Tuesday, 30 October 2018

அறம்

அறம்

சரக் சரக்கென்று அவசர அவசரமாக சவரம் செய்து கொண்டிருக்கிற கணவன் ஜேம்ஸ்ஸையும் சொர் என்று கொட்டுகிற நீரையும் பார்த்த மேரிக்கு மனசெல்லாம் ஆதங்கம்.

"என்னங்க... 8 மணி ஆகப்போவுது இன்னும் பாத்ரூம்ல என்ன பண்ணுறீங்க... ஷேவிங் பண்ணும் போது தண்ணிய திறந்து விடாதீங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் ஒண்ணு தேவைப்படும் போது திறங்க இல்ல கப்புல தண்ணி பிடிச்சி வச்சிட்டு பண்ணுங்க..." 

"சரி சரி அடைச்சிட்டேன் ஆரோன் எங்க போயிருக்கான்?" என்று குளியல் அறையில் இருந்து எட்டிப் பார்த்து தன் மனைவி மேரியிடம் கேட்டார் ஜேம்ஸ்.

"பெத்தேல் இல்லத்துக்கு போயிருக்கான் அந்த பிள்ளைகள பார்த்துட்டு பள்ளிக்கூடம் போகும் முன்ன சொல்லிட்டு வரேன்னு போனான்..."

"ம்ம்ம்... இவன் இல்லைனா அந்த பிள்ளைங்க ரொம்ப தவிச்சி போயிடும்க..."

வீட்டின் முன்னே வண்டிச் சத்தம் கேட்டதும் வாசலை நோக்கி ஓடினாள் மேரி.

"காலையில் இருந்து காலில் சக்கரம் கட்டிட்டு திரியுற பைய்யாப் போ"

"என்னப்பா எல்லோர்கிட்டையும் சொல்லிட்டியா?"

"சொல்லிட்டேன்மா... எல்லோர் கிட்டயும் சொல்லி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்க கஷ்டமா போயிட்டுமா.."

"நேத்தே சர்ச்ல வச்சி சொல்லிட்டதான மறுபடியும் ஏன்? சரி விடு எலிசபெத் சிஸ்டர் என்ன சொன்னாங்க...?

"எல்லோருக்கும் அரசாங்க வேலை எளிதா கிடைக்காது உனக்கு இந்த சின்ன வயசுல பல தேர்வு எழுதி கிடைச்ச வேலை இது... நல்லபடியா பொறுப்பா பாருன்னு சொன்னாங்க..."

"ம்ம்ம்... நீதான் உங்க கட்சி மூலமா சிபாரிசு பண்ணுன நல்ல நல்ல வேலைய எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்ட..."

"எனக்கு முன்னாடி காத்து இருக்குறவங்கள ஏமாத்தி பணம், சிபாரிசுன்னு வாங்குற வேலை எனக்கு வேண்டாம்."

"சரிடா இவ்வளவு நாள் கிடைச்ச வேலை எல்லாம் சம்பளம் கம்மினாலும் செஞ்ச... வேலை பார்த்துட்டே எத்தனையோ எக்ஸாம் எழுதி இந்த வேலை கிடைச்சி இருக்கு... என்ன வேலை பார்த்தாலும் அதுல பாதி பெத்தேல் ஹோமுக்கு குடுத்து, சனி ஞாயிறுல அங்க முடிந்த வேலை எல்லாம் செஞ்ச..."

"சரிம்மா... சனி ஞாயிறு முடிந்தால் வரேன் புதன் கிழமை ஞானமலர் பெட்ரோல் பல்க் ஓனர் வீட்டில் இருந்து அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் குடுப்பாங்க வாங்கி பெத்தேல் ஹோம்க்கு ஆட்டோவில் குடுத்து விடுங்க."

"அதெல்லாம் நாங்க பார்த்துகிடுறோம்பா... நீ கவலைப்படாத அந்த அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள் தான் நீ இல்லாம கஷ்டப்படும்."

"அத ஏன் இப்ப அவனுக்கு நியாபகப்படுத்துற? நீ கிளம்புப்பா... நான் பார்த்துக்கிடுறேன்." குளித்து விட்டு வந்தவர் ஆரோனை கிளப்பினார்.

அம்மா அழுது வழி அனுப்பி வைக்க அப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து புற நகர் பேருந்து நிலையதில் இறங்கினான் ஆரோன். 

"கவனமா வேலை பாருப்பா... வேலையில் நேர்மையா, நியாயமா இருந்து நல்ல பேர் எடுக்கணும். நேரம் கிடைக்கும் போது போன் பண்ணிப் பேசு லீவுக்கு முடிந்தால் வந்துட்டுப் போப்பா..." பேருந்து கிளம்பவே வேகமாக கீழே இறங்கி கை காட்டி அனுப்பி வைத்தார்.

திருச்சி வந்து இறங்கியதும் வரவேற்றான் லியோ.

"சாயங்காலம் கிளம்பி வர சொல்லி இருப்பேன் உன்னோட டிப்பார்ட்மெண்ட்ல வேலை பார்க்கிற ஒருத்தர் லீவுக்கு போறாரு அதான் அவரு போகும் முன்ன உன்ன பார்க்கணும்னு சொல்லவும் தான் காலையிலையே வரச் சொன்னேன்"

"ஏன் மாமா அவர் ஏன் என்ன பார்க்கணும்?"

