மழை நீர்
அது ஒரு ஞாயிறு காலை அதிகாலையில் பெய்த
மழையின் மிச்சமாய் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது.
நனைந்து இருந்த செய்தித்தாளை புரட்டிக் குடும்ப மலருக்கு அடியில் நனையாமல் இருந்த
அம்மாதத்தின் தோழி புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.
"வளரு... ஏ வளரே..."
வெளியில் இருந்து அம்மாவின் குரல்.
சோபாவில் இருந்தபடியே தலைய
மட்டும் கதவுக்கு வெளிய நீட்டி "என்னம்மா" என்றேன், சீலையை தலைக்கு மூடி மழையில் நனைந்தபடி அம்மா நின்றுகொண்டு இருந்தாங்க, எனக்கு கோபம்
தலைக்கேற...
"யம்மா உள்ளாரவா எதுக்கு இப்படி நனைஞ்சிட்டு இருக்க" என ஏச தொடங்கினேன்.
"ஏட்டி
ஏசாதட்டி நல்ல தண்ணி திறந்து விட்டுருக்கான்
அடுப்படியில இருக்க உப்பு தண்ணி குடத்த தூக்கி சில்வர் அண்டாவுல ஊத்திட்டு வெரசா
குடத்த குடுடி வரிசை வந்துரும்."
நான் திட்டியதை அம்மா காதில் வாங்கவில்லை..
"நான்
சொல்லி நீங்க என்னைக்கு கேட்டீங்க" என முனங்கியபடி அடுப்படிக்கு விரைந்தேன்.
இரப்பர்
குடங்களில் உள்ள தண்ணீரை அண்டாவுக்கு மாற்றிவிட்டு ஜன்னலில் கிடந்த துண்டையும்
கையில் எடுத்து கொண்டு வாசலுக்கு நடந்தேன், வெளியில் கண்ட காட்சி மறுபடியும்
கோபத்தை தூண்டியது தாழ்வாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மீது போர்வைய போர்த்திக்
கொண்டு இருந்தாங்க,
"யம்மா அது கெடக்கட்டும் முதல்ல தலைய துவட்டு... பிடி" என துண்டை
கையில் திணித்து விட்டு வண்டியை தாழ்வாரத்தில் சற்று உள்ளே தள்ளி நிறுத்த
ஆயத்தமானானேன்.
"ஏபுள... இந்த மழைல அதோட எதுக்கு
மல்லுக்கட்டுறவ விடு நனையாத உள்ள போ..." என கூறி துண்டை என் கையில தந்துவிட்டு இரண்டு காலி குடங்களை கையில்
எடுத்துக்கொண்டு தண்ணி குழாய் நோக்கி நடக்க ஆரம்பிச்சிடாங்க.
வீட்டினுள் வந்து மறுபடி தோழியை
புரட்ட ஆரம்பித்தேன் மனது லயிக்கவில்லை, வாசலை பார்த்தபடி அமர்ந்து விட்டேன் கால்
மணி நேரம் கழிந்த பிறகு தலையில் ஒரு குடமும் இடுப்பில் சிறிய குடம் ஒன்றையும்
சுமந்து அம்மா வருவதை பார்த்து கோபமாக வாசலை நோக்கி எழுந்து போனேன். நான்
வருவதை பார்த்ததுமே..
"யேய் இரு.. இரு" எனச் சொல்லி வேகமாக நடை போட்டு என்கிட்ட
வந்துட்டாங்க. மேல் படியில் நின்ற நான் அம்மாவின் இடுப்பில் இருந்த குடத்தை இறக்கி
கீழே வைத்துவிட்டு, தலையில் உள்ள குடத்தை
வாங்கி என் இடுப்பில் வைத்தபடியே கீழே ‘A’ என்று வெள்ளை பெயின்டால் எழுதப்
பட்டிருந்த சிறிய குடத்தை பார்த்து...
"இந்த
சின்ன கொடம் யாருதுமா...?" என கேட்டேன்.
