நெடுந்தகை
(Noble Man)
அவனால் அந்த
நிகழச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. அப்படி செய்து இருக்கக் கூடாது
அது தவறு என்று புத்திக்கு நன்கு புரிந்தது. நாம் தான் அப்படி செய்தது என
இப்போதும் அவனால் நம்ப முடியவில்லை. நம்மைவிட வயதில் பெரியவர். அப்பாவைவிட வயது மூத்து
இருப்பார். ஆறடிக்கும் மேல் உயரம். தலை எல்லாம் நரை தட்டியிருந்தது.
கதர் வேட்டி, சட்டை, கம்பீரமான மீசை. தோள் மேல் கதர் துண்டு
போர்த்தி இருந்தார்.
இது மாதிரியான
நிகழ்வு அவருக்குப் பழகியிருக்காது... மனுசன் ரொம்பவும் சங்கடப்பட்டார்.
மாறி மாறி மன்னிப்புக் கேட்டார். அப்படியும் இவனுக்குக் கோவம் குறையவே இல்லை. பணம்
மாற்றி
வருவதற்காக
வங்கிக்குப் போன போது, அப்படி நடந்தேறி விட்டது.
போகாமலே
இருந்திருக்கலாம். போன காரியமும் முடியவில்லை.
அப்பா வயதில்
உள்ளவரை கேவலமாக நடத்திய சம்பவமும் நடந்து இருக்காது.
காலையில் தூக்கம்
களையாமல் பக்கத்து வீட்டில் ‘சன் மியூசிக்
சேனலில்’ ஒலித்த "தென்றல் வந்து தீண்டும்
போது..." பாடலைக் கேட்டுக்கொண்டே புரண்டு படுத்தான் ‘வளவன்’. அவன் மனைவி ‘அமுதா’ அடுக்களையிலிருந்து அப்படியே எட்டிப்பார்த்து...
“இந்தா... இன்னைக்கு பேங்க்ல பணம் மாத்த
போகணும்னு சொன்னீங்க போகலியா...?” என நியாபகப் படுத்தினாள்..
இவன் ஒப்புக்கு “ம்ம்ம்... ம்ம்“ என முனங்கிவிட்டு போர்வையை மூடிக்கொண்டான். ஐந்து நிமிடம் கழித்து “இன்னும் எழும்பலையா...” என்றாள்.
“எழும்பணும்” என்று சொல்லிப் புரண்டு படுத்துக் கொண்டான். அவள் அதற்கு அப்புறம் இரண்டு
மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்து விட்டு சமையல் வேலையில் மும்முரமானாள்.
‘வளவன்’ முத்துலாபுரத்தில் ஸ்பின்னிங் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறான்.
பகல் ஷிப்ட்ல இருந்து இரவு ஷிப்ட் மாற, இரண்டாவது ஷிப்ட்டையும் சேர்த்து பார்த்து விட்டு நல்லிரவு ஒரு மணிக்கு வந்து
படுத்து உறங்கினான். இதனால்தான் அவன் மனைவியும் பக்கத்தில் வந்து எழுப்பவில்லை.
“சண்டாளப் பயலுக... சாமான்ய மக்கள திருப்தியா
ஒரு வாய் கஞ்சி குடிச்சி நிம்மதியா தூங்க விடமாட்டானுக... வாய்க்கரிசி போட்டுத்
தான் மறு வேலை பார்ப்பானுக... ஆளுற பயலுக தான் வாழ விடாம
பண்ணுரானுகன்னா நீயும்
ஏன் அவனை இம்சை
படுத்துற... என் புள்ள கொஞ்ச நேரம் தூங்கட்டும்.” எனப் புலம்பினாள், சாந்தம்மா, வளவனின் அம்மா.
“எத்தேய்... வீட்டுல செலவுக்குப் பணம் இல்ல....
செல்லாத ஐநூறு, ஆயிர ரூபாயை வச்சிட்டு என்ன பண்ண... பெட்ரோல்
பங்க்ல நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு மீதி நானுறு ரூபா வாங்க மணிக்கணக்கில்
காத்து இருக்காரு... ‘வட்டிக்கு குடுக்குற ‘வள்ளி அக்கா’ 500 ரூபா மாத்துறதுக்கு, 50 ரூபா எடுத்துகிட்டு, 450 ரூபா குடுக்குது... அப்படி மாத்த முடியுமா? ‘மாரியப்ப அண்ணாச்சி’ கடையில கடனா அரிசி பருப்புன்னு குடுக்கலைனா ஒரு
வேளை
சோறு கூட பொங்க
முடியாது வீட்ல...” என அடுப்படி ஜன்னல் வழியே மாமியாருக்குப் பதில்
கூறினாள்.
