Saturday, 15 September 2018

சோத்து கிட்ணன்

சோத்து கிட்ணன் 

(Based on True Story)

1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31'ம் தேதி, ஊரில் உள்ள சுவர்க்கடிகாரங்கள் பன்னிரண்டு மணி அடித்து முழங்கியது. ஊர் ஆரம்பத்தில் இருந்த 'புனித அந்தோனியார்' ஆலயத்தில் புது வருட ஆராதனையில் மக்கள் பாட்டு பாடிக் கொண்டிருந்த போது...
அதே ஊரில் பத்தடி நீள அகல குடிசை வீட்டில் பேச்சியம்மா, பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் பிரசவத்தை கவனிக்க பொன்னம்மா பாட்டி தவிர யாரும் அங்கில்லை.
பேச்சியம்மா மேற் கூரையின் ஓட்டை வழியே வெறுமையான வெள்ளை நிலாவைப் பார்த்தாள், கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் கன்னங்களில் இறங்கி வெறுமையாய் இருந்த கழுத்தில் நீர்த்தாலிக்கயிறாய் சுற்றி மங்கலமாக்கியது.

மாட்டு வண்டியில் கருப்பட்டியை ஏற்றிக்கொண்டு விருதுநகர் சந்தைக்குப் போய்விட்டுத் திரும்பி வரும் போதெல்லாம் கையில் 'மருத' மல்லிகைப் பூவும், ஓலப்பெட்டியில் 'சாத்தூர்' சேவு, மிக்சர், கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாய் என வாங்கி வரும் அவள் கணவன், எட்டு மாத கர்ப்பிணியாய் இருக்கும் போது... வண்டியில் கிடத்தப்பட்டு, கழுத்தில் ஒரு மாலையுடன் இன்னொரு வண்டியில் பிணமாகத் திரும்பி வந்தான்.

புது வருட ஆராதனை முடிந்து வந்த பெண்களில் 'மேரி' பாட்டி, "தாத்தன் 'கிட்ணன்' மாதிரியே இருக்கான் பாரேன்... அவரு பேரையே வச்சிரு பேச்சி..." என சொல்லி ஆலயத்தில் இருந்து கொண்டு வந்த மண்டவெள்ளத்தைத் தண்ணியில் கரைத்து மூன்று முறை சேனை வைத்தாள்.
சொந்தக்காரிகள் சிலர் 'அருதலி' மவனுக்கு அந்த பெரிய மனுசன் பேரு ஒண்ணுதான் குறைச்சல் என முனு முனுத்தது பேச்சியம்மா காதில் விழத்தான் செய்தது.
'கிருஷ்ணமூர்த்தி' என்று தாத்தாவின் பெயரையே மகனுக்கு வைத்தாலும் அவரைக் கூப்பிட்டது போலவே 'கிட்ணன்' என்ற பெயரே நிலைத்து விட்டது. பின்னாளில் முன்னே பட்டப்பெயரும் சேர்ந்து கொண்டது.

தை பிறந்து வழி பிறந்ததால் பேச்சியம்மா ஓரளவு முன்னேறினாள், குழந்தையை நல்ல முறையில் வளர்த்து, அப்பனை மாதிரி சொந்தமாக வண்டி வாங்கி விருதுநகர் சந்தைக்குப் போகாமல், 'சீவலப்பேரி' சந்தையில் போயி கருப்பட்டி வியாபாரம் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தில் 'கயத்தாரில்' ஒரு மிராசுதாரின் தோட்டத்தில் இருந்து மல்லிகை, கேந்தி, பிச்சிப் பூக்களை வாங்கி வீட்டில் இருந்து கொண்டே மாலையாகத் தொடுத்தாள்.

லிங்கம்பட்டியில் முடிசூடா மன்னராக விளங்கிய அய்யலுசாமி, அடிக்கடி அந்த ஊரிலும் அடுத்த ஊர்களிலும் விழாக்கள் நடத்தியதால், அவள் மாலைகளுக்கு நல்ல கிராக்கி. அக்கம் பக்கம் ஊர்களிலும் பேச்சியம்மாவிடமே மாலைகள் வாங்குவார்கள். கூட்டங்கள், கட்டிட திறப்பு விழா இப்படி அரசியல் விழாக்கள் அடிக்கடி இருந்ததால் பேச்சியம்மாவின் தொழிலுக்கு மதிப்பு ஏற்பட்டது.