"கொடத்த இடுப்புல வச்சிட்டு நிக்காத
எறகிட்டுவா". எனச் சொல்லி தலைய துவட்ட ஆரம்பிச்சிட்டாங்க. வெளியே தூறல் நின்று
விட்டது.
அடுப்புத் திண்டில் குடத்தை இறக்கி
வைத்துவிட்டு, வராண்டாவிற்கு வந்து...
"யம்மா.. இந்த கொடத்த எறக்கி வைக்கவா எதுலையும்
ஊத்தவாமா...?" எனச் சத்தமா கேட்கவும்,
"இருட்டீ பித்தள அண்டால ஊத்தணும்" என அம்மாவின் குரல் கேட்டு சத்தம் வந்த உள்
அறைக்கு போனேன். பிளாஸ்டிக் சேர் மீது ஏறி பரணில் பித்தளைப் பாத்திரங்கள் அடுக்கி
இருந்த மேற்கு மூலைய அம்மா ஒதுக்கிகிட்டு இருந்தாங்க.
என்னை பார்த்ததும் இங்கவா... எனக் கூறுவது
போல தலையாட்டவும் அருகில் சென்றேன். தூசி படிந்து இருந்த அண்டாவை இறக்கி கனமா
இருக்கும் பாத்துப் பிடி எனச் சொல்லி என்கிட்ட
கொடுத்தவுடன் ஒரு நொடி தடுமாறிட்டேன்
உயரத்திலும் எடையிலும் என்னில் பாதி இருந்தது.
"என்னம்மா இம்புட்டு கனங்கனக்குது" எனக் கேட்டதுக்கு...
"பின்ன இருக்காதா என் தம்பி
குடுத்த சீர் டீ..."
"அதெல்லாம் சரிதாம்மா அந்த சின்ன குடம் யாரோடது அத சொல்லு..."
"சொல்லுறேன்டி அந்த குடத்த தூக்கி இந்த அண்டால ஊத்து’, அடுப்படி
வாசல் அருகில் வரண்டாவில் அண்டாவை வைத்து தண்ணியை ஊற்றிவிட்டு அம்மாவிடம் வந்து
அமர்ந்து கொண்டேன்.
"சொல்லுமா" என நான் ஆரம்பம்பிச்சதும்...
"நானும் பாக்குறேன் அப்ப
பிடிச்சி தொன தொனனு அனத்திகிட்டு இருக்க உனக்கு பதில் சொல்லிட்டு இருந்தா வரிசை
வந்துரும்டி" என அம்மா சொல்லி முடிக்கும் முன்,
"ம்கும்... வருச வர்றதுகுள்ள ‘டாப் டென்னே’ முடிஞ்சிரும்மா..." அம்மா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
"எதுத்த வீட்டுக்கு புதுசா
வாடகைக்கு குடி வந்து இருக்கிற ஆனந்தி கொடம்டி அது..."
"ஓ அந்த எஸ்டேட்கார அக்காவா..."
"ஆமா அந்தப் புள்ள
மாசமா இருக்கான்னு அவ வீட்டுக்காரன் சிறுசா வாங்கி குடுத்து இருக்கான், அது 12லிட்டரு தான்டி
பிடிக்கும் ஒரு வீட்டுக்கு நாலு வருச வரதே பெருசு அந்த தண்ணிய வச்சி என்ன
செய்வான்னு தான் நம்ம பெரிய குடத்த அவா வீட்டு வாசல்ல இறக்கி வச்சிட்டு அவளோடத
எடுத்துட்டு வந்தேன். நாம மோட்டரு போட்டுகிடுவோம் அவா தண்ணி பத்தலைனா அடிபம்புல
தான அடிக்கணும் பாவம்" என சொல்லி முடிக்கவும் அம்மாவின் முகம் வாட
தொடங்கியது.
"இப்ப முக்கு குழாயில தண்ணி வருதாமா..."
"வருது போன
வாரம்தான் சரி பண்ணினாங்க.. அதுக்கும் அந்த செல்வி வீட்டுக்கு நடையா நடந்து
இருக்கு..."