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்... இன்னைக்கு
நைட்டு வேலை தான... செத்த நேரம் தூங்கி எழுந்துட்டு போவான்...” என சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல்... “ப்பேக்... ப்பேக் ப்ப்ப்பேக்..” என சத்தம் குடுக்க கோழிகளும் குஞ்சுகளும்..
ரன்வே'ல மேலே எழும்ப தயாராகும் விமானம் போல இறக்கையை
விரித்துக்கொண்டு, தரையில் கால் படாமல் ஓடி வர... நுணுக்கிய
கம்பையும், நறுக்கிய வெங்காயத்தையும்
இரையாகப் போட ஆரம்பித்தாள்.
‘விடுப்பு’ எடுக்காமல் வேலை பார்த்ததற்கு, ‘மே’ தினத்தில் சன்மானமாய்க் கிடைத்த சுவர்க்கடிகாரத்திலிருந்து... “குக்கூ... குக்கூ...” என குருவி ஒன்று எட்டு முறை
வெளியே வந்து... வந்து... கூவ... ‘வளவன்’ அரக்கப் பரக்க எழுந்து குளித்துவிட்டு ‘ஆவி’ பறந்த அமுதாவின் இட்லியை அள்ளி வாயில் போட்டு விட்டு, வங்கி நோக்கிப் பைக்கில் பறந்தான்.
கடலையூர் ரோட்டில்
இருந்து ‘கோவில்பட்டி - கிழக்கு காவல் நிலையம்’ இருந்த தெருவில் பைக் திரும்பியதுமே, நூறு மீட்டர் தூரத்தில் இருந்த எட்டையபுரம்
சாலையில் மக்கள் கூட்டம் கண்ணில் பட்டது. வளவனுடைய வண்டி 60கிமீ வேகத்திலிருந்து 20கிமீ ஆக குறைந்து, அந்த நூறு மீட்டரைக் கடந்து ‘கனரா பேங்க்’ முன்பு இருந்த கூட்டத்தைப் பார்த்ததுமே நின்றுவிட்டது.
‘ATM’ல பணம் இல்லை’ என்ற போர்டுக்கு மேலே, கீழே அதைச் சுற்றி என நிறைய கைகள், இரும்புக் கம்பிகளைப் பிடித்து தொங்கிக்கொண்டு
இருந்தவர்களைப் பார்த்துவிட்டு... தன் சுமார்ட் போனில் கனரா
வங்கியில் இருந்து கடைசியாக வந்த செய்தியைப் பார்த்தான். ‘317ரூபா’ இருப்பு இருந்தது.
மூன்றாம் தேதி கிடைத்த
சம்பளத்தில், கடைப் பாக்கி, பால்காரம்மாவுக்கு, பைக்லோன், மகளுக்கு ஸ்கூல் பீஸ், பஸ் பீஸ், ‘மனைவி’ மகளிர் குழுவில் வாங்கின கடன், லொட்டு.. லொசுக்கு.. என சில்லறை கடன் எல்லாம்
போக அமுதா காலையில் குடுத்த 3600 ரூபாய் பர்ஸில் இருந்தது.
எது வரிசை, எங்கே
போய் நிற்பது என ஒன்றும் புரியவில்லை. வண்டியை மெல்ல நகர்த்தி வங்கியின் முன்னால்
இருந்த நூலகத்துக்கும், ‘அண்ணல் அம்பேத்கார்’
சிலைக்கும் இடையில் இருந்த பெட்டிக்கடை முன் மர நிழலில் வண்டியை நிறுத்தினான்.
“ஐயா பழம் ஒண்ணு குடுங்க..”
“சில்லறை வச்சியிருக்கியாய்யா..”
“ம்ம்ம்.. நூறு ருபாய் இருங்குங்கய்யா..”