"அவர் லீவுல போறாருடா போகும் முன்ன வேலையப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு தான்டா வரச் சொல்லி இருக்காரு..." ஆட்டோ ஒன்றில் ஏறி "மாருதி நகர்" என்று சொல்லி ஆரோனை ஏறச் சொல்லி அமர்ந்து கொண்டான்.

திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த அலுவலகம் வேலை ஒப்பந்தம் சம்பந்தமான உத்தரவு கடிதம் காட்டி விட்டு மேலாளர் அறையை விட்டு வெளியே வந்தவனை அழைத்து இருக்கையில் உட்கார வைத்தார் பெருமாள்சாமி. நடுத்தர வயதுக்காரர் ஆனாலும் அரோனிடம் மிகவும் நட்பாகப் பேசினார்.

"இந்த மாதிரி புதுசா வேலைக்கு வரவங்கள ஒரு சீட்டுல நிரந்தரமா உட்கார விட மாட்டாங்க... அப்படி உட்கார இரண்டு மூணு வருசம் ஆகும், நீங்க குடுத்து வச்சவங்க தம்பி. இதுக்கு முன்ன இந்த சீட்ல இருந்தவரு ரிட்டையர் ஆகிட்டாரு... நான் மெடிக்கல் லீவுல போறேன் வரும் வரை எந்த பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கோங்க தம்பி உங்கள ஒரே சீட்ல உடகார வைக்க வேண்டியது என் பொறுப்பு."

நாலைந்து நாட்கள் வரை அரோனுக்கு என்ன வேலை செய்வது, யார் மேலதிகாரி இப்படி ஒன்றும் விளங்கவில்லை... எந்த கோப்புகளும் இவனிடம் அவ்வளவாக வரவில்லை. எப்போதாவது பெயர், முகவரி சரி பார்க்கச் சொல்லி மேஜைக்கு வரும் கோப்புக்களை மட்டும் உண்மையான ஆவணங்களை வைத்து சரி பார்த்த்துக் கொண்டிருந்தான்.


விடுமுறையில் இருந்து திரும்பி வந்த பெருமாள்சாமி அவனைத் மேலதிகாரி அழைப்பதாக சொல்லவும் அறைக்கு சென்று சந்தித்தான் அழைத்து வேலையைப் பற்றி விசாரித்து விட்டு 'பெருமாள்சாமி உங்களைப் பற்றி நல்லவிதமா சொல்லி இருக்காரு...  இனிமேல் என்னோட இலாகாவில் பணி ஆற்றலாம்' என்று கூறினார். அப்போது அங்கே வந்த பியூனிடம், 
"கதிரவா... இனிமே சார் என்னோட டிப்பார்ட்மெண்ட்ல தான் நிரந்தரமா இருக்கப் போறாரு நல்லபடியா பாத்துக்க" என்றார்.

அன்றைக்கும் கூட எந்த கோப்பும் அவன் மேஜைக்கு வரவில்லை. மாலையில் கதிரவன் எல்லோருக்கும் தேநீர், காப்பியுடன், கையில் பொட்டலம் ஒன்று கொடுத்து கொண்டு வந்தான். ஆரோனின் மேஜை அருகே வந்ததும் டீயை வைத்து விட்டு கையில் இருந்த காகித்தைப் பார்த்து விட்டு அவன் கையில் ஒரு பொட்டலத்தை குடுத்தான்.

"நான் வடை சாப்பிட மாட்டேன் வேண்டாம்." என்றான் அரோன்.

"கதிரவன் சிரித்து விட்டு அதான் தெரியுமே சார் இது சுவீட்! பெருமாள்சாமி சார் டிபார்மெண்ட்ல தான வேலை செய்யுறீங்க?"

"ஆமா அதுக்கு என்ன?"

"அப்ப பிடிங்க சார் நான் எல்லோருக்கும் சுவீட் கொடுக்கணும் நீங்க பெருமாள்சாமி சார் கிட்ட கேட்டுக்கோங்க..." என்று கூறிவிட்டு மற்ற மேஜைகளை நோக்கி போய் விட்டான்.

பொட்டலத்தைப் பிரித்தவன் அதிர்ச்சி அடைந்தான்.

"என்ன சார் இது சுவீட்ன்னு சொல்லி இத கையில் குடுத்துட்டு போறாரு..."என்றான் அரோன் பெருமாள்சாமியிடம்.

"வார்க்கடைசி நாள் தான அதான் சுவீட்" என்றார் சிரித்துக்கொண்டே. அவர் கையிலும் பொட்டலம் இருந்தது.

"இது சுவீட்டா?"

"தம்பி. ஒண்ணு புரிஞ்சிக்கோங்க.. நூத்துக் கணக்குல ஆட்கள் வந்து போற ஆபிஸ் இது, தினமும் சுவீட் கொடுக்க முடியாது. வாரக்கடைசியில் ஜீனியர் , ஜுனியர் பார்த்து சுவீட் வரும். நீங்க வேலைக்குப் புதுசுங்கறதினால உங்களுக்குச் சின்ன பொட்டலம். போகப் போக சுவீட் பாக்ஸ் பெருசாகும்.