"யாரும்மா செல்வி"
"பஞ்சாயத்து தலைவிடி..."
"ஓ.. “செல்வி சங்கரா"
"ஆமா அவ
வீட்டுக்காரந்தான் தலைவர் மாதிரி, செல்வின்னு கையெழுத்துக் கூட போட மாட்டா ரப்பர்
ஸ்டாம்புதான்" கேட்டதும் சிரித்து விட்டேன்.
"அடுப்புல கப்ப அவிச்சி வச்சிருக்கேன்
எடுத்துட்டு வா..." என சொல்லவும், 'ஐய்' எனக் கூவி சிறுபிள்ளையாய் மாறி எழுந்து போனேன்.சூடான
‘கப்ப கிழங்கை’ பாத்திரத்தில் எடுத்து கொண்டு கூடவே கருவாட்டு ஊறுகாயையும் கையில்
பிடித்து வருவதை பார்த்ததும்..
"ஏட்டி நீ எம்புட்டு சொன்னாலும் கப்பய ஊறுகாய்ல தொட்டு சாப்பிடுறதை விட மாட்ட..." என பொய்யாய் கோவித்துக் கொண்டாள் அம்மா. வானம்
மறுபடி இடி இடிக்க ஆரம்பித்தது.
"மழை வரப் போகுது டீவி போட்டுகிட்டு இருக்காத அடி ஆகிடும், நானு கொளம்ப
கூட்டி வச்சிட்டு வாரேன் அது வர கப்பைய ஊறுகாயில தொட்டுத் தின்னு.. கூட்டு மாதிரி ஊறுகாய அள்ளித் திண்ணுறாத..." என சொல்லிவிட்டு ஈயச் சட்டியையும், குத்துப் பானையையும் எடுத்து வாசல்
அருகில் வைத்து விட்டு சமையல் அறையில் நுழைந்தாள் அம்மா.
‘டாப் டென்’ பார்க்காம
நடு அறையில நமக்கு என்ன வேலை நானும் பின்னாலே சென்று
அடுப்பு பக்கத்தில் இருந்த திண்டில் ஏறி அமர்ந்து கப்பையை ருசிக்க ஆரம்பித்தேன்.
"இங்க என்னடி பண்ணுறவ..." என அம்மா கரண்டியை ஓங்கவும்.. "யம்மோய் உனக்கு ஒத்தாசை
பண்ணதான் வந்தேன்." எனச் சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.
"உன்னப் பத்தி எனக்குத் தெரியாதாக்கும்... தேங்காய் சில்லு திங்கத்தான வந்த... 'கெவினும்','மௌனிகா'வும் காலையிலையே வந்து அரச் சில்ல
காலி பண்ணிட்டாங்க இருக்குறதையும் திண்ணுப்புடாத..." எனவும் எனக்கு கோவம் வந்து
விட்டது.
"ஓஹோ பேரன் பேத்தினா ஏச மாட்டீங்க! ம்ம்ம்...,"
"ஆமாட்டி நான் தான் இப்போ அதுகளத் தூக்கிக் கொஞ்சிட்டு இருக்கனாக்கும் பேசாமயிரு சொல்லிப்புட்டேன்." என அம்மா சொல்லி
முடிக்கவும் அக்கா மகன் கெவின் "ஆச்சி தண்ணி பிடிக்க வருவீங்கலாம் அம்மா
கூப்பிடாங்க..." என சொல்லி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
"அம்மாச்சி வரிசைய உங்க அம்மாவ பிடிக்கச் சொல்லுடா..." என அம்மா சொல்லவும் என் தட்டில்
இருந்து இரண்டு துண்டு கப்பக் கிழங்கை எடுத்துக்கொண்டு வந்த வேகத்துலையே திரும்பி ஓடிட்டான். அம்மா அதை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளவேயில்லை.
"ஏம்மா ரெண்டாவது வரிசை தண்ணி பிடிக்கலையா நான் வேணும்னா பிடிச்சிட்டு வரட்டாமா?" என நான் கேட்டதற்கு..