“நூறு ரூபா எல்லாம் இப்போ சில்லறை ஆகிட்டு..” என சிரித்துக்கொண்டே “நீயே நல்லதாப் பார்த்து பிச்சிக்கோய்யா... பணம்
மாத்தணும்னா வெரசா வரிசையில் போய் நில்லுயா ...” என்றார் பெட்டிக்கடைக்காரர்.
நூறு ரூபாய் குடுத்தவனுக்கு மீதிப் பணம் பெட்டியில் தேடித்தேடி
பொறுக்கி
எடுத்தவரைப் பார்த்து...“இருக்கட்டும்யா பிறகு வந்து
வாங்கிக்கிறேன்... காலங்காத்தால இருக்கிற சில்லறையை எனக்கு
குடுத்துட்டீங்கன்னா
உங்களுக்குச் சிரமம்...” என்றவனை ஆச்சரியமாய்
பார்த்தவர் “ச்சே ச்சே.. வாங்கிக்கோய்யா..” என்றவரிடம் மறுத்துக் கிளம்ப போனவனை மறித்து...
ஒரு குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை கையில் கொடுத்து “வெரசாப் போயா..” என அனுப்பி வைத்தார்.
நான்கைந்து ‘காவலர்கள்’ கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுருந்தார்கள். ‘சரக்கு ரயில்’ போல நீண்டு இருந்த வரிசையில் ‘ஒடிசலான’ தேகம் ‘சோடாப்புட்டி’ கண்ணாடி கையில் ‘மஞ்சப்பை’ சகிதம் தள்ளாடி நின்றவருக்கு பின்னால் நின்று
கொண்டான்.நேரம் செல்லச் செல்ல ‘சூரியன்’ உக்கிரமானான். வளைந்து நெளிந்து ஒழுங்கில்லாமல்
‘எட்டையபுரம் சாலையில்’ வாகனங்களுக்கு இடைஞ்சலாக நின்றிருந்த கூட்டம் மெல்ல
மெல்ல வங்கியின் முன்பு இருந்த பிளாட்பாரத்தில் நிழலுக்காக ஒதுங்கியதில் வரிசை
கொஞ்சம் சீரானது.
‘சரக்கு ரயில்’ வரிசை நகராமல் ‘வங்கி’ பிளாட்பாரத்தில் அப்படியே
நின்றது. அதே
நேரம் ‘பயணிகள்’ பெட்டிகள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
‘வளவன்’ போனில் ‘யுவன் ஹிட்ஸ்’ என்று பெயரிடப்பட்ட ப்ளேலிஸ்ட் ப்ளே செய்து காதில் ஹெட்போன் மாட்டிக்
கொண்டான். பத்துப்பாட்டுகளுக்கு மேல் முடிந்து... “இறகைப் போலே அலைகிறனே..” என யுவன் பாட ஆரம்பித்த நேரத்தில், வங்கி வாசலில் சலசலப்பு, மக்கள் கூட்டம் தியேட்டரில் FDFS டிக்கட் வாங்க கவுண்டருக்குள் நுழைவது போல முன்னேறியது, வரிசை திடீரென சீர்குலைய
மக்கள் முன்னும் பின்னும் நகர்ந்து பழையபடி வரிசையில் நிற்க சிறிது நேரம் ஆனது...
இதில் கொஞ்ச ‘பெட்டிகள் முன் பின் இடம் மாறியதில் கூச்சல்
குழப்பம் வேறு... ‘வளவன்’ தண்ணீர்ப் பாட்டிலைத் திறந்து இரண்டு மடக்கு குடித்துவிட்டு மூடியை மூடப்
போகும் முன், “எய்யா.. குடிக்க கொஞ்சம்
தண்ணி குடுயா...”என முன்னால் நின்றிருந்த பெரியவர் கேட்கவும், ஹெட்போனை எடுத்து விட்டு, தண்ணீர்ப் பாட்டிலை அவரிடம் நீட்டினான்.
கொஞ்சமாக குடித்துவிட்டு திருப்பித் தந்தவரிடம் “குடிங்க..” என்று சொன்னதைக்கேட்டு, இன்னொரு மடக்கு குடித்துவிட்டு பாட்டிலைக்
கொடுத்தார்.
“நீங்க ஏன் இந்த வெயிலில் வந்தீங்க..? வீட்டில் வயசுப்பசங்க இல்லியா..?” என வளவன் கேட்டான்.
