ஓநாயின் முகமூடி
வீட்டில் நிலவிய அந்த அமைதி என்னுள் பயத்தை அதிகமாக்கியது, மூலைக்கு ஒருவராய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
எதிர்பார்த்த விடயம்தான்.
தயங்கியபடியே மெல்ல டிராவல் பேக்கை சோஃபாவில் வைத்து விட்டு என் அறையினுள் சென்றேன். மாமா பேசுவது கேட்டது.
“என்னடி கம்னு இருக்க... வந்துட்டாள்ல...? கேளுடி...”
“கேக்கறேன் கேக்கறேன்... ஓடியா போயிடப் போறா வரட்டும்.”
அக்கா பேச்சில் கவலை தெரிந்தது. அக்கா பாவம் அப்பாவி. சுயமாகப் பேசத் தெரியாது. யார் பக்கமும் சாய முடியாமல் அழ மட்டுமே செய்வாள்.
முகம் கழுவி விட்டு கண்ணாடி முன் நின்றேன், வெற்று நெற்றியில் என்னைப் பார்க்க ஜெயராணியின் நகல் போல் தெரிந்தது. என் உயிர்த் தோழி. அவளுடைய நல்ல மனசுக்கு இது தாங்க முடியாத கொடுமை.
கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட முடியவில்லை. கோர விபத்தில் தன் கணவனை இழந்துவிட்டாள்.
அன்று ஜெயா கணவனின் பூத உடலை உலுக்கி ‘ஏங்க எந்திரிங்க... எந்திரிங்க...’ என்று கதறிக் கதறி அழுதபடியே வளரு.. உன் அண்ணனை எழும்ப சொல்லுடி என்கிட்ட பேசச் சொல்லுடி எனச் சொல்லி அழுது பலமுறை மூர்ச்சையாகி மயங்கி விழுந்தது என்னை இரண்டு நாள் தூங்க விடவில்லை. வேலையும் செய்ய முடியவில்லை. மனம் ரணமாய் வலித்தது.
ஜெயாவுக்கு அப்பா அம்மா இல்லை, கணவர் வீட்டில் வெறுமனே வந்தவள் என்று அலட்சியம். ஆனாலும் அவள் கணவனோ தன் காதல் மனைவியை கலங்க விடாமல் தாய் தந்தை இல்லாத குறைய நீக்கி ஒரு குழந்தையைப் போலவே பார்த்துக் கொண்டார். ‘இவள் ஜாதகக் கோளாரினால் தான் அவளுடைய கணவன் இறந்தார்’ என இறந்த அன்று கூட கத்தி கூச்சலிட்டுப் போனார்கள். ஆறுதல் சொல்ல கூட ஆளில்லாமல் எப்படி தனிமையில் வேதனையைத் தங்கிக் கொள்வாளோ என்ற தவிப்பில் இரண்டாம் நாள் வேலை முடிந்து அக்காவிடம் தகவல் சொல்லிவிட்டு நேரே அவள் வீட்டுக்குப் போய்விட்டேன். மூன்று நாள் தங்கியும் விட்டேன்.
“முழுசா மூணு நாளு வயசுப் பொண்ணு வீட்டுக்கு வரல ஊரே சிரிக்குதுடி... இது என்னடான்னா அலட்டிக்காம வந்து நிக்குது. வெக்கங்கெட்ட ஜென்மம்...”
அக்கா கவலையில் இருந்தாள். அவளுக்கு எப்படி ஆரம்பிக்க என்ற யோசனை... நானும் அவர்களாவே பேசட்டும் என மௌனமாக இருந்தேன். குறுக்கிட்டால் விபரீதமாகிவிடும்.
உயிருக்கு உயிரான தோழி உடைந்து உருகி அழுவதைப் பார்த்து ஆறுதல் சொல்லி கூடவே நானும் கரைந்து அழுத அந்த மூன்று நாட்கள் மிகக் கொடிய அனுபவம். ஆனாலும் ஜெயாவுக்காக எத்தனை கஷ்டங்களையும் அனுபவிக்கலாம்.
தந்தையை இழந்து இருண்டு போயிருந்த என்னை தன்னுடனே வேலையில் சேர்த்துக் கொண்டு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்து வாழ்வில் வெளிச்சம் கொண்டு வந்தாள்.
இன்னமும் நினைவிருக்கிறது. நான் வேலையில் சேர்ந்திருந்த சமயம்... அன்று வேலை முடிந்து வெளியே வந்த போது எதிரே டூரிஸ்ட் பஸ் ஓன்று வந்தது. பஸ்ஸில் இருந்த குற்றாலம் செல்லும் கல்லூரி மாணவர்கள் எங்களைப் பார்த்து கையசைத்தார்கள். நான் முகத்தைச் சுழித்து மறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஜெயா பதிலுக்கு கை ஆட்ட பஸ்ஸில் இருந்து ‘ஹோ’ வென்று பலத்த ஆரவாரச் சத்தம். எனக்கு ஜெயா இப்படி செய்தது வியப்பாய் இருந்தது.