தோட்டங்கள் போடவும், கோழிப்பண்ணை அமைக்கவும் அரசால் கொடுக்கப்படும் கடன்களை வாங்க வேண்டியது ஒரு குடிமகனின் கடமை என்ற தேசபக்தியின் உந்தலில் அய்யலுசாமி தானும் வாங்கி சொந்தக்காரர்களையும் வாங்க வைத்து அந்த பணத்தை வைத்தே ஏழை எளிய மக்களின் நிலத்தை வாங்கிப் போட்டார்.

பேச்சியம்மா சாதாரண பூமாலை விற்பதில் இருந்து ரோசாப்பூ மாலை விற்கும் அளவுக்கு முன்னேறிய போது அய்யலுசாமி கூட்டுறவு சங்க தலைவர் ஆனார், பஞ்சாயத்து தலைவர் ஆனார்.

அப்போது பஞ்சம் வந்தது. அவள் மாலையை விலை பேச ஆள் இல்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும், தலைவர்களும் அந்த பஞ்ச பிரதேசத்திற்குள் நுழைய அஞ்சியதால் கூட்டங்கள் நடக்க வில்லை, மாலைகளுக்கு அவசியம் இல்லை.

நாட்டின் உணவு பொருட்களை சமமாக பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட ரேசன் திட்டத்தைப் பயன்படுத்தி அய்யலுசாமி "எங்க ஊரு மக்கள் ரேசன் இல்லை என்றால் பட்டினியால் செத்துருவாங்க..." என்று சொல்லி ரேசன் கடை வைத்தார். குழந்தைகள் உணவில்லாமல் வயிறு முட்டியதுபோது, அவர் வயிறும் முட்டியது. ரேசன் கடையால் நன்மைகள் ஏற்பட்டன. பக்கத்து கடலையூரில் மரக்கடை வைத்தார். கோவில்பட்டியில் ஜவுளிக்கடையும் வைத்தார். ரேசன் கடை மூலம் வயிற்றுக்கு கிடைத்ததோ இல்லையோ, கைவேலை செய்ய மரக்கடையும், எண்சாண் உடம்பில் இருசாணையாவ்து மறைக்க ஜவுளிக்கடையும் கிடைத்தது. 

லிங்கம்பட்டியும் நாட்டோடு சேர்ந்து முன்னேறியது, அப்படி முன்னேற முன்னேற பேச்சியம்மாள் மற்ற ஏழைகளுடன் பின்னேறிக் கொண்டிருந்தாள். பிரமுகர்கள் பூமாலையை விரும்பாமல் துண்டுகளையும் , பொன்னாடைகளையும் நேசிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதால் அவள் கூலி வேலைக்குப் போனாள். நடவுக்குக் கிடைத்த எட்டணாவைக் கொண்டு தன்னையும், தன் மகனையும் தற்காத்துக்கொண்டாள்.

அப்போது, கிட்ணன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். 'மக்காச்சோளத்தை' சாப்பிடும் அவனை, பெரிய இடத்துப்பையன்கள் "சோத்து கிட்ணன்" என்று அழைத்தாலும், அவன் படிப்பில் 'வேட்டைக்குப்' போகும் 'உதிரமாடன்' போல் ஆர்வமாய் இருந்தான். அய்யலுசாமி மகன் பரீட்சைகளில் கீழே முதலாவதாகவும், இவன் மேலே முதலாவதாகவும் இருந்த போது, விதி சிரசாசனம் செய்தது.

பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்த 'சோத்து கிட்ணனை' பார்த்த அய்யலுசாமிக்கு மனசு கேட்கவில்லை. காய்ந்து கிடந்த அவன் வயிற்றையும் , அம்மாவிடம் சிலேட்டு வாங்க காசு கேட்டு வாங்கிய அடியின் தடமும், கன்னத்தில் கரையாமல் நின்ற உப்பு நீரையும் பார்த்த அவருக்குக் கடலளவு கருணை பிறந்தது.
அவர் ஆள் வைத்து நடத்தும் டீக்கடையில் , ஒரு மசால் வடையை எடுத்து , அவன் கையில் திணித்தார்.. பயல், அவரை நன்றிப் பெருக்கோடு பார்த்த போது... "இன்னும் வடை வேணுமா...?" என்றார்.