“பையன் மெட்ராஸ்ல வேலை பாக்கான்...அவனுக்கு ‘குவைத்’ வேலைக்குப் பணம் கட்ட 'அஞ்சு வட்டிக்கு’ பணம் வாங்கி இருந்தேன். இப்போ ஏஜன்ட் ஐநூறு, ஆயிரம் ரூபாத்தாளு வேண்டாம்... அக்கவுண்ட்ல போட்டு விடுங்கன்னு சொல்லிட்டான்.
அதனால தான் பணத்தைப் போட வந்தேன்.” என்றார்.
“செத்த நேரம் அந்த மரத்தடியில் உட்காருங்க..
வரிசை வாசல் கிட்ட வந்ததும் வாங்க" என வளவன் சொல்ல... அதை முன் பின் நின்று
இருந்தவர்கள் ‘வழிமொழிந்து’ ஆமோதிக்கவே, பெரியவர் நன்றிப் பெருக்கோடு மர நிழலில்
அமர்ந்தார்.
வங்கியின் வாசலில்
இருந்த ‘காவலாளி’ ஒவ்வொரு முறையும்
பத்துப்பதினைந்து பேர் என்ற
கணக்கில் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்.
“ஒரு ஆளுக்கு ஒரு 2000 ஆயிரம் நோட்டுத்தான் குடுக்குறாங்க.. இதை வச்சி
என்ன பண்ண? மளிகை கடையில் மாத்த முடியுமா? இல்ல, அரிசி காய்கறி தான் வாங்க முடியுமா...?” என ஒரு பெரியவர் புலம்பிவிட்டுப் போனார்.
ரோட்டில் சென்ற, ‘சொகுசுக் கார்’’ ஒன்று வங்கியை கடக்கும்போது வேகம் குறைந்தது. பின் சீட் கண்ணாடி கீழே
இறங்கவும், அதில் இருந்த பெண்ணும், குழந்தையும் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி
சென்றனர், சிறிது தூரம் சென்றதும் வேகம்
எடுத்து காற்றில் காணாமல் போனது கார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவர்...
“பணமில்லாத ஏழை பாழைங்க தான் கையில் இருக்கிற
ஐநூறு, ஆயிர ரூபாய மாத்த வெயிலில் கால் கடுக்க நின்னு கருகி சாகுது.. லட்சம், கோடின்னு பணம் வச்சிருக்குறவன் எல்லாம் ஆடிக்காரில்
அலட்டிக்கிடாம பறக்கிறான், ஆனால் ஆளுறவன் என்னமோ ‘திருட்டுப் பணம் எல்லாம் கண்டுபிடிச்சி, ஒழிச்ச பிறகு, இந்தியாவில பாலாறும், தேனாறும் ஓடி எல்லோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு,
இலவச மருத்துவம் கிடைக்கும்கிற மாதிரி பேசிட்டு இருக்கானுக...” எனச் சினந்து கொண்டார்.
வரிசையில்
இருந்தவர்கள் வங்கியில் இருந்து வெளியே வந்தவர்களிடம் ஆவலோடு புதிய 2000 ரூபாய் நோட்டை வாங்கித் திருப்பித்திருப்பி
பார்த்தனர். அதில் ஒருவர் “பார்க்குறதுக்கு லாட்டரி டிக்கட் மாதிரி
இருக்கு இதில.. சிப் எங்க இருக்கு...?” என ஒருவரும், இன்னொருவர் ‘‘கருப்பு பணத்தை வெளிய கொண்டு வரேன்னு
சொல்லிட்டு... பிங்க் கலர் பணத்தை வெளியிட்டுருக்கானுக...” எனக் கூற.. அதைக் கேட்டதும் கூட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பலை.
“மனுசனோட பொழப்பு இங்க சிரிப்பாய் சிரிக்குது...
உங்களுக்கு ரூபாயில ‘சிப்பு’ கேட்குது... சிரிப்பு கேட்குது... முன்னாடி நிக்கிற
அந்த அம்மா அழுகிற குழந்தைக்கு பால் வாங்க சில்லறை இல்லாம மூணு மணி நேரமா
வரிசையில் நிக்குது... இந்த நாடு சுரண்டுறவனுக்கு ஒரு தேசம்,
சுரண்டப்படுகிறவனுக்கு ஒரு தேசம்னு பிரிஞ்சி கெடக்குது...” என கூட்டத்தில் ஒருவர் சொல்ல கொஞ்ச நேரம் அமைதி
நிலவியது.
