நற்றாள் தொழாரெனின்
பல வருடங்களுக்குப் பிறகு, பள்ளி நண்பன் வளவனை அந்த நிலையில் பார்த்ததில் மிகவும் பெருமையாக
இருந்தது.
ஹாக்கி விளையாட்டுக்குப் பெயர் போன கோவில்பட்டியில், ஏழரை கோடி மதிப்பில் சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில்
அகில இந்திய ஹாக்கிப் போட்டி முதல் முறையாக நடைபெறுகிறது. இந்தியாவின் தலைசிறந்த 16
அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. அமைச்சர்கள் போட்டிகளை
தொடங்கி வைத்தனர். விறுவிறுப்பாக நடந்த முதல் ஆட்டத்தில் ஒடிசா கிழக்கு கடற்கரை
அணி, சென்னை ஐ.ஓ.பி. அணியினை 2-க்கு 1
என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் கோவில்பட்டி
ஹாக்கி அகாடமி அணி, புதுச்சேரி ஹாக்கி கிளப் அணியினை
எதிர்த்து விளையாட ஆயத்தமாகி இரு அணியின் வீரக்களும் வரிசையில் நிற்க, விளையாட்டுத்துறை அமைச்சர் வீரர்களுக்குக் கை கொடுத்து வாழ்த்துக்
கூறியபடி செல்ல, அவருக்குப் பின்னால் மூன்றாவது ஆளாக வளவன்
சிரித்த முகத்தோடு கை கொடுத்தபடி சென்றான்.
வளவன் என் பால்ய நண்பன். சிறு வயதில்
அவனுக்கு ஹாக்கியில் எந்த திறமையும் கிடையாது. இத்தனைக்கும் அவன் அப்பா
தூத்துக்குடி துறைமுக ஹாக்கி அணித் தலைவர். எங்கள் ஊரின் சிறுவர் ஹாக்கி அணியின்
பயிற்சியாளர் மனோகரன் மாமாவிடம் தினமும் ஏதாவது தண்டனை வாங்குவான்.
மனோகரன் மாமா எங்கள் மாவட்டத்தில் சிறந்த
கோல் கீப்பர், இருக்கும் இடத்தில் இருந்து அந்தரத்தில்
பறந்து வலதோ அல்லது இடது புற மூலையை நோக்கி வரும் பந்தை மின்னல் வேகத்தில் தாவித்
தடுக்கும் அந்தக் காட்சியைப் பார்க்க கூட்டம் காத்துக்கிடக்கும். அவருடைய அதீத
பயிற்சியும் தண்டனையும் தான் இவனை இவ்வளவு உயர்த்தி இருக்கிறது.
பள்ளி முடிந்ததும் மைதானத்திற்கு நேரத்திற்கு
வர மாட்டான். தன் அப்பா ஒரு அணியின் தலைவர் என்று எப்போதும் பெருமையாகக் கூறுவான்.
நேராக நீண்டும் நுனியில் சிறிது வளைந்தும் இருக்கும் சீமக்கருவேல மரத்தின் கம்புகளை
கொண்டும், காலண்டர் அட்டைகளைக் காலில்
கட்டிக்கொண்டும் ஹாக்கி விளையாடும் எங்களைப் பார்த்து கிண்டல் பண்ணுவான். அவன் அப்பா
அவனுக்கு விலையுறந்த ஹாக்கி ஸ்டிக், ஷூ, பேட் , என வாங்கி கொடுத்து இருந்தார்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் அவன் விளையாட்டுப்
பள்ளியில், கோட்டாவில் சேர்ந்து கல்லூரியில் BE
பட்டப்படிப்பை முடித்து இன்று தமிழ்நாடு ஹாக்கி அணியில் வீரர்களை
தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராகவும் தமிழ்நாடு ஹாக்கி அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறான். நான் B.A எக்கனாமிக்ஸ் படித்து, விளையாட்டு கோட்டாவில் BSNL'ல கிளார்க் ஆக பணி புரிந்து வருகிறேன்.
