவிலை நோக்கி ஓடினான்.
மேட்டில் ஏறி கோவிலின் பின்புறம் நின்று திரும்பிப் பார்த்த போது...
இரயில் மோதி பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட கார் கொழுந்து விட்டு எரிந்தது. கொஞ்ச நேரத்தில் முழுவதுமாக எரிந்து முடிந்தது.
தூரத்தில் வானவேடிக்கை தொடங்கியது, பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் காபிரியேல்.
'சத்ரபதி சிவாஜி' இன்டர்நேசனல்
ஏர்போர்ட், பாரிஸ் செல்லும் 'Air France 217' விமானத்திற்கான
'Boarding' அறிவிப்பு ஒலித்தது. விசா, பாஸ்போர்ட்களை
கையில் எடுத்துக் கொண்டு, திரும்பிப் பார்த்தான், கண்ணாடிக்குப் பின்னால் கண் கலங்கியபடி அம்மா, அப்பா, அத்தை, மாமா ஜெரோம் மற்றும் யோசுவாவா
நின்றிருந்தார்கள்.
"சித்தப்பா தூக்குங்க..." என்றாள் மெர்ஸி.
"சித்தப்பா இல்ல அப்பான்னு சொல்லு..."
என்ற மேரியை இடது கையால் அணைத்துப் பிடித்து வலது கையில் மெர்ஸியைத் தூக்கிக்
கொண்டு, குடும்பத்தைப் பார்த்து கை காட்டி விட்டு Immigration
Counter நோக்கி நடந்தான்
காபிரியேல் தோளில் சாய்ந்து இருந்த மெர்ஸி
திரும்பி, எல்லோருக்கும் புன்சிரிப்புடன் 'டாட்டா' காட்டினாள்.
அறுமை
ReplyDelete