"சார் அதுக்கு இப்படியா ஒவ்வொரு டேபிளா டீ கூட சேர்த்து..."

"அதுக்கு என்ன ஆபிஸ்ல இப்ப நாம மட்டும் தான இருக்கோம்."

"சார் நான் இப்ப வரை எந்த வேலையும் பார்க்கலையே?"

"அதனால என்ன ஒனக்கு பங்கு குடுக்க சொல்லி நம்ம ஆஃபீஸர் ஆர்டர் போட்டு இருப்பாரு!"

"ஓகோ! இதுக்குத்தான் காலையில் கதிரவன் கிட்ட என்னை நல்லா பாத்துக்க சொன்னாரு போல..."

எல்லோருக்கும் பொட்டலம் குடுத்து விட்டு வந்த கதிரவனை அரோன் கூப்பிட்டான்.
"அண்ணே! கதிரவன் அண்ணே... கொஞ்சம் இப்படி வாரீயளா?"

"என்ன சார்? பொட்டலம் சிறுசா இருக்கா? அதப் பத்தி உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க கிட்ட கேளுங்க..."

"பொட்டலம் எல்லாம் பெரிய பொட்டலம் தான். எனக்கு வேண்டாம். இப்ப இல்ல எப்பவும் வேண்டாம்" என்று சொல்லிப் பணத்தைத் திரும்பக் கொடுத்தான்.

"சார் என்ன சொல்லுறீங்க?"அவசரப்படாதீங்க சார்" என்றான் கதிரவன். 

"இங்க பணம் இல்லானா எந்த வேலையுமே நடக்காது தம்பி. பணம் குடுக்காமலும் இருக்க மாட்டாங்க... நீங்க யார்கிட்டேயும் கை நீட்டி பணம் வாங்கப்போறதில்ல, யாரோ தினமும் வாங்கி வைக்கிறாங்க வாரக்கடைசியில் உங்க கைக்கு வருது... அப்புறம் உங்களுக்கு இதுல என்ன தம்பி பிரச்சினை? இந்த டிபார்ட்மெண்ட்ல இருந்துகிட்டு பணம் வாங்க மாட்டேன்னு சொல்லுறீங்களே நல்லா யோசித்து முடிவு எடுங்க தம்பி" என்றார் பெருமாள்சாமி.

"நான் எங்க இருந்தாலும் சரி என்ன வேலை பார்த்தாலும் சரி நான் மாற மாட்டேன். எப்போதும் நேர்மையாத்தான் இருக்கனும்னு என் அப்பாவும் ஆசிரியரும் கத்துக் கொடுத்து இருக்காங்க என்றான் அரோன்.

குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

பொருள்:
நாம் செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.




Monday, 15 October 2018

நளபாகம்

நளபாகம்
குற்றாலச் சாரல் மழையும் குளிர்ந்த காற்றும் இதமாய் வீச கோவில்பட்டி புறநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகவும், சென்னையில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்கவும் காத்திருந்தவர்கள் நடை பாதை ஓரத்தில் பூட்டி இருந்த கடைகளுக்கு முன் ஒதுங்கி நின்றர். சிலர் குளிருக்கு இதமாக தேநீர் அருந்த 'நிலா உணவகம்' நோக்கி நகர்ந்து சென்றர்.

"வாங்க சார்... உள்ள வாங்கம்மா... சூடா டீ, காபி, பஜ்ஜி, போண்டா , டிபன் ரெடியா இருக்கு உள்ள வாங்க..." எனச் சிரித்த முகத்தோடு அழைத்தார், கல்லாவில் அமர்ந்து இருந்த எழில்வாணன்.

"சுந்தரம்... கஸ்டமர்கள என்ன வேணு ஏது வேணுமுனு கேட்டு கவனி... கண்ணியப்பா... 'ரதி மீனா' பஸ் வந்துருச்சு பாரு... பார்சல எறக்கிட்டு ஆட்களை டிபன் சாப்பிட கூட்டியா..." கல்லாவில் இருந்தபடியே கட்டளைகளைப் பிறப்பித்தார்.

நிலா உணவகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சென்னையில் இருந்து கோவில்பட்டி வந்த பேருந்துகள், திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் பேருந்துகளில் இருந்து இறங்கியவர்கள் எல்லோரும் மழையில் நனையாமல் இருக்க நேராக உணவகத்தினுள் ஓடி வந்ததால் இன்று நல்ல வியாபாரம்.

"அண்ணாச்சி! யாரு வர்றான்னு பாருங்க..." என்று பதைபதைத்தான் சுந்தரம்.

குடையை மடக்கியபடி படியில் ஏறி வருபவரைப் பார்த்ததும்,
"அடடே... வாங்க... சத்யசீலன் சார்  வாங்க... நான் இப்பத்தான் டிபன் சாப்பிடப் போறேன். நீங்களும் வாங்க சேர்ந்து எங்கூட சாப்பிடலாம்! சொல்லிட்டு வந்து இருக்கலாம்ல" என்றார் எழில்வாணன்.

