Saturday, 9 February 2019

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமியைத் தலையாரி தங்கராசு ஆர்வமாக வரவேற்றார்.

"ஏ... வேலு வாப்பா வாப்பா... என்ன இந்தப்பக்குட்டு தப்புனாப்ல வந்து இருக்க? என்ன சேதி?"

"அன்னைக்கே சொல்லி இருந்தேன்ல மேட்டுத்தெருல அனந்தம்மா நெலத்த வாங்க போறதா... அதான் இன்னைக்கு சர்வேயர் வர்றாப்ல நீங்களும் ஒரு எட்டு கூட வந்தா நல்லா இருக்கும்."

"அட... ஆமால, ஊர் கடைசியில இருக்குற அந்த 'ஆன கெடங்கு'  நெலந்தான... பல சோலில மறந்துட்டேன்பா... அனந்தம்மா கூட புள்ளயோட கல்யாணம் வருது வெரசா நெலத்த விக்கணும்னு சொல்லிச்சி... எப்ப அளக்க வர்றதா சொன்னாரு..."

"ஆமா... அந்த நெலம் தான். வெயில்தாழ மூணு நாலு மணி வாக்குல வர்றேன்னாப்ல...  அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்."

"ஓ... சர்வேயர் பரமசிவம் வந்ததும் வீட்டுக்கு ஆள் அனுப்பு நான் வந்துடுறேன்."

ஊரின் கிழக்கு எல்லையில் சாமியாடி மாடசாமியின் வீட்டின் கிழக்குப்புறமும், நையாண்டி மேளக்காரர் பெரிய மாரியப்பன் வீட்டிற்குத் தெற்குப்புறமும் இருந்த அந்த நிலம் 'யானைக் கிடங்கு' என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நிலத்தின் முன்பகுதி பன்னிரண்டு அடிக்கு மேல் வட்ட வடிவில் ஆழமான குழியாகவும் பின்புறம் மேடாகவும் இருந்தது.

இரும்புச் சங்கிலிகளைக் கிழக்கும் மேற்குமாக, வடக்கும் தெற்குமாக இழுத்தபடி அளந்து கொண்டிருந்தார் பரமசிவம். தங்கராசு கூறிய அளவுகளை வெள்ளைத்தாளில் குறித்துக் கொண்டிருந்த பரமசிவத்தின் நெற்றிக்கண் திறந்ததை தங்கராசு  ஒற்றைக்கண்ணால் பார்த்தார்.

தூக்குவாளியில் கொண்டு வந்து இருந்த மோரை இருவருக்கும் சொம்பில் ஊற்றிக் குடுத்தார் வேலுச்சாமி.

மோரில் கிடந்த மிளகாய், இஞ்சித் துண்டு, கொத்தமள்ளித் தலைகளை மென்று துப்பியபடியே... "பத்திரபதிவு என்னைக்கு வச்சிருக்கீங்க?" என்றார் பரமசிவம்.

"அனந்தம்மா நாளைக்கே கூட வச்சிகிடலாம்னு சொல்லிருக்கு..."

"அட நீ வேற... ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டாமா?  நாளக்கழிச்சி பொதன்கெழம, பொன்னு கெடச்சாலும்  பொதன் கெடைக்குமா?  என்ன சொல்லுத?" என்றார் பரமசிவம்.

"நீங்க சொன்னா சரி தான், அன்னைக்கே வச்சிகிடலாம்."

"சரி வேலு... நான் பரமசிவத்த அனுப்பிட்டு வரேன், நீ பொதன்கெழம பத்திரம் பதுஞ்சுகிடலாம்னு அனந்தம்மா கிட்ட சொல்லிடு." என்றார் தங்கராசு.

"ஆமா ஆமா அவசரம் வேணாம். பொதன் கிழமயே பத்திரம் பதியலாம்" 

வேலுச்சாமியிடம் சிரித்தபடியே கூறிவிட்டு மேட்டில் நின்றிருந்த தன்னுடைய BAJAJ M80 வண்டியை நோக்கி நடந்து சென்ற பரமசிவத்தைப் பின் தொடர்ந்தார் தங்கராசு.

கொஞ்சம் தூரம் சென்றதும் தேநீர் கடையில் வண்டி நின்றது. தேநீர் வருவதற்கு முன்பே இருவரும் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

"அது இலவச பட்டா நெலந்தான... மூணு செண்டுக்கு மூணே முக்கா செண்டு நெலம் இருக்கு அத வடக்கால இருக்குற பெரிய மாரியப்பன் நெலத்தோட சர்வே நம்பர வச்சி எதாவது ஒரு பேர்ல நெலம் இருக்கறதா நான் காட்டிகிடுறேன். அதை வேற யாருக்கும் வித்துறலாம், அப்படியே அனந்தம்மா நெலத்தில ஒரு கால் செண்டு கம்மியா அளந்து குடுத்தா போதும். ஒரு செண்ட் கிடைக்கும் என்ன சொல்லுறீங்க தங்கராசு?"