“SBI
Bank ATM'ல பணம் இருக்காம்
வாடா... மாப்ள...”.
என ரோட்டில்
இருந்து வாலிபன் ஒருவன் குரல் குடுக்க, வரிசையில் இருந்த ஒருவன் ஓடிச் சென்று அவன் பைக்கில் ஏறிக்கொண்டான். அவர்கள் போவதை பார்த்த ஒரு சிலர்
அவர்கள் பைக்கைத் தேடிப் போகவும், மீதம் இருந்த மக்களுக்கு வரிசையில் இரண்டு அடி முன்னால போனதில் பெரும்
மகிழ்ச்சி.
கூட்டம், செண்பகவள்ளி அம்மன் கோவில் தேர் மாதிரி மெதுவாக
கொஞ்ச தூரம் நகர்ந்தும், நெடுநேரம் அசையாமல் நின்றும் வங்கி வாசலை
நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
சூரியன் மெல்ல
நகர்ந்து, உச்சிக்கு வரத் தொடங்கி உக்கிரமாக இருந்தது.
வளவன் தண்ணீர்ப் பாட்டிலில் இருந்த கடைசி மடக்குத் தண்ணீரைக் குடித்து முடித்தான்.
ஒருவழியாக...
வங்கி வாசலை வந்தடைந்தும், பெரியவரை தலையாட்டிக் கூப்பிட்டு முன்னால்
நிறுத்திக்கொண்டான். காவலாளி கொஞ்ச ஆட்களை உள்ளே அனுப்பியபோது பெரியவர் கொஞ்சமாக
திறந்து இருந்த ‘கிரில்’ வழியே உள்ளே போனதும் காவலாளி வளவனைத் தடுத்து நிறுத்தி கிரிலை இழுக்க தொடங்கிய
போது, பெரியவர் காவலாளியிடம்
கெஞ்சி வளவனை உள்ளே வர வைத்தார்.
வங்கி மும்முரமாக
இயங்கிக் கொண்டிருந்தது...சிறிது நேரம் நின்று கொண்டிருந்த பெரியவர் இருக்கை
எதுவும் காலி இல்லாததால் ‘பாஸ்புக் பிரின்ட்’ பண்ணும் இயந்திரம் அருகே கீழே அமர்ந்து
விட்டார். பணம் போடும் சிலிப் எடுத்துக் கொண்டு, பெரியவரிடம் ‘யாருக்கு அனுப்ப வேண்டும் எவ்வளவு பணம்' என்ற விவரம் கேட்டு எழுதிக் கொடுத்தான் வளவன்.
வளவன் சுவரில்
சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். நேரம் ஆக ஆக, எங்கயாவது இருக்கை
காலியாகுதா என பார்த்துக்கொண்டு இருந்தான். கல்யாணப் பந்தியில் ஒருவர் சாப்பிட்டு
முடித்ததும் இலை எடுக்கும் முன் இன்னொருவர் தாவி அமர்வது போல் இருக்கைகள் நிறைந்து கொண்டு இருந்தது.
“பணம் போடுறவங்க எல்லாம் கவுண்டருக்கு வாங்க...” என சத்தம் கேட்டதும் பெரியவரைக்
கூட்டிக்கொண்டு போய் அவர்கள் கேட்ட ‘ஆதார் கார்ட்’ பாஸ் புக், ஸ்லிப் என
பார்த்து வாங்கி குடுத்தான். “எனக்கு பணம்
மாத்தணும் எந்த கவுண்டர்ல குடுக்கணும்...” என கேட்டான்.
“பணம் தீர்ந்துருச்சி... அக்கவுண்ட்ல பணம்
போட்டுட்டு ATM’ல எடுத்துக்கோங்க..”
வளவனுக்குக் கோவம்
வந்து விட்டது... கவுண்டருக்குள்ளே கையை விட்டு கிளார்க்கின்
முகத்தில் இடிக்கிற மாதிரி நீட்டி.. “மணியைப் பாருங்க.. பன்னண்டுக்கு மேல
ஆகுது... காலையில் எட்டரை மணியில் இருந்து காத்திருக்கோம்... இப்ப பணம் இல்லைன்னு
சொல்லுறீங்க...?"