"எனக்குப் போதும்... அம்மாவுக்கு... ஒண்ணு வேணும்..."

"இந்தா... வாங்கிக்கல... இதோ பாருல... நம்ம தலைவருங்ககெல்லாம்... தொழில் கல்வி வேணுமுன்னு சொல்லுதாவ... நீ விவரமான பய... நீ சாதரண ஆளு இல்ல.. நீ கூட... தொழில் கல்விய பத்தி நினைக்காட்டா என்னல அர்த்தம்...?"

"நான், என்ன மாமா செய்யணும்...?"

"ஊருல.. எல்லாரும் படிச்சிட்டு டவுனுக்கு போயிட்டா.. ஊர் என்னாவுறது? ஒன்ன மாதிரி புத்திசாலிப் பயலுவளுக்கே புரியமாட்டக்கே... அப்புறம் வேற எவனுக்கு புரியப் போவுது...?"

"நான், என்ன மாமா செய்யணும்...?"

"நம்ம நாட்டுக்கு இப்போ தேவை உழைப்பு, நம்ம தலைவர்கள் சொன்னது மாதிரி, நாம உற்பத்திய பெருக்கணும், அதுக்கு புத்தி உள்ள ஒன் பங்குக்கு என்ன பண்ணணும் சொல்லு..."

"நல்லா படிக்கணும்... வாத்தியார் சொல்றபடி நடக்கணும், தாயிற் சிறந்த கோவில் இல்லைனு நினைக்கணும்..."

"மெத்தப் படிச்சவன், சுத்தப் பயித்தியகாரன்னு ஒரு பழமொழி இருக்கு... தெரியுமால...?  படிச்சது போதாதா...? ஒன்ன மாதிரி பையங்க, பேனா பிடிக்கக் கூடாது.. ஏர் பிடிக்கணும்... சிலேட்டுக்குப் பதில் உரமூட்டை தூக்கணும்."

"ஒம்ம மவன் மட்டும் படிக்கான்...?"

"அவன் உருப்படாத பய... நீயும் அவனை மாதிரி கெட்டுப் போகணும்னு நினைச்சா பேஷா படி... அம்மாவுக்கு கஞ்சி ஊத்தணும்... பிறந்த ஊர, முன்னுக்கு கொண்டு வரணும்னா... வயலுல உழை... உன் இஷ்டம்..."

"வயலு இல்லியே மாமா..."

"அறிவிருக்கால.. என் வயல் வேற ஒன் வயல் வேறயாடா?"

"மாமா..."

"இந்தால இன்னொரு வடை... ஏல ஜோசப்பு நான் சொன்னேன்னு மும்தாஜ் கடையில அரைகிலோ கறி வாங்கி, இந்த பயகிட்ட கொடு, வீட்ல போயி அம்மாவ ஆட்டுக்கறி வைக்கச் சொல்லி நல்லா சாப்பிடுல, மத்த விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம்...நோஞ்சி போயி கெடக்க... உன் வயித்தப் பார்த்தால், என் வயிறு என்னமோ பண்ணுது..."

ஆட்டுகறி சாப்பிட்டவன், அம்மாவின் ஆலோசனையை மீறி, அடிக்க வந்தவளை, எதிர்த்து அடிக்கப் போனான்... பிறகு இப்படி வார்த்தைகளை வீசிப் போட்டான்.

"இனிமேல் வயலுல நடுறதுக்கு போனியன்னா, செறுக்கி மவளே கொன்னுபுடுவேன்... இன்னையில் இருந்து நான் வேலக்கி... போறேன்... ஆட்டுகறி வாங்கி வருவேன் சமையல் பண்ணணும், நான் ஊட்டுறபோது வாயைத் திறக்கணும்... இல்லனா கொன்னுப்புடுவேன்... அதுவும் இல்லனா பட்டணத்துக்கு ஓடிப்போயிடுவேன்... மசால் வடையை ரெண்டு நாளா ஏன் திங்காம வச்சிருக்க...? திங்கிறியா இல்ல பம்பாய்க்கு ஓடிப் போகட்டுமா...?"

