Sunday, 14 October 2018

விலை நிலம்


விலை நிலம்

  
வேலுச்சாமி தன் வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஆகாசத்தையே எப்பவும் அன்னாந்து பாத்துட்டு இருந்தாக்க கழுத்து சுளுக்கி கிட போவுது!" என கிண்டலாக சொன்னாலும்... உள்ளுக்குள் வடிவுக்கும் பெருங்கவலை தான். மழை பெய்யாமல் போனது அந்த ஊர் மக்களோடு சேர்த்து வடிவோட குடும்பத்தையும் வெகுவாக பாதித்திருக்கிறது!

"மொதல்ல தலையிலெ இறுக்கறெ அரசி மூட்டையை எறெக்கு ஒங் கழுத்து சுளுக்கிக்கெட போவுது... ரேஷன் கடையிலெ இருந்து எம்மாந்தூரம் சுமந்துட்டு வந்துருக்கெ..."

அரசாங்கம் ரேஷன் அரிசி வழங்கினாலும் பெரும்பாலான குடும்பங்களுக்கு அது மாதம் முழுவதும் உண்ண போதுமானதாக இல்லை. தேவையான அரிசியை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டி இருந்தது, கடும் விலைவாசி உயர்வினால் மாதக் கடைசியில் வெளிச் சந்தையில் அரிசி வாங்குவது  கூட இயலாத ஒன்றாக ஆகி விட்டது.

"வந்ததும் வராததுமா... அங்கனெ என்னத்தெ கெடந்து ரேடியோ பொட்டிய நோண்டிட்டு இருக்கவெ?" எனக் 
கேட்ட வேலுச்சாமிக்கு...

"மழயப் பத்தி ஏதும் நல்ல சேதி சொல்லுதாவலானு கேட்கத்தான் என்றாள் வடிவு.

"அலாட்டா இருக்கோணும் பெருமழ பெய்யபோவதுன்னானுவ... என்னத்தெ..."

"ஏன் இப்பம் சலிச்சிகிறீக என்னாச்சி?"

"ஒரிசால பேய்மழ கொட்டுதாம்புயலு ஆந்திரா கரையோரம் கடக்குதாம்... நைனா டீக்கடையில பேசிக்கிட்டாகெ..."

வானம் பார்த்த பூமிகரிசல் காட்டில் மூன்று ஆண்டுகளா சரியா மழை இல்லாமல் ஆடு,மாடுகளுக்கு கோரப்புல் கூட முளைக்கவில்லை. இந்த வருடமும் மழை இல்லை என்றால் சாப்பாட்டுக்கு கூட பிரச்சினை ஏற்படும்.

"என்ன ரோசனை பெலமா இருக்கு... சாப்பிட வாங்க" என்று வடிவு கூப்பிடவும் "பசி இல்ல நீ சாப்பிடு..." என்றவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

"காணி நெலத்துல உழுது பயிரிட்டுவெள்ளாம எடுத்து வித்த நெல்லு போக மீந்தத குதிருல கொட்டி நல்ல நாளு பொழுதுக்கு நெல்லு குத்தி தின்ன காலம் போயி... இப்பெ குருசாமி அண்ணாச்சி கடையிலெ கடனுக்கு சிட்டை போட்டு புலுங்க அரிசிரேஷன்ல புளுத்த அரிசி வாங்கி திங்கறெ நெலமெ ஆகிட்டே..."

"இப்பெ ஏன் கெடந்து வெசனபடுத்தியெ... இந்தெ கஞ்சியெ குடியும்..." கும்பாய பக்கத்தில் நகர்த்தினாள் வடிவு.

"உழுறெ நெலத்துலெ வானக்கால் தோண்டி மெத்த வீடு கட்டுனா ஒலகம் என்னெ கெதியாகும்?"

"செத்த நேரம் பேசாட்டிருங்க... மொதெ கஞ்சியெ குடிங்கெ..."

"இப்பெ கஞ்சி தான் முக்கியமா போயிட்டா?

"ஆமாம்! ஊரு ஒலகெத்துலெ பாதி ஒழவுக்காரவுக நெலெத்தெ வித்து புட்டு நெம்மதியா இருக்காகெ... நீங்க மட்டும் தான் கருச காட்டுல வெள்ளாமெ பண்ணி கஸ்டபடுதியெ..."

வேலுச்சாமி மனைவி சொல் கேட்டுகும்பாயில் இருந்த பழைய கஞ்சியில் புளித்த மோர் விட்டு கலக்கி மோர் வத்தல், வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட ஆர்மபித்தான். கஞ்சி கஷ்டப்பட்டு இறங்கியது.