என்றான்.
“நாங்க என்ன பண்ணுறது? எங்களுக்கு வந்த பணத்தை தானே நாங்க குடுக்க
முடியும்...? அதான் சொன்னேன்ல பணம் போட்டு ATM’ல எடுத்துக்கோங்கன்னு...”
“ATM'ல தான் மூணு நாளா பணம் இல்லையே.. பின்ன எப்படி
அதில பணம் எடுக்குறது?”
“அதற்கு நாங்க என்ன பண்ண முடியும்.? வந்த பணத்தை ஆளுக்கு 2000 ரூபா வீதம் அக்கவுண்ட்ல இருந்தும் செல்லாத
பணத்துக்குப் பதிலாகவும் குடுத்துட்டமே..”
“செல்லாத பணமா...? ஒரு நாள் இராத்திரியில் வாயில செல்லாத பணம்னு.. சொன்னா போதுமா.. ஒழுங்கா
செயல்படுத்த வேண்டாமா...? புது நோட்டை எல்லோருக்கும் ஒரே நாளில் குடுக்க
முடியுமா.. மூணு நாள் ஆகியும் இன்னும் எந்த ATM’லையும் பணம் ஒழுங்கா வந்து சேரல... ஒரே ஒரு 2000 ஓவா நோட்டை வச்சிகிட்டு.. பொருள் வாங்க கொஞ்சம் கொஞ்சமா பிச்சா குடுக்க
முடியும்...”
“ATM
card வச்சி பொருள்
வாங்கிக்கிட வேண்டியது தான... இங்க ரொம்ப பேசக்கூடாது...”
“ஏன் பேசக்கூடாது...? நாடு என்ன ஒரே சமமாவா இருக்கு? எல்லோரும் Net Banking, Credit Card, Debit Card வச்சிட்டு இருக்கிற மாதிரி பேசுறீங்க... கீரை, காய்கறி, பால்ன்னு தெருவில் விற்க வருகிறவங்க கிட்ட ATMலயா வாங்க முடியும்... மால்ல போயி வாங்கித் தின்னா.. சில்லறை வியாபாரம்
பண்ணுறவன் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும்.. உங்களுக்கு
மிடில்கிளாஸ் மேல என்னைக்கு அக்கறை.. அம்பானி , அதானின்னு... அவனுகளுக்குத் தான ஆட்சி, அரசாங்கம் எல்லாம்..”
“அரசாங்கத்தைப் பத்தி குறை சொல்லக்கூடாது... ஓட்டுப் போடும் முன்ன யோசிச்சி இருக்கணும்... செக்யூரிட்ட்ட்டி...”
“கேனப்பய ஊரில் கிறுக்குப் பய தான் நாட்டாமையா
வருவான்...”
"இப்படியெல்லாம் இங்க பேச உஙகளுக்கு
உரிமையில்ல... செக்யூரிட்ட்ட்டி...”
“நான் குறை சொல்லக்கூடாது... கேள்வி
கேட்கக்கூடாதுன்னா... உத்தியோகம் பார்க்கிற நீங்க அரசை கேள்வி கேளுங்க... நாட்டு
மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கானுக.. குறை சொல்ல
கூடாதாம்... குறை...”
“செக்யூரிட்டி... இவர கிளியர் பண்ணுக... இல்ல
வெளிய நிக்கிற போலீசைக் கூப்பிடுங்க...”
காவலாளி வளவனை நோக்கி வந்து கையைப் பிடிக்க
முயன்ற போது... உதறிவிட்டு வெளியேறினான். பணம் இல்லாதது வெளியே நின்று
இருந்தவர்களுக்குத் தெரிந்ததும் அமளி துமளி
ஆனது... கூட்டம் அவனைப் பாவமாய் பார்த்து விட்டு.. என்ன செய்வது என்று தெரியாமல், வங்கி வாசலை விட்டு நகர்ந்து, சிறு சிறு கூட்டமாக நின்று கூடிப்பேசியது.
வளவன் ஆற்றாமையும்
, இயலாமையும் ஒன்று சேர்ந்து, கோவமாக வண்டி நிறுத்தி இருந்த
பெட்டிக்கடை நோக்கிப் போனான். அப்போதுதான் நடக்கக்கூடாதது நடந்து விட்டது.
