Monday, 15 October 2018

நளபாகம்

நளபாகம்
குற்றாலச் சாரல் மழையும் குளிர்ந்த காற்றும் இதமாய் வீச கோவில்பட்டி புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகவும், சென்னையில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்கவும் காத்திருந்தவர்கள் நடை பாதை ஓரத்தில் பூட்டி இருந்த கடைகளுக்கு முன் ஒதுங்கி நின்றர். சிலர் குளிருக்கு இதமாக தேநீர் அருந்த 'நிலா உணவகம்' நோக்கி நகர்ந்து சென்றர்.

"வாங்க சார்... உள்ள வாங்கம்மா... சூடா டீ, காபி, பஜ்ஜி, போண்டா , டிபன் ரெடியா இருக்கு உள்ள வாங்க..." எனச் சிரித்த முகத்தோடு அழைத்தார், கல்லாவில் அமர்ந்து இருந்த எழில்வாணன்.

"சுந்தரம்... கஸ்டமர்கள என்ன வேணு ஏது வேணுமுனு கேட்டு கவனி... கண்ணியப்பா... 'ரதி மீனா' பஸ் வந்துருச்சு பாரு... பார்சல எறக்கிட்டு ஆட்களை டிபன் சாப்பிட கூட்டியா..." கல்லாவில் இருந்தபடியே கட்டளைகளைப் பிறப்பித்தார்.

நிலா உணவகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சென்னையில் இருந்து கோவில்பட்டி வந்த பேருந்துகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் பேருந்துகளில் இருந்து இறங்கியவர்கள் எல்லோரும் மழையில் நனையாமல் இருக்க நேராக உணவகத்தினுள் ஓடி வந்ததால் இன்று நல்ல வியாபாரம்.

"அண்ணாச்சி! யாரு வர்றான்னு பாருங்க..." என்று பதைபதைத்தான் சுந்தரம்.

குடையை மடக்கியபடி படியில் ஏறி வருபவரைப் பார்த்ததும்,
"அடடே... வாங்க... சத்யசீலன் சார்  வாங்க... நான் இப்பத்தான் டிபன் சாப்பிடப் போறேன். நீங்களும் வாங்க சேர்ந்து எங்கூட சாப்பிடலாம்! சொல்லிட்டு வந்து இருக்கலாம்ல" என்றார் எழில்வாணன்.

"இல்ல இருக்கட்டும், இந்த நேரத்துக்கெல்லாம் நான் டிபன் சாப்பிடுறதில்ல... அதுவும் இல்லாமல் ஆபிசியல் விசிட் இல்ல... உங்க ஹோட்டலுக்கு எப்ப வந்தா என்ன எப்போதும் சுத்தமா ஆரோக்யமான உணவு சாப்பிடலாமே "

"அட அப்படி இல்ல நீங்க எப்ப வேணுமினாலும் வரலாம். அப்போ காப்பி டீயாவது சாப்பிடுங்க" என்றார் எழில்வாணன்.

"கண்டிப்பா... நான் எப்போதும் உங்களுக்கு கஸ்டம்ர்தான்,  உங்க புது சமையல்காரர் கைப்பக்குவம் மசாலா டீயில கூட பிரமாதமா இருக்குமே!" என்றார் சத்யசீலன்.

"என்னது... தமிழரசனைத் தெரியுமா? தமிழரசு..." என்று சமையல் அறையை நோக்கிக் கூப்பிட்டார்.

ஏற்கனவே கண்ணாடி வழியே சத்தியசீலன் வந்து அமர்ந்ததைப் பார்த்த தமிழரசன், 'இன்னைக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ன சொல்ல காத்திருக்காரோ என்று நினைத்தபடி கவனமாக மசாலா டீ தயார் செய்து கொண்டு வந்தார்.

"தமிழு... ஒனக்கு சாரை எப்படித் தெரியும்?" என்றார் எழில்வாணன் ஆச்சரியத்துடன்.
"இதுக்கு முன்ன கற்பகம் ஹோட்டலில் வேலை பார்க்கும் போதே செக்கிங் வந்தவரு என் சமையலைப் புகழ்ந்து இருக்காரு... சார்!" என முந்திக் கொண்டார் தமிழரசன்.

கையில் வைத்து இருந்த கோப்பையை வாய்க்கு கொண்டு போகும் முன்னமே... "என்ன தமிழரசன், ஏலக்காய கம்மியா போட்டு இருக்கீங்க போலிருக்கே! வாசனையிலேயே தெரியுதே!" என்றார் சத்யசீலன்.

"அதானே பாத்தேன். குத்தம் சொல்லாம இவரால இருக்க முடியாதே!" என்று பொருமிக் கொண்டார் தமிழரசன்.

மசாலா டீயை ஒரு மடக்கு குடித்ததும், "ஆமா, உங்க ஹோட்டல்ல எப்பவும் 'த்ரீ ரோஸஸ்' தானே இப்ப என்ன 'லிப்டன் ரெட் லேபிள்' வாங்குறீங்க போல" என்றார்.

