Friday, 12 October 2018

தரம் நிரந்தரம்

தரம் நிரந்தரம்

மேலத்தெரு முனையில் இருந்த நைனா டீக்கடையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்து இருந்ததால் வழக்கத்துக்கு அதிகமா கூட்டம் இருந்தது. கடையைத் தாண்டி தண்ணி குழாயைக் கடக்கும் போதே கற்பகத்தின் புலம்பல் சத்தம் கேட்டது. மோகன் முகம் வீட்டின் முன் தெரிந்ததுமே ஆரம்பித்து விட்டாள்...

"ஒண்ணா மண்ணா தான பள்ளியோடம் போனிய இப்ப, இவன் மட்டும் பெயிலா போட்டானே... " 

"இப்ப என்னமா... அமுதன மறுபடி பெயிலான பாடத்தை எழுத சொல்லுங்க..." என்றான் மோகன்.

"ஆமாடா... கணக்குப் பேப்பர் மறுபடி எழுதணும். எந்த டூயூட்டோரியல்ல சேரலாம் மாப்ள...?" என்று கேட்டான் அமுதன்.

"கோவில்பட்டியில் ரெண்டு இருக்கே... ஒண்ணு 'சரஸ்வதி டுயூட்ரோரியல்கிளாஸ் நேரம் அதிகம். வைக்கிற டெஸ்ட்ல பாஸ் ஆனா தான் 'ஹால் டிக்கட்' கூட கொடுப்பாங்க... டெய்லி டெஸ்ட், ஹோம் ஒர்க் இப்படி நல்லா சொல்லித்தருவாங்க... நல்ல வாத்தியார்கள் பயிற்சி தரமா இருக்கும் " என்றான் மோகன்.
 
"ஞே... அட ஏன்டா மாப்ள நீ வேற... அது நமக்கு செட் ஆகாது..."

"ஏன்டா இப்படி... இன்னொன்னு 'சேலஞ் டூயூட்டோரியல்' பேருக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல, பாஸ் மார்க் எடுக்க சொல்லிக் குடுபாங்ககிளாஸ் காலையில் ரெண்டு மணி நேரம் தான்."

"சேலஞ்லையே சேருரேன்.... எப்படியாவது பாஸ் ஆகி, +1'ல சேர்ந்தா போதும்டா..."

"ம்ம்ம்....யோசிச்சி முடிவு பண்ணு... ஸ்கூல்லயே ஒழுங்கா படிச்சி இருக்கலாம், இப்ப இங்கயும் சரியா படிக்காம பாஸ் மார்க்குக்கு மட்டும் படிச்சயினா +1, +2'ல எப்படி படிச்சி பாஸ் ஆவ..?"

"அட ஏன்டா... ரிசல்ட் வந்த நாள்ல இருந்து அம்மா தெனைக்கும் என்ன கண்ணுல பாக்கும் போதெல்லாம் கண்ண கசக்குது, அப்பா பேசுறதேயில்ல செப்டம்பர்ல எழுதி பாஸ் ஆகி காட்டணும்டா."

"சரிடா நல்லாப் படி, ஒண்ணாப்புல இருந்து ஒண்ணாப் படிச்சி இப்ப நீ இல்லாமல் தனியா போறத நினைச்சா வெசனமா இருக்கு."

சேலஞ் டுயூட்டோரியலில் சேர்ந்து விட்டான் அமுதன்.

முந்தைய ஆண்டுகளின் இறுதித் தேர்வில் வந்த கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லிக்கொடுத்தார் ஆசிரியர். "இந்த கேள்வித் தாள்களில் இருந்து தான் மாறி மாறி கேட்பாங்க, இந்த கணக்குகளை போட்டு பார்த்தாலே போதும், 60 மார்க் இதில இருந்து தான் வரும், 35 மார்க் எடுப்பது ரொம்ப ஈஸி" என்று கணக்கு ஆசிரியர் சொன்னதும் அமுதனுக்கு மகிழ்ச்சி.

ஆசிரியர் சொல்லிக் கொடுத்த கணக்குகளை நோட்டில் எழுதிக் கொண்டு '60 மார்க்குக்கு எழுதினாலே போதும் 35 மார்க் ஈஸியா வரும்' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு சிரித்தான் அமுதன்.

அமுதனின் அம்மா அழுது ஒப்பாரி வைத்தாள்.

"பள்ளியோடத்துல பத்து வருசம் பொதி மூட்டை தூக்கி சுமந்தும் பேப்பர்ல நம்பரு வரல.. ஒத்த நோட்ட தூக்கிட்டு போயிட்டு ஒண்ணரை மணி நேரத்தில திரும்பி வரும் போதே என் புத்திக்கு ஒரைச்சதே இவன் இப்பவும் பரிட்சைல தேர மாட்டான்னு..."

"இப்ப ஏன் அழுது ஊர கூட்டுறவ... பெரிய பரீட்சை முன்னக்கட்டி அம்ம போட்டதால அவன் பெயிலா போட்டான் விடு கழுதய... இந்த முறையாவது ஒழுங்கா படிச்சிருக்கணும்... விடு, நீ மருக்கா படிச்சி மார்ச்ல எழுதுடா" என்று அப்பா சொன்னதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

"சரிப்பா..."

கட்டிலில் கூட அமர்ந்து இருந்த மோகனிடம் "தப்பு பண்ணிட்டேன்டா... அம்மா, அப்பாவுக்கு வீணா மனக் கஷ்டம், நேரமும் வீணாகிட்டு..."

"விடுடா இப்ப ஏன் மனசை போட்டு கொழப்புற? முன்னாடியே அனுபவம், திறமை உள்ளவங்க கிட்ட கத்து இருக்கணும். இப்ப பொலம்பி என்ன ஆக போகுது..."என்றான் மோகன்.

"மறுபடியும் சரஸ்வதி டுயூட்டோரியல்ல சேர்ந்து பாஸ் ஆகுறது மட்டும்மில்ல நல்ல மார்க் எடுத்து தான் +1'ல சேருவேன்" என்றான் அமுதன்.
  •  

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."
(அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து , குறள் - 8)  

பொருள்:
அறக்கடலாக விளங்கும் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி,
மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான
காரியமல்ல.


அ.வளர்மதி

1 comment:

  1. நல்லவர்களை தொடரந்தால் நல்லதே நடக்கும்.. உண்மை தான்! ஆனால் சிக்கலே அந்த நல்லவர்களைக் கண்டுபிடிப்பதில் தான்! :)

    ReplyDelete

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...