"எதுக்கு
சூரியன் கிழக்க உதிக்கிறது உனக்கு பிடிக்கலையா பேசாட்டிருனு’.. சொல்லுவாங்கன்னு
நினைச்சி கூட பாக்கல.
"நம்ம ரெண்டு பேருக்கு நாலு கொடம் நல்ல தண்ணி போதும்டி.. முன்ன உங்க அப்பா
இருக்கும் போது ரெண்டு கிலோ மீட்டரு சைக்கிள்ல போய் ‘மாடசாமி கோவில்’ பம்புல
வரிசைல நின்னு தண்ணி எடுத்துட்டு வருவாரு... இப்போ வாரத்துல ரெண்டு நாளு நல்ல தண்ணி
விடுறான் நமக்கு போதும்" அம்மா
சொன்னவுடன் எங்களோட கிராமத்து வீட்ல இருந்த அடி பம்பு ஞாபகம் வந்தது.
அப்போது எனக்கு 5’வயசு இருக்கும்
போர்வெல் லாரிய அவ்வளவு பக்கத்தில் பார்த்ததில் அளவில்லா சந்தோசம்.வீட்டின்
முற்றத்தில் கூடி இருந்த சிறுவர்,பெரியவர் கூட்டத்தை பார்த்ததும் பெருமையும் கூடச்
சேர்ந்து கொண்டது.
நீரோட்டம் பார்க்க வந்த பொன்னையா தாத்தா
கையில் தேங்காயை படுக்க வசத்தில் வைத்து கொண்டு கொய்யா, நெல்லி, பப்பாளி,மாதுளை
மரங்களை சுற்றி நடந்துகிட்டு இருக்கும் போது வடக்கு மூலைல இருந்த கொய்யா மரத்த
தாண்டி நாலு அடி வச்சதும் தேங்காய்
‘சட்டென.. எழுந்து நிற்கவும்’ பயத்தில் நான் அலறி விட்டேன், இப்போ நினைத்து
பார்த்தாலும் பயமாயிருக்கு.
.அந்த இடத்தில் பொன்னையா தாத்தா வட்டம் போட்டு
கொடுத்தார்.அங்க போர்போட்டதுல அறுபது அடி ஆழத்தில் தண்ணி வந்தது.தண்ணி நல்ல
சுவையாக இருந்தது.
எப்போதும் யாராவது எங்க வீட்டு அடி பம்புல தண்ணி எடுக்க வந்து கொண்டு இருப்பாங்க.
அம்மா எனக்குச் சிறிய பச்சைக் குடம் வாங்கிக் குடுத்து இருந்தாங்க.. காலை
எக்கி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஒரு முறை தொங்கினாலே போதும் குடம் நிரம்பி தண்ணி கீழே வழிந்து வாய்க்கால்
வழியா செடிகளுக்கு தண்ணி போகும். கிராமத்தை விட்டு வந்ததும் அந்த வீட்டை வாடகைக்கு
விட்டு விட்டோம். இப்போது அந்த ‘அடி பம்பு’ இருந்த இடம் கூட தெரியவில்லை மோட்டார்
போட்டதால தரையோடு தரையாக ஆகிவிட்டது மேலே மூடப்பட்டிருக்கும் கருப்பு கடப்பா
கல்லுதான் இப்போது அடையாளம் ."வெய்யகாலத்துல... 750லிட்டரு டேங்கு நிறைய ஒன்னேகால்
மணிநேரம் ஆகுதுக்கா" என அந்தோணி மாமா வாடகை குடுக்க வரும்போது சொன்னது ஞாபகம்
இருக்கு. இப்ப இருக்கிற வீட்ல போர்போட்டபோது 230அடியில தண்ணி வந்தது,500 லிட்டர் நிறைய
ஐம்பது நிமிடம் ஆகுது.