பேச்சியம்மா, அவன் ஓடிப்போகாமல் இருக்க, அழுத வாய்க்குள் மசால் வடையை வைத்தாள். தன் மகன் நல்லா படித்து வாத்தியார் ஆகி 'இஸ்திரி' போட்ட சட்டை போட்டு இன்னொரு 'வாத்திச்சியைக்' கல்யாணம் பண்ணி சுகமாக வாழ வேண்டும் என நினைத்த தாய், இப்போது மகன் எதிரில் இந்த ஊரில் வாழ்ந்தால் போதும் என்று நினைத்து... தொண்டைக்குள் விக்கிய மசால் வடையைத் தண்ணீர் குடித்து வயிற்றுக்குள் அனுப்பினாள்.

சோத்து மாடன் அய்யலுசாமி வீட்டிற்குத் துள்ளிக் குதித்துப் போனான்.

ஆண்டுகள் போய்க் கொண்டிருந்தன... பேச்சியம்மாவின் உடலும், உயிரும் பிரிந்ததைப் பொருட்படுத்தாமல் போய்க் கொண்டிருந்தன.

அம்மா இறந்த துக்கத்தை, அய்யலுசாமியின் மனைவியை 'அம்மா' என்றழைத்து மறந்தான். அவளும் "அட கட்டையில் போற பய மவனேனு" சொல்வதை ஒரு தாயின் கரிசனமாக எடுத்துக்கொண்டு, "போற பய மவனுன்னு, சொல்லாதிய.. எங்கய்யா, போயிட்டதால... போன பய மவனேன்'னு சொல்லணும்..." என்று சொன்ன போது... திருமதி.அய்யலுச்சாமி, "பய மவனுக்கு வாயப் பாரு..." என சிரிப்பாள்.

கிட்ணன், அய்யலுசாமி குடும்பத்தில் ஐக்கியமாகிப் போனான். சமையலறை வரை இவன் சாம்ராஜ்யம். வீட்டில் ஆள் இல்லையென்றால் இவனே சாப்பாடு போட்டுக் கொள்ளலாம். மிளகாய் வத்தல் மூட்டைகளை இவனே வண்டியில் ஏற்றி, சந்தைக்கு கொண்டு போய் விற்கலாம்.
விற்ற காசில் அய்யலுசாமிக்கு எட்டுமுழ வேஷ்டி , வீட்டுக்கு 'மஞ்சள் மசாலாக்களையும், லட்டுகளையும் வாங்கி வரலாம்.

ஒரு முறை, அய்யலுசாமி , கத்திரிக்காய் மூட்டைகளை விலைபேசி, 'அட்வான்ஸ்' வாங்கிவிட்டார். வயலில் இருந்து வந்ததும் "கொஞ்சமாவது முன்ன பின்ன யோசித்து பார்த்தீரா...? மூட்டை எட்டு ரூபாயா இருக்கையில... ஆறு ரூபாய்க்குக் கொடுக்குறதா...? அதெல்லாம் முடியாது..." என ஏற்றிய மூட்டைகளை இறக்கி வைத்தான்.
மொத்தத்தில் அந்த வீட்டின் நிர்வாகம் அவன் கையில். வயலில், எந்த பயிரையும் விளைவிக்கலாம், எதையும் விற்கலாம்.

அய்யலுசாமியையும், சும்மா சொல்லக்கூடாது, கிட்ணனின் உடல் நலத்தில், அவனைவிட, அதிக அக்கறை செலுத்தினார். ஒருதடவை சந்தையில், தக்காளி மூட்டைகளை விற்ற பணத்தில் ரூபாய் நோட்டுகளை வேஷ்டியில் முடிந்து இடுப்பில் சொருகி விட்டு நாணயங்களை, கையில் வைத்துக் குலுக்கிக் கொண்டே..., ஒரு சிங்கிள் டீயை மசால்வடையின் துணையில்லாமல் குடித்துக் கொண்டிடுருந்த கிட்ணனை பார்த்ததும் கோவப்பட்டு சினந்தார், சீறினார், எகிறினார்.