"இல்ல இருக்கட்டும், இந்த நேரத்துக்கெல்லாம் நான் டிபன் சாப்பிடுறதில்ல... அதுவும் இல்லாமல் ஆபிசியல் விசிட் இல்ல... உங்க ஹோட்டலுக்கு எப்ப வந்தா என்ன எப்போதும் சுத்தமா ஆரோக்யமான உணவு சாப்பிடலாமே "

"அட அப்படி இல்ல நீங்க எப்ப வேணுமினாலும் வரலாம். அப்போ காப்பி டீயாவது சாப்பிடுங்க" என்றார் எழில்வாணன்.

"கண்டிப்பா... நான் எப்போதும் உங்களுக்கு கஸ்டம்ர்தான்,  உங்க புது சமையல்காரர் கைப்பக்குவம் மசாலா டீயில கூட பிரமாதமா இருக்குமே!" என்றார் சத்யசீலன்.

"என்னது... தமிழரசனைத் தெரியுமா? தமிழரசு..." என்று சமையல் அறையை நோக்கிக் கூப்பிட்டார்.

ஏற்கனவே கண்ணாடி வழியே சத்தியசீலன் வந்து அமர்ந்ததைப் பார்த்த தமிழரசன், 'இன்னைக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ன சொல்ல காத்திருக்காரோ என்று நினைத்தபடி கவனமாக மசாலா டீ தயார் செய்து கொண்டு வந்தார்.

"தமிழு... ஒனக்கு சாரை எப்படித் தெரியும்?" என்றார் எழில்வாணன் ஆச்சரியத்துடன்.
"இதுக்கு முன்ன கற்பகம் ஹோட்டலில் வேலை பார்க்கும் போதே செக்கிங் வந்தவரு என் சமையலைப் புகழ்ந்து இருக்காரு... சார்!" என முந்திக் கொண்டார் தமிழரசன்.

கையில் வைத்து இருந்த கோப்பையை வாய்க்கு கொண்டு போகும் முன்னமே... "என்ன தமிழரசன், ஏலக்காய கம்மியா போட்டு இருக்கீங்க போலிருக்கே! வாசனையிலேயே தெரியுதே!" என்றார் சத்யசீலன்.

"அதானே பாத்தேன். குத்தம் சொல்லாம இவரால இருக்க முடியாதே!" என்று பொருமிக் கொண்டார் தமிழரசன்.

மசாலா டீயை ஒரு மடக்கு குடித்ததும், "ஆமா, உங்க ஹோட்டல்ல எப்பவும் 'த்ரீ ரோஸஸ்' தானே இப்ப என்ன 'லிப்டன் ரெட் லேபிள்' வாங்குறீங்க போல" என்றார்.

"எப்படி இது? ஒரு மடக்கு டீயைக் குடிச்சதும் டீத் தூள் கம்பெனி பேர் எல்லாம் கூட சொல்லுறீங்களே!" என எழில்வாணன் ஆச்சரியப்பட்டார்.

'எந்த கம்பனித் தூள்ன்னு மட்டுமா... எந்த எஸ்ட்டேட்ல விளைஞ்சதுன்னு கூட சொல்லுவாரு...' என மனதில் நினைத்துக்கொண்டார் தமிழரசன்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழரசன் வேலை பார்த்த கற்பகம் உணவகத்திற்கு சோதனைக்கு வந்திருந்தார் சத்யசீலன். மதிய உணவு சாப்பிட்டு விட்டு, முதலாளியிடம் சமையற்காரரை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் வந்து முன்னாள் நின்ற தமிழரசனிடம்,
"நீங்க தான் சமையலா?"

"ஆமாங்க சார்"

"சமையல் அறையை நல்ல சுத்தமா வச்சிருக்கீங்க... மதிய உணவுக்கு இவ்வளவு கூட்டம் வந்தாலும் சமையல் பண்ணும்போது பரிமாறும் போதுன்னு எப்போதும் சுத்தமா இருக்கு... சாப்பாடும் நல்லாத்தான் இருக்கு, ஆனா இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கணும்.

"எதுல சார்?"

"சாதத்துல அஜினமோட்டோ போட்டு இருக்கீங்க... கொஞ்சம் கரிக்குது... உடலுக்கும் கேடு இனிமே கள் உப்பு  போடுங்க அப்புறம் சாதம் அடிப்பிடிச்சி இருக்கு கரிஞ்ச வாசனை வருது..."

"ஒரு அண்டாவில் 25 கிலோ அரிசி போட்டு வடிக்கிறேன் அதில் பக்குவம் பார்த்து வடிக்கும் முன்ன கொஞ்சமா தீஞ்சிருச்சி..."

"ஒரு கொடத்து தண்ணில ஒரு துளி விஷம் கலந்தாலே போதுமே... அப்புறம் வத்தக் குழம்புல சுண்ட வத்தல சரியா வதக்கல குழம்பு கொஞ்ச கசப்பா இருக்கு..."

"வேற எதுவும் குறை இருக்கா?"