மசாலா வாசனையும், பிரிட்ஜ்ல மீனு இருக்கு எடுத்துட்டு வாங்கிற அம்மாவோட
குரலும் பழைய நினைவுகளை களைத்தது. நவர மீனை எடுத்து வந்து அம்மாவிடம்
குடுத்துவிட்டு திண்டில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஏம்மா மாடன்கோவில் பம்பில் இப்போ
தண்ணி வருதாம என கேட்டு விட்டு பதிலுக்கு அம்மாவின் முகத்தை பார்த்துகிட்டு
இருந்தேன். ‘அதுல இப்போ முன்னமாதிரி தண்ணி சுவையாவும் இல்ல தண்ணியும்
கம்மியாகிட்டு அதுவுமில்லாம கோவில சுற்றி கோட்டை சுவரு வேற கட்டிட்டாங்க அதனால
அவ்வளவா இப்போ யாரும் அங்க போறதில்ல.. அந்த கோவில சுத்தி கம்மாயில நாலைஞ்சு
போர்போட்டுதான் நம்மூருக்கும் வடக்கூரு தண்ணி தொட்டிக்கும் தண்ணி வருதுன்னு
சொன்னாங்க.
நாலைஞ்சு போர்போட்டும் ஏன் வீட்டுக்கு 8 கொடம் தண்ணி மட்டும்தான் கிடைக்குன்னு
யோசிசிட்டு இருக்கும் போது என் முகத்த பார்த்து என்ன ரோசனை பலமாயிருக்குனு அம்மா
கேட்டாங்க.. சந்தேகத்த கேட்டதும்.."கண்மாயில தண்ணி இருந்தாதான போர்ல தண்ணி வரும்,
கண்மாயில் தண்ணி நிறைஞ்சு வருஷ கணக்கா ஆச்சிது.. இப்போல்லாம் மடைல தண்ணி கொஞ்ச
நாள் தான் நிக்குதுடி".. எனக்கு அம்மா சொன்னது புரியல..
,"ஏன்மா அவ்வளவு
சீக்கிரமாவா தண்ணி எல்லாம் தீர்ந்துடும்.?"
."தண்ணி எல்லாம் மண்ணு எடுக்க
தோண்டுன கிடங்குலதான்டி நிக்கும் அதையும்
இந்த ‘சீமை கருவேலமரம்’ உறிஞ்சி குடிச்சிரும் பெறகு எங்குட்டு நமக்கு தண்ணி வரும்.
ஊருக்குள்ள தண்ணி தங்குறதுக்கு எங்க இடம் இருக்கு.. சிமெண்ட் ரோடு, சிமெண்டு
வாய்க்காலுனு போட்டுடாங்க.. போதா குறைக்கு வீட்டு முற்றமும் சிமெண்டுல போட்டாக்க
எப்படி தண்ணி நிக்கும்!" சொல்லிட்டு ஆசுவாசப் படுத்திக்கிட்டாங்க.
எங்க வீட்டு ‘மண் முற்றம்’ அப்போதுதான் ஞாபகம் வந்தது. போர்டிகோ இல்லை
இரண்டு டூவீலர் நிற்கிற அளவுக்கு வீட்டு முன் சின்ன செட் மட்டும்தான் மீதி
இடங்களில் செடிகளும் மரங்களும் தான் இருந்தது. எவ்வளவோ முறை என்னோட தாய்மாமா
போர்ட்டிகோ கட்டி தலத்தில் கிரானைட் போட சொல்லியும் அப்பா உயிரோட இருந்தவரை
அதற்க்கு ஒத்துக் கொள்ளவில்லை. எப்போதும் தோட்டத்து செடிகளை பராமரிப்பதிலும்
கோழிகளுக்கு உணவிடுவதிலுமே நேரத்தை போக்குவார்.
அப்பா இறந்த பின் கிராமத்தை விட்டு
வந்து விட்டோம்.எங்களோட வயல்காட்ட சித்தப்பாவால
சரியா கவனிக்க முடியல தெக்காட்டுல ‘சீமை கருவேலமரம்’ முளைசிட்டு.. அம்மா ஊர்ல
இருந்த தங்கராசு மாமாகிட்ட...