"வெறும் டீயைக் குடிச்சால்... ஒடம்பு என்னதுக்குல ஆகும்? போயி 'காதர் பாய்' கடையில... பிரியாணி சாப்பிடுறதுக்கு என்னல...? என் பணம் வேற... உன் பணம் வேறயால...? போல... போயி பிரியாணி சாப்பிடுல... வேணுமினா, ஒரு ஆம்லேட்டோட சாப்பிடு... டீ குடிக்கானாம் டீ..."

இதேபோல், இன்னொரு நிகழச்சி நடந்தது.

விடுமுறை நாளுக்கு ஊருக்கு வந்த அய்யலுசாமியின் மகன் 'ரங்கசாமி' வீட்டில் சொந்தகாரர்களுடன் 'கோரப் பாயில்' உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, கிட்ணனும், அவர்களுடன் உட்கார்ந்து உணவருந்தினான். ரங்கசாமி, "கிட்ணா உப்பு எடுத்து கிட்டு வா" என்றான் . உடனே கிட்ணன், "காலு ஒடுஞ்சா போச்சி போயி உப்பு எடுத்துட்டு வரும் போது எல்லோருக்கும் தண்ணி கொண்டு வா..." என்றான். அய்யலுசாமி சிரித்தார்.

"கிட்ணா... நீ வேலைக்காரன் எங்கிறத மறந்துடாத... எதுக்கும் ஒரு அளவு வேணும்... எல்லாம் இவங்க... கொடுக்குற இளக்காரம் தான். நரிக்கு... நாட்டாமை கொடுத்தால்..."

அவ்வளவு தான்.

அய்யலுசாமி, அனல் பிழம்பாக எழுந்தார். மகனை அடிக்கப்போன அவரை கிட்ணனே தடுத்தான். ஆனால் அவர் பேச்சைத் தடுக்கவில்லை.

"என்னல... வேலக்காரன்... கீலக்காரன்னு பேசுற... கோட்டி... கீட்டி பிடிச்சிட்டால...? யார்ல வேலக்காரன்? ஒன்னை நான் பெத்ததால இந்த வீட்ல வச்சிருக்கேன், இவன் பெறாம பெத்தப்பிள்ள... இவனையால, வேலக்காரன்னு சொல்றே...? எங்க இன்னொரு முறை சொல்லுல பார்க்கலாம்... குடல உருவி, தோழ்மாலையா போடுறனா இல்லையான்னு பாரு... எல்லாம் இந்த செறுக்கி மவள் கொடுக்கிற இளக்காரம்... ஒன்னெல்லாம் பிறக்கும் போதே வாயில நெல்லப்போட்டு கொன்னுருக்கணும்..."
'செறுக்கி மவளான' அவர் மனைவி "தாயில்லா புள்ள, என்ன தாயின்னு நினைச்சிட்டு இருக்கானே , இப்படி நாக்கு மேல பல்லப்போட்டு பேசலாமா..." என்றாள்.

அன்று, பாசத்தில் விம்மிய கிட்ணன் , இப்போதும் விம்மிக் கொண்டிருகிறான். எருமை மாட்டுக் கொட்டடிக்கருகே, கொசுக்கள் அரிக்க, 'லொக் லொக்' என்று இருமிக் கொண்டிருக்கிறான்.
நாளைக்கு வருடப்பிறப்பு, பிறந்தநாள்.!

எப்படியும் அய்யலுசாமி மாமாவிடம் பக்குவமாகச் சொல்லிவிட வேண்டும். இனிமேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது... இருக்கவும் முடியாது. நடந்ததை நினைத்தான்.