"என்ன பேசறீங்க... அதிகமா இருக்குற முக்கா செண்ட் நெலத்த விடுங்க... கால் செண்டு கம்மியா காட்டினா நெலத்த விக்குற அனந்தம்மாவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் ரூபா கம்மியா கிடைக்குமே?"

"ஊர்க்காரன் எல்லாம் ஓடி ஆடி ஒழைச்சி சம்பாரிச்ச நெலமா இது?  குச்சை வச்சி வளைஞ்சி பிடிச்ச நெலம் தான... ஊரோட கடைசி நெலம், அடுத்த நெலம் கூசாலிபட்டி ஊர சேரந்தது, இரண்டு ஊர்க்காரனும் வளைஞ்சி பிடிச்சத்துல ரெண்டு ஊருக்கும் நடுவுல இந்த நிலம் இருக்கிறதாலயும் அனந்தம்மா நிலத்துல கால்வாசி யானை முங்குற அளவு கிடங்கு இருந்தால்தான இந்த நிலம் சர்வே புக்ல காணாம போயிருக்கு.!"

"அதுக்காக... நெலத்த விக்குற அனந்தம்மாவுக்கும், வாங்குற வேலுச்சாமிக்கும் பாதிப்பு வரக் கூடாதுல்ல..."

"என்ன பாதிப்பு வரப்போகுது யாருக்கும் எந்த பாதிப்பும் வர போறதில்ல..."

"என்ன அப்படி சொல்லுறீங்க... வாங்குற விக்குற ரெண்டு பேருக்குமே பாதிப்பு தான... அதிகமா இருக்கிற நிலத்தை சேர்த்து பத்திரம் முடிக்க என்ன வழியோ அத பண்ணலாம் அனந்தம்மா பொண்ணு கல்யாணதுக்கு கொஞ்சம் கூடுதல் பணம் கிடைக்கும் வாங்குற வேலுச்சாமிக்கும் அந்த கிடங்க மண்ணு போட்டு நெப்புற பணம் விரயம் ஆகாம இருக்கும். மனசாட்சியோட பேசுங்க..."

தங்கராசுவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பரமசிவம்.

"பிழைக்கத் தெரியாத ஆளு கிட்ட பேசி என்ன ஆகப் போகுது... நீங்க ஒத்துக்கிடலனா உங்க VAO கிட்ட நான் பேசிக்கிடுறேன். இதுக்கு முன்னயும் இது போல ரெண்டு மூணு முறை நீங்க ஒத்துக்கிடல... நல்லா யோசிச்சி சொல்லுங்க..."

"இல்ல... நான் பொழைக்க தெரியாத ஆளாவே இருந்துட்டு போறேன். என்னை நம்பின ரெண்டு ஜீவன்களுக்கு நான் தெரிஞ்சே துரோகம் பண்ண விரும்பல..."

"ம்ம்ம்... "ஒங்கள மாதிரி தலயாரி வேல பாக்குறவன், வீடு வாசல்,  வண்டின்னு வாழுறான் நீங்க என்னடானா இன்னும் ஓட்டு வீடு, ஓட்ட சைக்கிள்னு சுத்திட்டு இருக்கீங்க... ஏற்கனவே உங்கள வேற ஊருக்கு மாத்துறத பத்தி பேசிட்டு இருக்காங்க, இதுக்கு அப்புறம் உங்க விருப்பம்."

பதில் எதுவும் கூறாமல் அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்து சென்றார் தங்கராசு. 

பரமசிவம் சொல்லுற மாதிரி நாம நாலு காசு பணம் சம்பாதிக்கல,  பிள்ளைகளுக்கு சொத்து சேக்கல, ஓட்டு வீட்ட கார வீடா மாத்தி கட்டலனு சொந்தம் பந்தம் நக்கல் நையாண்டி பேசுவாங்களோ...? என யோசித்தபடியே தெருவில் இறங்கி நடந்தார் தங்கராசு, எதிரில் நிறை குடத்தைத் தலையில் சுமந்தபடி இவரைப் பார்த்துச் சிரித்தபடி அனந்தமாவின் மகள் ஆனந்தி நடந்து வருவதைப் பார்த்ததும் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியில் நடக்கத் தொடங்கினார்.
·          


கெடுவாக வையாது உலகம் நடுவாக 
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: 




நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.



1 comment:

  1. தீதும் நன்றும் பிறர் தர வாரா... 👍🏻

    ReplyDelete

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...