கோவில்பட்டி ஹாக்கி அகாடமி அணி, புதுச்சேரி ஹாக்கி கிளப் அணியினை 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபின் விஐபி
கேலரியில் இருந்த வளவனை சந்தித்ததும் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்?
குடும்பம் பிள்ளைகள், வேலை பற்றி எல்லாம் விசாரித்து விட்டு கடைசியாக...
"டேய் வளவா மனோகரன் மாமா உனக்கு
சரியாத்தான்டா பயிற்சி குடுத்து இருக்காரு..."
என நான் சொல்லி முடிக்கவும் பலமாகச்
சிரித்தான்.
"மனோகரன் மாமாவா? என்னடா
மதன் சிரிப்பு காட்டுற... சின்ன வயசுல எத்தனை நாள் ஹாக்கி ஸ்டிக்க தலைக்கு மேல
ரெண்டு கையால தூக்கி பிடிச்சிட்டு கிரவுண்ட்ட சுத்தி ஓட விட்டுருக்காரு, காலுக்கு இடையில ஸ்டிக்க வச்சிகிட்டு தவளை மாதிரி குதிச்சி
கிரவுண்ட எத்தனை முறை சுத்தி இருப்பேன்..."
"அதனால என்னடா... உன்னோட ஆட்டத்தில் மனோகரன்
மாமா சாயல் அப்படியே இருக்கும், எத்தனை முறை நான் வலது
மூலையில் இருந்து பந்தை அடித்து குடுக்க இடது கையால் சும்மா கொத்தி மட்டும் விட்டு
கோல் ஆக்கி இருக்க, அது மாதிரி வலது காலை பின்புறம் வளைத்து
நிறுத்தி வலது கைய மட்டையில் இறக்கிப் பிடித்து, வலது மூலைக்கு
குறி வச்சி இடது மூலையில் கோல் அடிக்கிற உத்தியப் பார்க்கும் போது மனோகரன் மாமாவ
அப்படியே உரிச்சி உன்னை செஞ்ச மாதிரி இருக்கும்டா..."
"அதெல்லாம் என் அப்பா இரத்தத்தில்
இருந்து எனக்கு வந்தது, அவர் எப்படி பொறுப்பு ஆக முடியும்
ஆங்... நான் இப்போ தமிழ்நாடு அணிக்கு பயிற்சி குடுக்குறேன்..."
"என்னடா பேசுற அவர் இல்லைனா கோவில்பட்டி
வட்டாரம் தாண்டி நம்ம ஊரு அணி தமிழ்நாடு முழுக்க பேர் வாங்கி இருக்க முடியுமா?
அவர் மாதிரி ஆசான்களால் தானடா உன்ன மாதிரி நல்ல ஆசான்கள் உருவாகி இருக்கீங்க... கோவில்பட்டியில் சர்வதேச அளவில ஹாக்கி
மைதானம் வந்திருக்கு..."
"அட போடா... என்னை எப்போதுமே அவர்
பாராட்டினது கிடையாது... குறை தான் சொல்லுவாரு..."
"நீ அவரை புரிஞ்சிகிட்டது அவ்வளவு தான்
போ... உன் அப்பாவுக்காக எப்பவுமே உன் மேல அக்கறை அதிகம், தனக்கு
தெரிந்த கலையை, யுக்தியை எல்லாம் உனக்கு அப்படியே சொல்லி
கொடுத்து இருக்காரு..."
"சின்ன வயதில் அப்படி என்ன சொல்லி
கொடுத்து இருக்காரு... கல்லூரியில, கிளப்ல , மாநில அளவுல விளையாடி நானே கத்துகிட்ட யுக்தி தான்டா அதிகம்."
"டேய் அப்ப நீ கொஞ்ச வருசம் முன்ன
தமிழ்நாடு அணியில் விளையாடிட்டு இருக்கும் போது நம்ம ஊரில் தைப் பொங்கல்
விளையாட்டுப் போட்டியில் நடந்த ஹாக்கி போட்டியில் ஒரு கோல் ஆவது உன்னால, என்னால அவரை எதிர்த்து அடிக்க முடிந்ததா சொல்லு..."