கஞ்சியைக் குடித்துவிட்டுக் கை கழுவ வாசலுக்கு வந்த போது... எதிரில் அரைக்கால் டவுசர் டயர் வண்டி கையில் குச்சியோடு ஒரு பொடியன் நின்றிருந்தான்.

"யாருங்கெ அது?" என்று வடிவு வெளியே வர...

"அய்யா கடப்பாக்கி கணக்கு பாக்கணுமாம் கடைச் சிட்டைய வாங்கிட்டு வரச் சொன்னாரு..." என்றான் மளிகைக் கடைக்காரர் குருசாமியோட மகன்.

கொஞ்ச நேரம் கதி கலங்கி இருவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு நிற்க, கணவன் "ம்ம்ம்.." என தலையாட்ட வடிவு வீட்டினுள் சென்று நிலைக் கதவுக்கு மேலே இருந்த கடைச் சிட்டையை பொடியனின் கையில் குடுக்கவும்சிட்டையை டவுசர் பையில் சொருகி விட்டு "கீக்.. கீங்ங்க்..." என்று வாயில் நுரை தள்ள சத்தம் கொடுத்துக்கொண்டே குச்சியால் டயரை அடித்து விரட்டிக் கொண்டு  ஓடினான் பொடியன்.

"என்னெங்கெ இப்படியே போனாக்கெ என்னெ செய்யெமேலத்தெரு பால்காரர்கிட்ட வட்டிக்கு பணம் கேளுங்களேன் கடப் பாக்கி கொடுக்கணும்."

"பத்து வட்டிக்கு பணம் வாங்கி அதெ எப்ப எப்பெடி கட்டுறதாம்?"

"துபாய்காரரு நெலத்துல போர் போட்டாகளே தண்ணி கேட்கலாமா..."

"ஒனக்கு என்ன கோட்டிகீட்டி பிடிச்சிட்டாஅந்த பயெ பணம் இருக்குன்னு திமிருலெ போர் போட்டு தண்ணியெ கேன்லெ அடைச்சி விக்கவும் தான ஊர்ல உள்ள கெணத்துல எல்லாம் தண்ணி தூருக்கு போச்சி, ராட்டினத்துல மாங்கு மாங்குன்னு இழுத்தாக்கெ கால் கொடம் தண்ணி தான் வருது... அவனோட போர்ல கூட தண்ணி இப்ப மூணு நாலு நாளானா கூட தண்ணி ஊருறதில்லெ..."
"ஓ..."
"என்ன ஓ...னு இழுக்கிறவெ... ராமசாமி தோட்டத்து கெணத்துலெ ஊர் ஜனமே குளிச்சுதுணி அலசிவீட்டுக்கு ரெண்டு மூணு கொடம் தண்ணி எடுத்துட்டு போகுமே இப்பெ அதுக்கும் வழி இல்லாமப் போச்சே..."

துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான்.
வானம் பாத்தெ கரிசல் பூமில மழை இல்லெனா வெவசாயி மானத்தோட உசுரு வாழ முடியாது... கோவில்பட்டி செஞ்சுரி பட்டாசு கம்பனிலெ வேல கேட்டு இருந்தேன் என்னன்டு ஒரு எட்டு போயி கேட்டுட்டு 
வாரேன்... மறுக்கா அந்த ரியல் எஸ்டேட் புரோக்கரு வந்தா நெலத்தெ விக்கெ சம்மதம் சொன்னேன்னு சொல்லிபுடு..." துண்டை உதறி விட்டு தெருவில் இறங்கி நடந்தான்.

கணவன் உச்சி வெயிலில் காய்ந்து கிடந்த கரிசல் காட்டு வரப்பில் நடந்து போவதை கண் கலங்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வடிவு.

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
பொருள்:
உழவர்கள் வருவாய் ஈட்ட உதவும் மழை வளம் குறைந்து விட்டால்உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலைக் கைவிட்டு விடுவார்கள்.


அ.வளர்மதி 

2 comments:

  1. இனிய நடை. ஆனால் என்னைபோன்ற வட மாவட்ட மக்களுக்கு புரிவது கொஞ்சம் சிரமம்.

    ReplyDelete
  2. அருமை தமோ! மழையில்லையென்றால் கூட நிலத்தடி நீரைக் கொண்டு பயிர் வைக்கலாம்... நிலத்தடி நீரும் தீர்ந்தால், என்ன செய்வது? இனிமேலாவது மனிதனின் செயல்களும் தொழில்நுட்பமும் இயற்கையோடு இசைந்து இருக்கட்டும்...

    ReplyDelete

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...