மழை நீ
எப்பவும் கலகலவென இருக்கும் அந்த காரை வீடு இன்னைக்கு கம்முன்னு இருக்கு. வீட்டு முன்னால இருந்த தாழ்வாரத்து திண்ணையில பள்ளிக்கூடம் முடிஞ்சி வந்த பத்துப் பதினைஞ்சி பிள்ளைக வீட்டுப்பாடம் எழுதிட்டு இருக்குக, பாடம் சொல்லி கொடுக்கற வாத்தியார திண்ணையில காணல...
சாயங்கால வேளையில திண்ணையில அமர்வார் வாத்தியார். அவரோட முகம் தெரியுறாப்ள புள்ளயளும் ஒக்காந்து இருக்கும். காரமா மிளகு, இஞ்சி சுக்கு போட்ட சுக்கு காப்பிய சாரதா கொண்டு வந்து முன்ன வைக்க... குடித்து விட்டு 'ம்கூம்... ம்கூம்...'னு சத்தம் வந்தா பாடம் ஆரம்பமாவ போவுதுனு அர்த்தம்.
ரெண்டு நாளா ரூமுக்குள்ளயே அடஞ்சி கெடக்குற புள்ளய நெனச்சு நடு வீட்டுல சாய்வு நாற்காலில சாய்ஞ்சி படுத்து இருந்த அழகப்பன் வாத்தியாரு ரொம்ப சங்கடப்பட்டாரு...
நிதி மேலாண்மை படிச்சி முடிச்சுட்டு வேலை தேடுன மகன் அறிவழகனுக்கு வெளிநாட்டுல வேலை கெடச்சிருக்கு... அந்த வேலைக்குத்தான் போவேன்னு ஒத்தக்கால்ல நிக்குற அவன்ட்ட எப்பிடி புரிய வைக்கனு Dஅவருக்கு தெரில...
வீடு ரெண்டு நாளா இருளோனு கெடக்கு மனைவி சந்திரா ஒரு பக்கம் உம்ம்னு அவர்கிட்ட பேசாம இருக்கா... அறிவு பய வேற கம்முன்னு இருக்கான்.
எப்பயும் ரூமே கதினு கெடக்கான் அறிவழகன், சரியா சாப்பிடுறதில்ல... பேசுறதில்ல... இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒரு முடிவோட மகனோட அறைக்குப் போய் கதவத் தட்டுனாரு...
குப்புற படுத்துகிட்டிருந்த அறிவழகன் அப்பாவப் பாத்ததும் மறுபக்கம் திரும்பி படுத்துக்கிட்டான். "அறிவு..." மெல்ல கூப்பிட்டாரு...
"ஒன்ட பேசணும் டா.. எந்திரிச்சு ஒக்காரு...'
"என்ன பேசணும்..."
"இப்ப எதுக்கு நீ இப்பிடி பண்ற... நான் ஏன் வெளிநாட்டு வேல வேண்டாம்னு சொல்றேன்னு கொஞ்சமாது யோசிச்சி பாத்தியா நீ?"
"யோசிக்க என்ன இருக்கு?" கோவம் குறையாம முனங்குனான்.
"டேய்! ஒன்ன கஸ்டப்பட்டு படிக்க வச்சது எதுக்குனு நெனச்ச? அந்தக் காலத்துல நாம அடிமைகளா இருந்தோம்.. அப்ப ஒன்னோட தாத்தா நாட்டுக்காக உயிரக் குடுத்தாரு... நானும் நல்லா படிச்சி வாத்தியாரா அரசாங்க உத்யோகத்துல இருக்கேன். என்னோட படிப்பு நம்ம மக்களுக்கு ஒதவணும்னு தான் இந்த வேலைக்கே வந்தேன்... நமக்கு உணவு குடுக்குற உழவர்களோட பிள்ளைகளுக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் உதவி செய்யுறேன், அதுல கெடைக்குற நிம்மதி நமக்கு போதும் டா..."
"உங்களுக்கு போதும்... எனக்கு நிறைய சம்பாதிக்கணும்... இங்க இந்த ஊருல உக்காரதுக்கா நான் எம்பிஏ படிச்சேன்"
கத்துனான் அறிவழகன்.
"இந்த ஊருலயே ஒன்ன யாருடா இருக்க சொன்னா... வெளியூர்ல போய் வேல பாரு..."
"வெளியூர் போறதுக்கு... நான் வெளிநாடு போவேன்ல... நல்ல சம்பளம் கிடைக்கும்ல..."