“என்னடி இப்படி பண்ணிட்ட...? காட்டுப்பசங்க காட்டுத்தனமாக கையாட்டினா பதிலுக்கு கையாட்டுறதா...?” என கோவப்பட்டேன்.
ஜெயா கலகலவென சிரித்தாள்.
“எதுடி காட்டுத்தனம்? நான் கையசைத்ததா? நீ முகத்தைத் திருப்பிக்கிட்டதா?” நான் மௌனமாய் இருக்க அவளே தொடர்ந்தாள்:
“அவங்கள்ல ஒருத்தன் தனியா ரோட்ல நடந்து வந்தா நம்மைப் பார்த்து கையாட்டப் போறதில்ல... கூட்டமா இருக்கிறப்போ உண்டாகிற உற்சாகத்தோட விளைவு இது. நான் ஒருத்தி கையசைத்தது எத்தனை பேர் மனசுல சந்தோஷத்தைக் கொடுத்து ஆரவாரத்தை வெளியே கொண்டு வருது பார்த்தியா? அடுத்தவங்களை சந்தோஷப்பட வைக்க மாயாஜாலம் ஒண்ணும் பண்ணத் தேவையில்லை. இந்த மாதிரி சின்னச் சின்னச் செய்கைகள் போதும்.”
அவள் சொல்வதைக் கேட்டு பிரமித்துப் போனேன். ஒரு சிறிய கையசைப்பில் இத்தனை புதைந்து இருக்கிறதா? ஜெயாவை முதன் முதலில் உணர்ந்தேன். உடம்பு சிலிர்த்தது.
“முருங்கமரத்து முனி மாதிரி உம்முன்னு நின்னுகிட்டு! நாங்க மானத்தோட நடமாடுறது உனக்கு பிடிக்கலயா? “
மாமாவை தொடர்ந்து அக்காவும் ஆரம்பித்தாள்,
“வயசுப் பொண்ணு ஒருத்தி அந்நிய வீட்டுல மூணு நாளு இருந்துட்டா, இங்க இருக்கிற சொந்தக்காரங்களுக்கும் ஊர்ல இருக்குற அம்மாவுக்கும் என்னடி பதில் சொல்லுறது?”
அக்கா அதட்டலாய்க் கேட்டாள். எதைச் சொல்வது ? எப்படிச் சொல்வது? சாத்தியமில்லை, ஜெயா உணர்ந்து சிலிர்க்க வேண்டிய ஒரு தென்றல். அவளை வெறும் வார்த்தையில் இவர்களுக்குப் புரிய வைப்பது கஷ்டம். மனசு பொறுக்காமால்தான் ஜெயாவை பார்க்கச் சென்றிருந்தேன். ஆனால் தங்க வேண்டிவரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. என்னைப் பார்த்ததும் ஜெயாவின் தம்பி வாசு கதறி அழுதான்.
“அக்கா எனக்குப் பயமா இருக்குக்கா... மாமவைப் பரிகொடுத்த மாதிரி அக்காவையும் இழந்துடுவேனோன்னு பயமாயிருக்கு. சாப்பிட மாட்டேங்கிறா... எதும் பேசினா முழிச்சி முழிச்சிப் பார்க்குறா... பாத்ரூமுக்குள்ள போனா மணிக் கணக்கில் இருந்துகிடுறா... லேடீஸ் யாரும் துணைக்கு இல்லாததால கஷ்டமாயிருக்கு . தற்கொலை பண்ணிக்குவாளோன்னு பதட்டமாயிருக்கு.”
ஜெயாவைப் பார்த்தேன். நான் வந்ததைக் கூட அறியாமல் படுத்திருந்தாள். அவளுக்கே உரிய மலர்ச்சி மறைந்து போயிருந்தது. இவ்வளவு பெரிய தண்டனை ஏன்? என்ன பாவம் செய்ததாள்? கண் கலங்கியது.
“கடைப் பக்கமே போக முடியல. அந்த ஜெயாக்கு ஒரு தம்பி இருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இவ அங்க போயிருக்கான்னுட்டு ‘கன்னாபின்னா’னு பேசுறாங்க.”
“ஐயோ! வாய் கூசாமப் பேசாதீங்க!” என்றது அக்கா தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள். மாமா அக்காவைச் சட்டை செய்யாமல் அடுத்த இடியை தலையில் இறக்கினார். “ அந்தப் பொண்ணோட தொடர்பு வெச்சிருக்கிறதே அவனுக்காகத்தான்’னு பேசிக்கிட்டாங்க.”