வளவன் கடையின்
முன்னே வருவதற்கும் அதினுள்ளிருந்து ஒரு பெரியவர் எழுந்து வந்து எச்சில்
துப்புவதற்கும் சரியாக இருந்தது. எச்சில் இவனுடைய சட்டைக் காலருக்குச்
சற்றுக் கீழே விழுந்து விட்டது. ஒன்றிரண்டு துளிகள் இவன் முகத்திலும் தெறித்து
விட்டன. கடையில் நின்றிருந்தவர்கள், ரோட்டில் நடந்து போனவர்கள், வங்கியின் முன்னே நின்றிருந்தவர்கள் அத்தனை
பேரும் இதைப் பார்த்து விட்டனர்.
இவன் ஏற்கனவே
வங்கியில் பட்ட அவமானத்தால் மிகுந்த கோபத்தோடு இருந்தான். இந்த அசிங்கமும்
சேர்ந்து கொள்ள இவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடா நாயி?” எனத் திட்டியபடி அவருடைய துண்டைப்
பிடித்து இழுத்து அடிப்பதற்காகக் கையை ஓங்கி விட்டான்.
பெட்டிக்கடையின் முன்பு
பெஞ்சில் உட்கார்ந்திருந்த இரண்டு பேர் ஓடிவந்து இவனைப் பிடித்துக் கொண்டார்கள். “விட்டுருங்க, தம்பி பாவம், பெரியாளு, தம்பி!” என்று கெஞ்சலாகச் சொன்னார்கள்.
“இவனாய்யா பெரியாளு ? ஆளு மேல எச்சி துப்புர பய, விடுங்க , இவன இன்னிக்கி உண்டு இல்லைன்னு பார்த்திர்றேன்.”
“அய்யோ, வேணாம் , தம்பி , தெரியாம பண்ணிட்டாரு..”
“என்னய்யா தெரியாம பண்றது ? உங்க மேல எச்சியத் துப்புனா சும்மா
இருப்பீங்களாய்யா?”
“என்ன இருந்தாலும் வயசுன்னு ஒண்ணு இருக்கில்ல, தம்பி, உங்க அப்பா மாதிரி நினைச்சிக்குங்களேன்.”
இவன் சமாதானம் அடையவில்லை.
அவர் வெல வெலத்துப் போய்ப் பரிதாபமாக முழித்துக்கொண்டு
நின்றிருந்தார். தயங்கித் தயங்கி இவன் பக்கத்தில் வந்தார்.
“மன்னிச்சிருங்க தம்பி, தெரியாம நடந்துருச்சி!” என்று கையெடுத்துக்
கும்பிட்டுச்
சொன்னார். தன் துண்டை எடுத்து அவனுடைய சட்டையிலிருந்த எச்சிலை நன்றாகத்
துடைத்தார். பிறகு கடையிலிருந்து, போகணியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். “மொகம் கழுவிக்குங்க!” என்றார்.
இவன் போகணியைத்
தட்டி விட்டான். “அடப் போய்யா... முகம் கழுவுறதுக்கு
எங்களுக்குத் தெரியாது? வந்துட்டாரு, மூஞ்சியும் மொகரையும்.”
அவன் முகத்தைச்
சுளித்துக்கொண்டு பைக்கில் ஏறிக் கிளம்பினான். "கோவிச்சிக்கிடாதீங்க, தம்பி, மன்னிச்சிருங்க தம்பி" என்று
பின்புறத்திலிருந்து
பதற்றத்தோடு சொல்லிக்கொண்டிருந்தது ரொம்பத் தூரம் வரைக் கேட்டது.
வீட்டுக்
காம்பவுண்டுக்குள் பைக் வந்த வேகம், அதை விட வேகமாக வளவன் வந்த வேகம் இதை எல்லாம் பார்த்த அமுதா எதுவும் பேசவில்லை
டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
சாப்பிட்டில் மனம்
லயிக்கவில்லை, பாதியில் எழுந்து கை கழுவிட்டு
பெட்ரூமில் போய்ப்
படுத்துவிட்டான். அமுதா செய்வதறியாமல் என்ன நடந்தது எனப் புரியாமல் பாத்திரங்களை
எடுத்துக்கொண்டு, சமையலறையில் நுழைந்துவிட்டாள். அந்த பெரியவரின்
பரிதாபமான முகம் திரும்பத் திரும்ப கண்முன் வந்து நின்றது. ‘மன்னிச்சிருங்க, மன்னிச்சிருங்க!’ என்று கெஞ்சியது, இவன் கண்ணைமூடிப் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் தூக்கம் வரவில்லை.