"மத்ததெல்லாம் சின்ன சின்ன குறை தான், உங்கள் சமையல் நல்லா இருக்கு... உங்களுக்கு நல்ல கைப் பக்குவம் இருக்கு... இது மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கவனமா இருங்க சரியா... அப்புறம் ரசத்த ரொம்ப கொதிக்க விட்டுருக்கீங்க... கொதி வந்த பிறகு கருவேப்பில, கொத்தமல்லி போட்டதும் இறக்கிடணும் இல்லனா கடைசியா சாப்பிடுறவங்களுக்கு ரசம் கசக்கும்."

கொதித்த எண்ணெயில் போட்ட அப்பளம் போல பொரிந்து விட்டு போய் விட்டார்.

'இன்னைக்கு புதுசா சேர்ந்து இருக்கிற ஹோட்டல்ல டீயோட நிப்பாட்டிட்டாரு... இல்லனா இட்லி வட்டமா இல்ல, தோசை ஏன் சதுரமா இல்லனு ஏதாவது குறை சொல்லி இருப்பார் என நிம்மதியானார் தமிழரசன்.

"நான் கை கழுவிட்டு வரேன்" என்று எழுந்து போனார் எழில்வாணன்.

"உங்க கைப்பக்குவத்துல டிஃபன் சாப்பிடலையேன்னு வருத்தப்படாதீங்க, இன்னும் கொஞ்ச நேரம் கழித்துத்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவேன். உங்களோட சமையல்ல எண்ணெய், காரம், மசாலா எல்லாமே சரியான அளவுல இருக்கும். நான் உங்க சாப்பாட்டுக்கு அடிமை, முதலில் வேலை பார்த்த ஹோட்டல் போயி விசாரிச்சிட்டுத்தான் இங்க வந்தேன். நான் ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிடுற பழக்கம் உள்ளவன். அடுத்த முறை கண்டிப்பாக உங்கள் சமையலை ருசி பாக்குறேன்." என்று கூறி விட்டு எழுந்த சத்யசீலன், மேஜையின் மீது வாளியில் இருந்த சாம்பாரைப் பார்த்ததும்,

" சாம்பார சரியா கொதிக்க வைக்கல போல பெருங்காய வாசனை தூக்கலா இருக்கு..." என்று கூறிவிட்டு வாசலுக்கு வெளியில் தமிழ்நாடு அரசு (FSSAI) என்று எழுதி இருந்த வாகனம் நோக்கி நடந்தார்.

குறள் 27:
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
பொருள்:
சுவை, காட்சி, தொடு உணர்ச்சி, ஓசை, மணம் ஆகிய ஐந்து உணர்வுகளை நுகரும் ஐம்புலன்களின் பலனை உணர்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவனை உலகம் போற்றும்.

அ.வளர்மதி 

Sunday, 14 October 2018

விலை நிலம்


விலை நிலம்

  
வேலுச்சாமி தன் வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஆகாசத்தையே எப்பவும் அன்னாந்து பாத்துட்டு இருந்தாக்க கழுத்து சுளுக்கி கிட போவுது!" என கிண்டலாக சொன்னாலும்... உள்ளுக்குள் வடிவுக்கும் பெருங்கவலை தான். மழை பெய்யாமல் போனது அந்த ஊர் மக்களோடு சேர்த்து வடிவோட குடும்பத்தையும் வெகுவாக பாதித்திருக்கிறது!

"மொதல்ல தலையிலெ இறுக்கறெ அரசி மூட்டையை எறெக்கு ஒங் கழுத்து சுளுக்கிக்கெட போவுது... ரேஷன் கடையிலெ இருந்து எம்மாந்தூரம் சுமந்துட்டு வந்துருக்கெ..."

அரசாங்கம் ரேஷன் அரிசி வழங்கினாலும் பெரும்பாலான குடும்பங்களுக்கு அது மாதம் முழுவதும் உண்ண போதுமானதாக இல்லை. தேவையான அரிசியை வெளிச் சந்தையில்தான் வாங்க வேண்டி இருந்தது, கடும் விலைவாசி உயர்வினால் மாதக் கடைசியில் வெளிச் சந்தையில் அரிசி வாங்குவது  கூட இயலாத ஒன்றாக ஆகி விட்டது.

"வந்ததும் வராததுமா... அங்கனெ என்னத்தெ கெடந்து ரேடியோ பொட்டிய நோண்டிட்டு இருக்கவெ?" எனக் 
கேட்ட வேலுச்சாமிக்கு...

"மழயப் பத்தி ஏதும் நல்ல சேதி சொல்லுதாவலானு கேட்கத்தான் என்றாள் வடிவு.

"அலாட்டா இருக்கோணும் பெருமழ பெய்யபோவதுன்னானுவ... என்னத்தெ..."

"ஏன் இப்பம் சலிச்சிகிறீக என்னாச்சி?"

"ஒரிசால பேய்மழ கொட்டுதாம்புயலு ஆந்திரா கரையோரம் கடக்குதாம்... நைனா டீக்கடையில பேசிக்கிட்டாகெ..."