நான் நிலைகுலைந்து போனேன். கீழே விழுந்து விடுவோமோ என்று பயத்தில் சுவரை இறுகப் பற்றிக் கொண்டேன்.
“அக்கா! என்னை மன்னிச்சிடுக்கா... மாமா நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் தப்பு பண்ணல... ஜெயா ரொம்ப நல்லவ. இந்த வயசில இப்படி ஒரு கொடுமை நடந்ததை என்னால தாங்க முடியல. அவளுக்கு ஆறுதலா இருக்கட்டும்னுதான் லீவு போட்டு அவ பக்கத்திலேயே இருந்துட்டு வந்தேன்!”
மாமா சீறினார்: “நீ சொல்லுவ தப்பு பண்ணலைன்னு, அதை இந்த ஜனங்களுக்கு யாரு எடுத்துச் சொல்றது? ஊர்ல பேச்சு வந்திருச்சே... இனி என்ன செய்யப் போற ? ‘நான் தப்பு பண்ணல! தப்பு பண்ணலனு தண்டோரா அடிக்கப் போறியா...? “
நான் பேச வார்த்தையின்றி தலையைக் குனிந்து கொண்டேன். மாமா தொடர்ந்தார்:
“உன் தங்கச்சிக்கு பேசாம காலாகாலத்தில ஒரு பையன பாத்து கல்யாணம் பண்ணி வெச்சிருவோம். வர்றவன் வந்து கொடுக்கிறதைக் கொடுத்தா இவ தானா வழிக்கு வந்திருவா.”
பிரச்னை முடிந்தது. குற்றப் பத்திரிக்கை வாசித்து தண்டனை சொல்லியாயிற்று.
‘வாழ்கையில் கிடைக்கும் அற்புதமான பரிசு---திருமணம்’ என்று எங்கோ படித்த ஞாபகம். இங்கே திருமணம் தண்டனையாக அறிவிக்கப்படுகிறது.
மாமா சொன்ன தீர்ப்பு அங்கீகரிக்கப்பட்டது. போனில் மாமா எண்களை அழுத்த ஆரம்பித்தார். அநேகமாக முதல் அழைப்பு அம்மாவுக்காகத்தான் இருக்கும். அக்கா அடுப்படிக்குப் போனாள். நான் உள் அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தேன்.
மாமா இன்னும் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
எனக்குத் தலை வலிக்கிறாற் போல இருந்தது. வெளி வராந்தாவிலிருந்த மூங்கில் ஊஞ்சலில் சோர்வோடு அமர்ந்தேன்.
“பெரியப்பா இருக்காங்களா?” என்று தெருவில் குரல் கேட்டது. எட்டிப் பார்த்தேன் பக்கத்து தெரு மாலா அக்காவின் பையன்.
“இருக்காங்க. எதுக்குடா?”
“மல்லிகா சித்தி வீட்ல கரண்ட் இல்ல பியூஸ் போட ‘சித்தப்பா வரச் சொன்னாங்களாம்’ எங்க சித்தி கூப்ட்டு வரச் சொன்னாங்க.”
இது பொய். பச்சைப் புளுகு. இன்று திங்கட்கிழமை. ‘லாயல் மில்லில் வேலை பார்க்குற மல்லிகாவோட கணவருக்கு மதிய ஷிப்ட். இந்நேரம் அவர் வேலைக்குப் போயிருப்பார். அந்த கேடு கெட்ட ஜென்மம் அக்கா மகனை தூது விட்டிருக்கிறது!
சத்தம் கேட்டு வெளியே வந்தார் மாமா. “போடா , வர்றேன்னு சொல்லு “ என்று அதட்டி அவனை விரட்டிவிட்டார்.
பின்பு எலக்ட்ரிக் சாமான்கள் இருந்த கட்டைப் பை ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு நாசூக்காய் என்னைத் திரும்பிப் பார்க்காமல் மல்லிகாவின் வீட்டுக்கு நடந்தார்.
என்னுள் ஆவேச அலை... ஆத்திரம்... நெற்றியைப் பற்றிக் கொண்டு எழுந்தேன். அக்கா காபி கொண்டு வந்து நீட்டினாள். பாவம் வெளி உலகத்தைப் பற்றி தெரியாத அப்பாவி. நிறைய அழுது இருந்தாள். தங்கையை தன் கணவனின் வார்த்தைகள் காயப் படுத்திவிட்டனவே என்ற வருத்தம் அவளுக்கு. அதற்கே இவ்வளவு அழுகை... தங்கையை மாறி மாறிப் பிறாண்டியது ஒரு ஓநாயின் நகங்கள் என தெரிய நேர்ந்தால்....
இவ்வளவு நேரமும் திட மனத்தோடு இருந்த என்னால் இப்போது அழாமல் இருக்க முடியவில்லை.
No comments:
Post a Comment