சென்ற பொங்கலின் போது, இரவே பொங்கலிட்டு, பூஜை செய்துவிட்டு, "இன்னைக்குமாடா வயலுக்கு?" என்ற கேட்ட அய்யலுசாமியை, எரிப்பது போல் பார்த்துவிட்டு வேலைக்குப்போனான். மறுநாள் மாட்டுப்பொங்கல். உழவு மாடுகளைத் தொழுவில் இருந்து அவிழ்த்து, புண்ணாக்கு கலந்த தொட்டியில் தண்ணி காட்டிவிட்டு அவற்றைக் குளிப்பாட்ட கண்மாய்க்குக் கொண்டு போனான். மாட்டைக் குளிப்பாட்டிய போது, அது தற்செயலாகவோ அல்லது கூச்சத்தாலோ திமிர, அதன் கொம்பு விலாவில் பட்டு தூக்கி எறியப்பட்டான். ரத்தம் இல்லாமல் ஊமைக்காயம். பிராணனைப் பிடுங்கும் வலி. அய்யலுசாமி அலறினார். அவர் மனைவி படபடத்தாள். 'அயோடக்ஸை' போட்டார்கள். 'அய்யய்யோ' என்றார்கள். "இதப் போயி பெருசா..." என்றான் கிட்ணன்.

நாளாக நாளாக, கிட்ணன் இருமத் துவங்கினான். வர்மப்பிடிப்பு என்றார்கள். அவனால், வேலைகளைச் செய்ய முடியவில்லை. எழுந்தால் 'சுளுக்குப்' பிடித்தது. உட்கார்ந்தால் மூச்சு முட்டியது. வழக்கம்போல்  அதிகாலையில் எழும்ப முடியவில்லை. மிளகாய் மூட்டைகளை, தூக்கவே முடியவில்லை.

முதல் தடவையாக, அய்யலுசாமியிடம், தயங்கிக் கொண்டே வந்து, தலையைச் சொறிந்துகொண்டே... "உடம்புக்குள்ள... எலும்பு முறிஞ்சி இருக்கலாம்... இல்லனா, நரம்பு பிசகி இருக்கலாமாம், போட்டோ எடுத்து பார்க்கலாமா...?" என்றான்.

அய்யலுச்சாமி, அவனை சினந்து பாரத்துக் கொண்டே "அதெல்லாம் ஒண்ணுமிருக்காது... ஒன் மனசுல தான் பீதி... சரியாகிடும்..." என்றார்.

சரியாகவில்லை.

கிட்ணனின் இருமல் நாளுக்கு நாள் கூடியது. வைரம் பாய்ந்த அவன் உடல் 'கரையான் அரித்த பூவரசு மரம்' போல் ஆகியது.

ஒரு நாள், வெளியூர் சென்று திரும்பிய அய்யலுசாமி, பன்னிரண்டு வயது அனாதை பயலை வீட்டுக்குக் கொண்டு வந்து விளக்கேற்றினார்.

கிட்ணன் கண் எதிரே, புது 'வேலைக்காரனை' மிளகாய் மூட்டைகளை விற்கச் சொன்னார். "பிரியாணி சாப்பிட்டு வாடா" என்றார். போதாக்குறைக்கு கிட்ணனைப் பார்த்து "நாலு எருமை மாடு வாங்கித்தாரேன்... மேய்க்கியா...?" என்றார். அவரது தர்ம பத்தினியும் "இப்படியே இருமினா எப்படி... மாடு முட்டுன சாக்குல, வயலுக்கு போகாட்டா என்ன அர்த்தம்...? பாசாங்குக்கும் ஒரு அளவு வேண்டாமா...?" என்றாள்.

கிடணன் இந்த 'முப்பத்தி எட்டு' வயதில், மனைவி வேண்டும், மக்கள் வேண்டும், மனை வேண்டும் என்று நினைக்காமல், 'உழைப்பு... உழைப்பு...' என்று சொல்லாமல் செயலில் காட்டியவன், இன்றும் இருமிக் கொண்டிருந்தான். குடலை வாய்க்குக் கொண்டு வரும் இருமல். வெள்ளைச் சளி, குங்கும எச்சில். "எம்மா... எம்மா..." என்ற பிளிறல்கள். "எனக்கு சீக்கிரமா சாவு வர மாட்டேங்குதே..." என்ற புலம்பல். இருபத்தியாரு வருட உழைப்புக்கு ஒரேயடியாக ஓய்வெடுக்கும் இயலாமைப் பெருமூச்சு.