"இப்ப என்னடா... ஒரு வாரம் அம்மா வீட்ல
தான் இருப்பேன், என்னைக்குன்னு சொல்லு போட்டி வச்சுப்போம்,
நீ வேணுமினா அவர் அணியில விளையாடு..."
"என்னடா பேசுற...?"
"உண்மையாவே தான் சொல்லுறேன்..
என்னைக்குனு சொல்லு வரேன்."
"ம்ம்ம்... சரிடா எதுக்கு தள்ளிப்
போட்டுகிட்டு சாயங்காலம் நம்ம ஊரு மைதானத்துக்கு வா... வரும் போது உன் மனைவி,
மகனை கூப்பிட்டு வா..."
"எத்தனை மணிக்கு வர...?"
" ஐந்து மணிக்கு வா... கலையைக் கத்துக்
கொடுத்த 'ஆசானுக்கும் மாணவனுக்கும்' போட்டி
வச்சிக்கிடலாம்."
மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி
அவர்களின் குடும்பத்தாரும் கருவேல மரத்தின்
அடியில் நின்று கொண்டும், சைக்கிள், பைக்கின் மீது அமர்ந்து கொண்டும், கோவில்பட்டியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளத் தம் பிள்ளைகள்,
அண்ணன் , தம்பிகள் பயிற்சியில் ஈடுபடுவதைக்
காண கூடி இருந்தனர்.
இனோவா காரில் இருந்து இறங்கி வந்தான் வளவன், பின்னால் அவன் மனைவி மற்றும் ஐந்து வயது மகன் 'கவின்'
இறங்கி வந்தனர்.
எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டு ஆவலாய் நலம்
விசாரித்து தென்னங்கீற்று பந்தலுக்கு கூட்டி வந்தனர். மனோகரன் மாமாவுக்க்குப்
பக்கத்தில் அமர்ந்து இருந்த நான், வளவனின் மகன் கவினை கையில்
பிடித்து மடியில் அமர்த்திக் கொண்டேன். மனோகரன் மாமா கண்கள் விரிய எழுந்து
வளவனையும் அவன் மனைவியையும் வரவேற்று அருகில் அமர்த்தி நலம் விசாரித்தவரிடம்,
ஒரு சில வார்த்தைகளில் பதில் அளித்துவிட்டு உடை மாற்றி, விளையாட ஆயத்தமானான் வளவன்.
நான் தயாராகாமல் கவின் உடன் பேசிக்கொண்டு
இருந்ததைப் பார்த்து "நீ விளையாட வரலையா?" என கேட்டவனுக்கு "உன் ஆட்டத்தைப் பார்த்து ரொம்ப வருசம் ஆகுது நீ
விளையாடு... கொஞ்ச நேரத்தில் உன் எதிர் அணி கோல் கீப்பர ரெடி பண்ணி கூப்பிட்டு
வாரேன் உன் திறமையைக் காட்டு" என்று கூறினேன். வளவன் சிரித்து விட்டு சென்று
விட்டான்.
மைதானத்தின் ஓரத்தில் உடற்பயிற்சியில்
ஈடுபட்டு இருந்தவர்கள், இரண்டு அணிகளாகப் பிரிந்து
மைதானத்தில் இறங்கும் முன் பந்தலுக்கு வெளியே நின்று இருந்த மனோகரன் மாமாவுக்கு
முன்னால் வந்து குனிந்து வணங்கி மண் தொட்டு நெற்றியில் வைத்து விட்டு, மைதானத்தின் ஓரத்தில் போடப்பட்டிருந்த சுண்ணாம்புக் கோட்டைத் தொட்டு
வணங்கி விட்டு மைதானத்திற்குள் ஓடினர்.