வானம் பார்த்த பூமிகரிசல் காட்டில் மூன்று ஆண்டுகளா சரியா மழை இல்லாமல் ஆடு,மாடுகளுக்கு கோரப்புல் கூட முளைக்கவில்லை. இந்த வருடமும் மழை இல்லை என்றால் சாப்பாட்டுக்கு கூட பிரச்சினை ஏற்படும்.

"என்ன ரோசனை பெலமா இருக்கு... சாப்பிட வாங்க" என்று வடிவு கூப்பிடவும் "பசி இல்ல நீ சாப்பிடு..." என்றவனை ஏற இறங்கப் பார்த்தாள்.

"காணி நெலத்துல உழுது பயிரிட்டுவெள்ளாம எடுத்து வித்த நெல்லு போக மீந்தத குதிருல கொட்டி நல்ல நாளு பொழுதுக்கு நெல்லு குத்தி தின்ன காலம் போயி... இப்பெ குருசாமி அண்ணாச்சி கடையிலெ கடனுக்கு சிட்டை போட்டு புலுங்க அரிசிரேஷன்ல புளுத்த அரிசி வாங்கி திங்கறெ நெலமெ ஆகிட்டே..."

"இப்பெ ஏன் கெடந்து வெசனபடுத்தியெ... இந்தெ கஞ்சியெ குடியும்..." கும்பாய பக்கத்தில் நகர்த்தினாள் வடிவு.

"உழுறெ நெலத்துலெ வானக்கால் தோண்டி மெத்த வீடு கட்டுனா ஒலகம் என்னெ கெதியாகும்?"

"செத்த நேரம் பேசாட்டிருங்க... மொதெ கஞ்சியெ குடிங்கெ..."

"இப்பெ கஞ்சி தான் முக்கியமா போயிட்டா?

"ஆமாம்! ஊரு ஒலகெத்துலெ பாதி ஒழவுக்காரவுக நெலெத்தெ வித்து புட்டு நெம்மதியா இருக்காகெ... நீங்க மட்டும் தான் கருச காட்டுல வெள்ளாமெ பண்ணி கஸ்டபடுதியெ..."

வேலுச்சாமி மனைவி சொல் கேட்டுகும்பாயில் இருந்த பழைய கஞ்சியில் புளித்த மோர் விட்டு கலக்கி மோர் வத்தல், வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட ஆர்மபித்தான். கஞ்சி கஷ்டப்பட்டு இறங்கியது.

கஞ்சியைக் குடித்துவிட்டுக் கை கழுவ வாசலுக்கு வந்த போது... எதிரில் அரைக்கால் டவுசர் டயர் வண்டி கையில் குச்சியோடு ஒரு பொடியன் நின்றிருந்தான்.

"யாருங்கெ அது?" என்று வடிவு வெளியே வர...

"அய்யா கடப்பாக்கி கணக்கு பாக்கணுமாம் கடைச் சிட்டைய வாங்கிட்டு வரச் சொன்னாரு..." என்றான் மளிகைக் கடைக்காரர் குருசாமியோட மகன்.

கொஞ்ச நேரம் கதி கலங்கி இருவரும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு நிற்க, கணவன் "ம்ம்ம்.." என தலையாட்ட வடிவு வீட்டினுள் சென்று நிலைக் கதவுக்கு மேலே இருந்த கடைச் சிட்டையை பொடியனின் கையில் குடுக்கவும்சிட்டையை டவுசர் பையில் சொருகி விட்டு "கீக்.. கீங்ங்க்..." என்று வாயில் நுரை தள்ள சத்தம் கொடுத்துக்கொண்டே குச்சியால் டயரை அடித்து விரட்டிக் கொண்டு  ஓடினான் பொடியன்.

"என்னெங்கெ இப்படியே போனாக்கெ என்னெ செய்யெமேலத்தெரு பால்காரர்கிட்ட வட்டிக்கு பணம் கேளுங்களேன் கடப் பாக்கி கொடுக்கணும்."

"பத்து வட்டிக்கு பணம் வாங்கி அதெ எப்ப எப்பெடி கட்டுறதாம்?"

"துபாய்காரரு நெலத்துல போர் போட்டாகளே தண்ணி கேட்கலாமா..."

"ஒனக்கு என்ன கோட்டிகீட்டி பிடிச்சிட்டாஅந்த பயெ பணம் இருக்குன்னு திமிருலெ போர் போட்டு தண்ணியெ கேன்லெ அடைச்சி விக்கவும் தான ஊர்ல உள்ள கெணத்துல எல்லாம் தண்ணி தூருக்கு போச்சி, ராட்டினத்துல மாங்கு மாங்குன்னு இழுத்தாக்கெ கால் கொடம் தண்ணி தான் வருது... அவனோட போர்ல கூட தண்ணி இப்ப மூணு நாலு நாளானா கூட தண்ணி ஊருறதில்லெ..."
"ஓ..."
"என்ன ஓ...னு இழுக்கிறவெ... ராமசாமி தோட்டத்து கெணத்துலெ ஊர் ஜனமே குளிச்சுதுணி அலசிவீட்டுக்கு ரெண்டு மூணு கொடம் தண்ணி எடுத்துட்டு போகுமே இப்பெ அதுக்கும் வழி இல்லாமப் போச்சே..."

துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டான்.
வானம் பாத்தெ கரிசல் பூமில மழை இல்லெனா வெவசாயி மானத்தோட உசுரு வாழ முடியாது... கோவில்பட்டி செஞ்சுரி பட்டாசு கம்பனிலெ வேல கேட்டு இருந்தேன் என்னன்டு ஒரு எட்டு போயி கேட்டுட்டு 
வாரேன்... மறுக்கா அந்த ரியல் எஸ்டேட் புரோக்கரு வந்தா நெலத்தெ விக்கெ சம்மதம் சொன்னேன்னு சொல்லிபுடு..." துண்டை உதறி விட்டு தெருவில் இறங்கி நடந்தான்.

கணவன் உச்சி வெயிலில் காய்ந்து கிடந்த கரிசல் காட்டு வரப்பில் நடந்து போவதை கண் கலங்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வடிவு.

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
பொருள்:
உழவர்கள் வருவாய் ஈட்ட உதவும் மழை வளம் குறைந்து விட்டால்உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலைக் கைவிட்டு விடுவார்கள்.


அ.வளர்மதி 

Friday, 12 October 2018

மழை நீ


மழை நீ 


எப்பவும் கலகலவென இருக்கும் அந்த காரை வீடு இன்னைக்கு கம்முன்னு இருக்கு. வீட்டு முன்னால இருந்த தாழ்வாரத்து திண்ணையில பள்ளிக்கூடம் முடிஞ்சி வந்த பத்துப் பதினைஞ்சி பிள்ளைக வீட்டுப்பாடம் எழுதிட்டு இருக்குக, பாடம் சொல்லி கொடுக்கற வாத்தியார திண்ணையில காணல...

சாயங்கால வேளையில திண்ணையில அமர்வார் வாத்தியார். அவரோட முகம் தெரியுறாப்ள புள்ளயளும் ஒக்காந்து இருக்கும். காரமா மிளகு, இஞ்சி சுக்கு போட்ட சுக்கு காப்பிய சாரதா கொண்டு வந்து முன்ன வைக்க... குடித்து விட்டு 'ம்கூம்...  ம்கூம்...'னு சத்தம் வந்தா பாடம் ஆரம்பமாவ போவுதுனு அர்த்தம்.


ரெண்டு நாளா ரூமுக்குள்ளயே அடஞ்சி கெடக்குற புள்ளய நெனச்சு நடு வீட்டுல சாய்வு நாற்காலில சாய்ஞ்சி படுத்து இருந்த அழகப்பன் வாத்தியாரு ரொம்ப சங்கடப்பட்டாரு...

நிதி மேலாண்மை படிச்சி முடிச்சுட்டு வேலை தேடுன மகன் அறிவழகனுக்கு வெளிநாட்டுல வேலை கெடச்சிருக்கு... அந்த வேலைக்குத்தான் போவேன்னு ஒத்தக்கால்ல நிக்குற அவன்ட்ட எப்பிடி புரிய வைக்கனு Dஅவருக்கு தெரில...

வீடு ரெண்டு நாளா இருளோனு கெடக்கு மனைவி சந்திரா ஒரு பக்கம் உம்ம்னு அவர்கிட்ட பேசாம இருக்கா... அறிவு பய வேற கம்முன்னு இருக்கான்.

 எப்பயும் ரூமே கதினு கெடக்கான் அறிவழகன், சரியா சாப்பிடுறதில்ல... பேசுறதில்ல... இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒரு முடிவோட மகனோட அறைக்குப் போய் கதவத் தட்டுனாரு...

குப்புற படுத்துகிட்டிருந்த அறிவழகன் அப்பாவப் பாத்ததும் மறுபக்கம் திரும்பி படுத்துக்கிட்டான். "அறிவு..." மெல்ல கூப்பிட்டாரு...

"ஒன்ட பேசணும் டா.. எந்திரிச்சு ஒக்காரு...'

"என்ன பேசணும்..."

"இப்ப எதுக்கு நீ இப்பிடி பண்ற... நான் ஏன் வெளிநாட்டு வேல வேண்டாம்னு சொல்றேன்னு கொஞ்சமாது யோசிச்சி பாத்தியா நீ?"

"யோசிக்க என்ன இருக்கு?" கோவம் குறையாம முனங்குனான்.

"டேய்! ஒன்ன கஸ்டப்பட்டு படிக்க வச்சது எதுக்குனு நெனச்ச? அந்தக் காலத்துல நாம அடிமைகளா இருந்தோம்.. அப்ப ஒன்னோட தாத்தா நாட்டுக்காக உயிரக் குடுத்தாரு... நானும் நல்லா படிச்சி வாத்தியாரா அரசாங்க உத்யோகத்துல இருக்கேன். என்னோட படிப்பு நம்ம மக்களுக்கு ஒதவணும்னு தான் இந்த வேலைக்கே வந்தேன்... நமக்கு உணவு குடுக்குற உழவர்களோட பிள்ளைகளுக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் உதவி செய்யுறேன், அதுல கெடைக்குற நிம்மதி நமக்கு போதும் டா..."