"
கிணத்துல தண்ணி குறைஞ்சிடும் விடும் ராசு.. மரத்த
வெட்டி வேர தோண்டி நிலத்த சரி பண்ணி குடு"ன்னு சொன்னாங்க.. மரத்த வெட்டி 10000ரூபாய்க்கு
வித்ததும் இல்லாம வெட்டுகூலிக்கு சரியாகிட்டு இனி வேரைத் தோண்டி எடுக்கனும்னா கூடுதலா 5000 ரூபா வேணும்னு
சொன்னாரு.. அம்மா மறு பேச்சு பேசாம பணத்த குடுத்துட்டாங்க.. தாய்மாமா ரெண்டு
பேரும் ஏசுனதுக்கு..
"போனா போட்டும்டா.. அந்த பணத்த வச்சி என்னத்த அள்ளிக்கிட்டு
போக போறான் விடு நமக்கு நிலம் சுத்தமான போதும்" என
சொன்னாங்க.. ரெண்டு மாமாவும்
அதுக்கு அப்புறம் அத பத்தி எதும் பேசவில்லை.
எதுவும் பேசாம கப்பை கிழங்கையும் சாப்பிடாம நான் இருந்ததை பார்த்து விட்டு...
"போயி கையகழுவு.. உனக்கு மீனு வாசம் வந்த பிறகு கப்ப எப்படி இறங்கும்,
செத்த நேரத்துல குளம்பு ரெடியாகிடும் சாப்பிடு."
நான் அப்புறம்
சாப்பிட்டுகிடுறேன்னு சொன்னத சில நொடிகள் ஆச்சரியமா பார்த்து விட்டு.. சமையல் வேலைல
மும்முரமா ஆகிட்டாங்க. எனக்கு மனசுல ஏனோ
சின்ன இறுக்கம் எதனால் என்று காரணம் சொல்ல தெரியல. கை கழுவ தொடங்கினேன். வெளியே
இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
வாசலில் இருந்த ஈயச் சட்டியையும், குதுப் பானையையும் கையில் எடுத்துக்
கொண்டு வெளியில் ஓடிப் போய் மாடியில் இருந்து வலிந்தோடி வந்த மழை நீரை நனைந்தபடி ஆசையாய் பானைகளில் சேகரித்து வீட்டினுள்
பாத்திரங்களில் ஊற்ற ஆரம்பித்தேன். கால் மணி நேரத்தில் முக்கால்வாசி பெரிய
பாத்திரங்கள் நிறைந்து விட்டது.
"ஏட்டி இப்படி எல்லாப் பாத்திரத்துலையும் தண்ணி
ஊத்தி பலசாக்கிட்டா புருசன் வீட்டுக்கு வாழப் போகும் போது எதக் கொண்டு போவியாம்"
"ம்கும்... அவங்க வீட்ட்ல பாத்திரமே இருக்காதாக்கும்.?"
“அப்படினா
‘வாஷிங் மிஷின்’ நாலு குடம் பிடிக்கும் அதுலயும் பிடிச்சி ஊத்தி வைடி."
குடத்தை கையில் எடுத்துக் கொண்டு குஷியாக மழையில் இறங்கி.. நடக்க
தொடங்கினேன், இந்த முறை அம்மா ஏசவில்லை மாறாக..
“ஏட்டி நீயெல்லாம் இப்படி தண்ணி பிடிக்க
ஆரம்பிச்சா பெய்யாத மழை எல்லாம் ஒரே நாளில் பெய்து பெருவெள்ளம் வரப் போகுதுட்டி..." சொல்லிட்டு சிரிக்கவும் நானும் அம்மா கூடச் சேர்ந்து சிரித்துக் கொண்டே மழை நீரைக் கைகளில் பிடித்து விளையாட...
வானத்தில் தோன்றியது
வண்ணமிகு வானவில்.
அ.வளர்மதி
அருமையான...பதிவு....
ReplyDelete