"ஒன் படிப்பு நம் நாட்டுக்கு யூஸ் ஆகணும்னுதான் நான் சொல்றேன். நீ சொன்ன மாதிரி வெளிநாட்டு வேலைல காசு வரும் ஆனா திருப்தி கிடைக்காது டா..."
"நல்ல வேலை, கை நிறைய காசு வந்தா திருப்தியா இருக்கும்ல..."
"கொஞ்ச நாளைக்கு வேணா வெளிநாட்டுல வேல பாக்குறது திருப்தியா, பெருமையா இருக்கும்... அதுக்கு அப்புறம் மனசு தவிக்கும் டா..."
"என்னப்பா நீங்க..."
"இங்ஙன வேல பாத்தா நாங்களும் ஒன்ன அப்பப்ப வந்து பாத்துக்குவோம்ல... நீயும் நல்ல நாளு பொழுதுனா எங்க கூட இருப்ப... ஒனக்கும் வாழ்க்கை வெறுமையா இருக்காது டா..."
"அங்கயேவா இருக்க போறேன்... லீவுக்கு வருவேன்ல..."
"நம்ம படிப்பு நம்மளுக்கு பயன்படணும், ஒனக்கு இந்தியன்னு அடையாளம் குடுத்த நாடு இது... கல்விய இலவசமா குடுத்த நாடு இது... உனக்கு பாதுகாப்பு குடுத்த நாடு இது... உன்ன பத்திரமா பாத்துக்கிட்ட இந்த நாட்டுக்கு உன் படிப்பு பயன்படலனா, நீ படிச்சது வீண் டா... யோசிச்சு பாரு..."
அறிவழகன் ஒன்னுமே பேசாம அமைதியா இருந்தான்.
"இப்ப எதுக்கு அவனுக்கு ஜல்லியம் குடுக்குறீக..." என்றாள் சந்நிரா.
"அண்ணைக்கு ஒங்க அண்ணன் துபாய்க்கு போறேன்னு கிளம்பும் போது ஓ...ன்னு ஒப்பாரி வச்ச..." என திரும்பி மனைவியைப் பார்த்தார்.
"அது சரி; அப்ப அழுதது வாஸ்தவம்."
"என்னது வாஸ்தவம்?"
"அண்ணைக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணலனா அண்ணன் வெளிநாடு போயிருப்பான்..."
"ஒத்துகிட்டியா?"
"ஒத்துக்கிட்டேன்."
"பின்னெ... இப்ப ஒன் அண்ணன் இந்த ஊருலயே பெரிய வெவசாயி... எத்தனை குடும்பத்துல அவனால அடுப்பு எரியுது, பல பேரு வவுறு நெறயுது..."
"நான் அதெச் சொல்லலே..." மீண்டும் ஆரம்பித்தாள். வாத்தியார் பழையபடி குறுக்கிட்டு, "ஒத்துக்கிட்டே இல்லே? அந்த இடத்திலே பேச்செ நிறுத்து, விஷயத்தெ பெருசாக்காதெ" என்றார்.
சந்திரா எதுவும் பேசல...
அமைதி நிலவியதும், "போனது போகட்டும். இப்பம் விஷயத்துக்கு வா அறிவுக்கு என்ன சொல்லுதெ? அதெச் சொல்லு முதல்லே..."
"அறிவு... அப்பா சொல்லுதெ கேளுடா... எங்களுக்கும் ஒன்ன விட்டா யாருடா இருக்கா...?"
"இதுக்கு மேலயும் பிடிவாதமா நீ வெளிநாடு போகணும்னு நெனச்சா போ... உன் ஆசைக்கு நான் குறுக்க நிக்கமாட்டேன்னு..." சொல்லிட்டு அடக்க முடியாத கண்ணீரோட வெளிய வந்தாரு அழகப்பன்.
அதுவரைக்கும் கோவமா இருந்த அறிவழகனுக்கு அப்பா, அம்மாவோட கண்ணீரும் அவர்களோட வாதங்களும் ரொம்பவே சுட்டுச்சு... தன் நாட்டுக்கு தான் தன்னோட படிப்பு பயன்படணும்கிற உறுதி அவனுக்குள்ள வந்துருச்சு.
வெளியில திண்ணையில இருந்த ஒரு புள்ள சத்தம் போட்டு படிச்ச திருக்குறள் நடு வீடு தாண்டி உள் அறை வரை கேட்டுச்சி...
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்."
(அதிகாரம் 2: வான் சிறப்பு, குறள்–17)
பொருள்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
அ.வளர்மதி
உண்மைதாங்க👍🏽 இன்பமோ துன்பமோ குடும்பத்துக் கூடவே இருந்து சந்திக்கணும்.
ReplyDelete