கிட்ணன் இரும்பினான், யானை பிளிறுவது போல் இருமினான். பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல், இருமலில் சிக்கி ரத்தஞ் சொட்டச் சொட்ட கக்கி, இருமிய போது...

அய்யலுசாமி வந்தார். படுத்திருந்த கோலத்தோடு வந்தார்.

"என்னடா... ஒன் மனசுல என்ன... நெனப்பு... நாங்கெல்லாம் தூங்கணுமா...? வேண்டாமா...?"

திருமதி.அய்யலுசாமி, வந்தாள்.

"எல்லாம் நீரு கொடுத்த இளக்காரம், நாம தூங்க கூடாதுன்னு வார பாசாங்கு இருமலு... நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்ச கத... நம்ம வீட்டுக்கும் வந்துட்டு..."

கிட்ணன், அய்யலுசாமியைப் பார்த்தான். நாளைக்கு வருடப் பிறப்பு சொல்லிட வேண்டியது தான்.

"மாமா, என்னால முடியல... நாளையில் இருந்து நின்னுடுறேன்... ஒம்ம கையால... ஒரு வெத்தல பாக்கு கடை வச்சி கொடுக்கணும்... என் கணக்கப் பார்க்கணும்."

"பொல்லாத கணக்கு... ஒம்மா சாவும் போது, 'முந்நூறு ரூபா' கொடுத்தேன். அந்த முந்நூறு இப்போ 'மூவாயிரம் ரூபா' மாதிரி, நாளைக்கு கணக்கு பார்க்கலாம், யாரு யாருக்கு கொடுக்கணும் என்கிறதை... காலையில் பேசிக்கலாம்... ஒன் பணத்துல ஒரு பைசா வேண்டாம்..."

அய்யலுசாமி, மனைவியோடு போய்விட்டார்.

கிட்ணனுக்கு ரத்தம் உறைவது போலிருந்தது.

'சாமக் கோழி' கூவியது, புதிய வேலைக்காரப் பையனிடம் அய்யலுசாமி பேசுவது கேட்டது.

"ஏய்... 'தங்கதுரை'... எழுந்திரு ராசா... மாட்டுக்கு தண்ணி காட்டு... வயலுக்கு ஜாக்கிரதையா போடா... இல்லண்ணா கொஞ்ச நேரம் தூங்கு... முடியாட்டா தூக்கக் கலக்கம் போரதுக்கு... 'நைனா' கடையில ஒரு டீ குடிச்சிட்டுப்போ... வெறும் டீ ஆகாது... ஒரு மசால்வடையையும் தின்னு... இந்தா காசு... எழுந்திரு... ராசா... மாடு, ஒன்னையே பாக்குது பாரு..."

கிட்ணன், ஒரு முடிவுக்கு வந்தான்.

அய்யலுசாமியின், சாப்பாட்டுக்குள் சாப்பாடாகப் போகும் அந்த பையனிடம் தன் கதையைப் பக்குவமாக சொல்லி, அவனை மீட்க வேண்டும்... நாம தான் முட்டாள்தனமா இந்த சண்டாளன் பேச்சைக் கேட்டு படிப்பைத் தொலைச்சிட்டோம், சக விவசாய தொழிலாளர்களிடம் 'தன்னைப் போல் அவன் ஆகாமல் இருக்க என்ன வழி...' என்று கேட்க வேண்டும். அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.

அப்புறம்...

'இருமல்' விட்ட வழி...



அ.வளர்மதி

1 comment:

  1. கதைய இன்னும் லென்த்தா எழுதி இருந்தா வீரியம் பாஞ்சிருக்கும்.. பீலிங்ஸ்ல விளையாடிருக்கலாம். அநியாயத்துக்கு கட் கட்னு சருக்கிட்டீக. பாசம் ஏக்கம் கல்வி வேலை முதலாளித்துவம் அடிமைனு டீடெய்லா எழுதி இருந்தா பக்காவா எப்போவும் மறக்க முடியாத கிட்ணன்இருந்திருப்பார். இனி ஒவ்வொரு கூழித்தொழிலாளியும் கிட்ணனாகவே நினைக்கப்படுவர்...

    ReplyDelete

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...