"எப்படி இது? ஒரு மடக்கு டீயைக் குடிச்சதும் டீத் தூள் கம்பெனி பேர் எல்லாம் கூட சொல்லுறீங்களே!" என எழில்வாணன் ஆச்சரியப்பட்டார்.

'எந்த கம்பனித் தூள்ன்னு மட்டுமா... எந்த எஸ்ட்டேட்ல விளைஞ்சதுன்னு கூட சொல்லுவாரு...' என மனதில் நினைத்துக்கொண்டார் தமிழரசன்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழரசன் வேலை பார்த்த கற்பகம் உணவகத்திற்கு சோதனைக்கு வந்திருந்தார் சத்யசீலன். மதிய உணவு சாப்பிட்டு விட்டு, முதலாளியிடம் சமையற்காரரை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் வந்து முன்னாள் நின்ற தமிழரசனிடம்,
"நீங்க தான் சமையலா?"

"ஆமாங்க சார்"

"சமையல் அறையை நல்ல சுத்தமா வச்சிருக்கீங்க... மதிய உணவுக்கு இவ்வளவு கூட்டம் வந்தாலும் சமையல் பண்ணும்போது பரிமாறும் போதுன்னு எப்போதும் சுத்தமா இருக்கு... சாப்பாடும் நல்லாத்தான் இருக்கு, ஆனா இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கணும்.

"எதுல சார்?"

"சாதத்துல அஜினமோட்டோ போட்டு இருக்கீங்க... கொஞ்சம் கரிக்குது... உடலுக்கும் கேடு இனிமே கள் உப்பு  போடுங்க அப்புறம் சாதம் அடிப்பிடிச்சி இருக்கு கரிஞ்ச வாசனை வருது..."

"ஒரு அண்டாவில் 25 கிலோ அரிசி போட்டு வடிக்கிறேன் அதில் பக்குவம் பார்த்து வடிக்கும் முன்ன கொஞ்சமா தீஞ்சிருச்சி..."

"ஒரு கொடத்து தண்ணில ஒரு துளி விஷம் கலந்தாலே போதுமே... அப்புறம் வத்தக் குழம்புல சுண்ட வத்தல சரியா வதக்கல குழம்பு கொஞ்ச கசப்பா இருக்கு..."

"வேற எதுவும் குறை இருக்கா?"

"மத்ததெல்லாம் சின்ன சின்ன குறை தான், உங்கள் சமையல் நல்லா இருக்கு... உங்களுக்கு நல்ல கைப் பக்குவம் இருக்கு... இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கவனமா இருங்க சரியா... அப்புறம் ரசத்த ரொம்ப கொதிக்க விட்டுருக்கீங்க... கொதி வந்த பிறகு கருவேப்பில, கொத்தமல்லி போட்டதும் இறக்கிடணும் இல்லனா கடைசியா சாப்பிடுறவங்களுக்கு ரசம் கசக்கும்."

கொதித்த எண்ணெயில் போட்ட அப்பளம் போல பொரிந்து விட்டு போய் விட்டார்.

'இன்னைக்கு புதுசா சேர்ந்து இருக்கிற ஹோட்டல்ல டீயோட நிப்பாட்டிட்டாரு... இல்லனா இட்லி வட்டமா இல்ல, தோசை ஏன் சதுரமா இல்லனு ஏதாவது குறை சொல்லி இருப்பார் என நிம்மதியானார் தமிழரசன்.

"நான் கை கழுவிட்டு வரேன்" என்று எழுந்து போனார் எழில்வாணன்.

"உங்க கைப்பக்குவத்துல டிஃபன் சாப்பிடலையேன்னு வருத்தப்படாதீங்க, இன்னும் கொஞ்ச நேரம் கழித்துத்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவேன். உங்களோட சமையல்ல எண்ணெய், காரம், மசாலா எல்லாமே சரியான அளவுல இருக்கும். நான் உங்க சாப்பாட்டுக்கு அடிமை, முதலில் வேலை பார்த்த ஹோட்டல் போயி விசாரிச்சிட்டுத்தான் இங்க வந்தேன். நான் ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிடுற பழக்கம் உள்ளவன். அடுத்த முறை கண்டிப்பாக உங்கள் சமையலை ருசி பாக்குறேன்." என்று கூறி விட்டு எழுந்த சத்யசீலன், மேஜையின் மீது வாளியில் இருந்த சாம்பாரைப் பார்த்ததும்,

" சாம்பார சரியா கொதிக்க வைக்கல போல பெருங்காய வாசனை தூக்கலா இருக்கு..." என்று கூறிவிட்டு வாசலுக்கு வெளியில் தமிழ்நாடு அரசு (FSSAI) என்று எழுதி இருந்த வாகனம் நோக்கி நடந்தார்.

குறள் 27:
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
பொருள்:
சுவை, காட்சி, தொடு உணர்ச்சி, ஓசை, மணம் ஆகிய ஐந்து உணர்வுகளை நுகரும் ஐம்புலன்களின் பலனை உணர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவனை உலகம் போற்றும்.

அ.வளர்மதி 

1 comment:

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...