வளவனின் மகன் கவினை கையில் பிடித்துக்கொண்டு
நான் மைதானத்திற்குள் வருவதை, வளவனும், மைதானத்தில் இருந்த எல்லா வீரர்களும், ஒன்றும்
புரியாமல் பார்க்க, மனோகருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
"நீங்க இங்கயே இருங்க மாமா" என்று நான் சொல்லியிருந்ததால் செய்வதறியாது
நின்றிருந்தார்.
கோல் போஸ்ட் அருகில் வந்ததும் எல்லோரையும்
நோக்கி "ஆசானுக்கும் மாணவனுக்கும் போட்டி நடக்கப் போகுது... கொஞ்சம் ஒதுங்கி
நில்லுங்க" எனச் சொல்லி விட்டு வளவனைக் கூப்பிட்டு "வா வந்து பெனால்டி
சூட் பண்ணு" என்றேன்.
கோல் போஸ்டின் நடுவில் கையில் சிறியளவிலான 'நீண்டு நுனியில் வளைந்து இருந்த கருவேலமரக் கம்பு, காலில்
காலண்டர் அட்டையைக் கட்டிக் கொண்டு, கோலைத் தடுக்க ஆயத்தமாக இரு கைகளையும் விரித்துப் பிடித்து உடலை முன் பக்கம் சிறிது வளைத்து குனிந்து கண்களை கூர்மையாக்கி நின்றிருந்தான் கவின்.
வளவன், என்னை நோக்கி "என்னடா இது?" என்று
கோவத்தில் கத்த...
சாந்தமாக பதில் கூறினேன்.
"ஆசானுக்கும்
மாணவனுக்கும் இடையே தான போட்டின்னு சொன்னேன், எதிரில் நிற்பது வேறு யாரும் இல்லை அந்த மாணவன் தான் நீ, உன் இடத்தில் நிற்கிறது மானோகர் மாமா, அதுவும் கவின் உன் ரத்தம் போ... போய் கோல் போடு... கவின் மாதிரி தான் நீயும், நானும், நம்ம ஊரூல இருக்குற மத்த எல்லோரும் இந்த கிரவுண்ட்க்கு ஒண்ணும் தெரியாம தான வந்தோம், அரசாங்க வேலை, நல்ல பேரு புகழ் எல்லாம் இந்த கிரவுண்ட்ல இருந்து வந்ததுடா... மேல வந்த ஏணிய... ப்ச்... அடப் போடா...
கண்ணில் நீர் வடிய, கவினைக் கட்டி அனைத்து தூக்கிக் கொண்டு மைதானத்திற்கு வெளியில் கழுத்தில்
விசிலோடு நின்று கொண்டிருந்த மனோகர் மாமாவின் காலடியில் ஹாக்கி மட்டையை வைத்து வணங்கி
விட்டு "என்னை மன்னிச்சிடுங்க மாமா... எனக்கு எல்லாம் தெரியும்னு மமதை கண்ணை
மறைச்சிட்டு, எல்லாம் கத்து கிட்டேன்னு கர்வத்தில் மதன்
கிட்ட உங்களை போட்டிக்கு அழைத்தது தப்பு தான் என்னை மன்னிச்சிருங்க..." என
கண் கலங்கினான். மனோகர் மாமா வளவனைக் கட்டித் தழுவி கண்ணீரைத் துடைத்து விட,
பார்த்துக் கொண்டிருந்த என் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்
வழிந்தோடியது.
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்."
(அதிகாரம் 1: கடவுள்
வாழ்த்து, குறள்-2)
பொருள் :
தன்னைவிட
அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்புஇல்லாவிடில் என்னதான்
ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
அ.வளர்மதி
அருமையான கோர்வை.. நல்ல முடிவு.. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்கீங்க..ஆனா அந்த ஹாக்கி விளையாட்டு நுணுக்கங்கள் சொல்றப்போ தமிழில் எழுத்தவேண்டிய கட்டாயம் என்ன???
ReplyDelete-shammu