"உங்களுக்கு போதும்... எனக்கு நிறைய சம்பாதிக்கணும்... இங்க இந்த ஊருல உக்காரதுக்கா நான் எம்பிஏ படிச்சேன்"

கத்துனான் அறிவழகன்.


"இந்த ஊருலயே ஒன்ன யாருடா இருக்க சொன்னா... வெளியூர்ல போய் வேல பாரு..."

"வெளியூர் போறதுக்கு... நான் வெளிநாடு போவேன்ல... நல்ல சம்பளம் கிடைக்கும்ல..."

"ஒன் படிப்பு நம் நாட்டுக்கு யூஸ் ஆகணும்னுதான் நான் சொல்றேன். நீ சொன்ன மாதிரி வெளிநாட்டு வேலைல காசு வரும் ஆனா திருப்தி கிடைக்காது டா..."

"நல்ல வேலை, கை நிறைய காசு வந்தா திருப்தியா இருக்கும்ல..."

"கொஞ்ச நாளைக்கு வேணா வெளிநாட்டுல வேல பாக்குறது திருப்தியா, பெருமையா இருக்கும்... அதுக்கு அப்புறம் மனசு தவிக்கும் டா..."

"என்னப்பா நீங்க..."

"இங்ஙன வேல பாத்தா நாங்களும் ஒன்ன அப்பப்ப வந்து பாத்துக்குவோம்ல... நீயும் நல்ல நாளு பொழுதுனா எங்க கூட இருப்ப... ஒனக்கும் வாழ்க்கை வெறுமையா இருக்காது டா..."

"அங்கயேவா இருக்க போறேன்... லீவுக்கு வருவேன்ல..."

"நம்ம படிப்பு நம்மளுக்கு பயன்படணும், ஒனக்கு இந்தியன்னு அடையாளம் குடுத்த நாடு இது... கல்விய இலவசமா குடுத்த நாடு இது... உனக்கு பாதுகாப்பு குடுத்த நாடு இது... உன்ன பத்திரமா பாத்துக்கிட்ட இந்த நாட்டுக்கு உன் படிப்பு பயன்படலனா, நீ படிச்சது வீண் டா... யோசிச்சு பாரு..."

அறிவழகன் ஒன்னுமே பேசாம அமைதியா இருந்தான்.

"இப்ப எதுக்கு அவனுக்கு ஜல்லியம் குடுக்குறீக..." என்றாள் சந்நிரா.

"அண்ணைக்கு ஒங்க அண்ணன் துபாய்க்கு போறேன்னு கிளம்பும் போது ஓ...ன்னு ஒப்பாரி வச்ச..." என திரும்பி மனைவியைப் பார்த்தார்.

"அது சரி; அப்ப அழுதது வாஸ்தவம்."

"என்னது வாஸ்தவம்?"

"அண்ணைக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணலனா அண்ணன் வெளிநாடு போயிருப்பான்..."


"ஒத்துகிட்டியா?"

"ஒத்துக்கிட்டேன்."

"பின்னெ... இப்ப ஒன் அண்ணன் இந்த ஊருலயே பெரிய வெவசாயி... எத்தனை குடும்பத்துல அவனால அடுப்பு எரியுது, பல பேரு வவுறு நெறயுது..."

"நான் அதெச் சொல்லலே..." மீண்டும் ஆரம்பித்தாள். வாத்தியார் பழையபடி குறுக்கிட்டு, "ஒத்துக்கிட்டே இல்லே? அந்த இடத்திலே பேச்செ நிறுத்து, விஷயத்தெ பெருசாக்காதெ" என்றார்.

சந்திரா எதுவும் பேசல...

அமைதி நிலவியதும், "போனது போகட்டும். இப்பம் விஷயத்துக்கு வா அறிவுக்கு என்ன சொல்லுதெ? அதெச் சொல்லு முதல்லே..."

"அறிவு... அப்பா சொல்லுதெ கேளுடா... எங்களுக்கும் ஒன்ன விட்டா யாருடா இருக்கா...?"


"இதுக்கு மேலயும் பிடிவாதமா நீ வெளிநாடு போகணும்னு நெனச்சா போ... உன் ஆசைக்கு நான் குறுக்க நிக்கமாட்டேன்னு..." சொல்லிட்டு அடக்க முடியாத கண்ணீரோட வெளிய வந்தாரு அழகப்பன்.

அதுவரைக்கும் கோவமா இருந்த அறிவழகனுக்கு அப்பா, அம்மாவோட கண்ணீரும் அவர்களோட வாதங்களும் ரொம்பவே சுட்டுச்சு... தன் நாட்டுக்கு தான் தன்னோட படிப்பு பயன்படணும்கிற உறுதி அவனுக்குள்ள வந்துருச்சு.

வெளியில திண்ணையில இருந்த ஒரு புள்ள சத்தம் போட்டு படிச்ச திருக்குறள் நடு வீடு தாண்டி உள் அறை வரை கேட்டுச்சி... 
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்."
       
(அதிகாரம் 2: வான் சிறப்பு, குறள்–17)

பொருள்:


ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல் கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

அ.வளர்மதி 


நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...