நேரம் ஆக ஆக, அவனுக்கு இம்சையாக இருந்தது. ஒட்டுமொத்த அரசு,
அதன் கையாலாகாத்தன்மையின் மீதிருந்த சினத்தை ஒரு அப்பாவி முதியவரின் மீது இறக்கி
வைத்த குற்றவுணர்ச்சி. தான் நடந்து கொண்ட விதம் எந்த விதத்திலும்
நியாயம் இல்லை. என்று புரிந்தது. யாரும் யார் மீதும் வேண்டுமென்றே எச்சில்
துப்பப் போவதில்லை. எதிர் பாராமல் நடந்து விட்ட நிகழ்ச்சி அது, அதற்குப் போய்த் தான் இந்த அளவுக்குக்
கோபப்பட்டிருக்க வேண்டியதில்லை.
இவனுக்கு அந்தப்
பெரியவரை உடனே பார்க்க வேண்டும் போலிருந்து. அவரிடம் மன்னிப்புக்
கேட்டால் தான் மனசு ஆறும் என்று தோன்றியது. அவர் எந்த ஊர், என்ன பெயர் என்றும் தெரியவில்லை. அதற்கு முன்னே
அவரைப் பார்த்ததாகவே நியாபகம் இல்லை.
பின்னே எப்படி சந்திப்பது?
பெட்டிக்கடையில்
அவர் உரிமையோடு போகணி எடுத்துத் தண்ணீர் கொண்டு வந்தது நியாபகத்துக்கு வந்தது.
பெட்டிக்கடைக்காரருக்கு ஒருவேளை தெரிந்தவராக இருக்கலாம் என்று பட்டது.
அமுதாவிடம் பணம்
மாத்த முடியவில்லை என்பதை மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பெட்ரோல் போட்டுவிட்டு பணம் மாற்றிக்கொண்டு
வருகிறேன் எனக்
கூறிவிட்டு... பைக்கை எடுத்துக் கொண்டு நேரே பெட்டிக்கடைக்குச் சென்றான்.
கடைக்காரர் இவனைப் பார்த்ததும் “மன்னிச்சுக்குங்க
ஸார்.. மதியம் அந்தப் பிரச்சனையில் உங்களுக்குச் சில்லறை குடுக்க மறந்துட்டேன்” என்று கூறி மீதி
சில்லறையைக் கையில் கொடுத்தார்...
"பாவம் ஸார் மிலிட்டரிக்காரு, காலையில் ரொம்பக் கோவப்பட்டுட்டீங்க..."
“மிலிட்டரிகாரரா..!? எதுக்கு என்னை சார்’ன்னு எல்லாம் கூப்பிடுறீங்க? எனக்கும் இப்பக் கஷ்டமாத்தான் இருக்கு. அதான்
அவரைப் பார்க்கணும்போல இருக்கு.”
"அவரைப் பத்தி முன்னாடியே தெரிஞ்சிருந்தா
கோபப்பட்டிருக்க மாட்டீங்க, ரொம்பத் தங்கமான மனுஷன் சார், வீட்டில் விசேஷம் வருது... பணத்தை மாத்த மூணு
நாளா பேங்குக்கு அலையுறாரு.. நேத்து மணிக்கணக்கில் வரிசையில் நின்னு... பேங்க்
ஓபன் ஆகும் போது ஏற்பட்ட தள்ளு முள்ளுல வரிசையில் இருந்து வெளிய வந்து மறுபடி
வரிசையில் நிற்க முடியாமல் கண் கலங்கி நின்னதப் பார்க்கப் பாவமா இருந்தது.
இன்னைக்கு காலையில் எட்டு மணிக்கு வரிசையில் நின்னவரு மூணு மணி நேரம் கழித்து ‘2000 ரூபா’ மட்டும் கையில் கிடைச்சதும் மனசு உடைஞ்சி போயிட்டாரு... பாவம் தம்பி அவரு...”
“இவர்கள் பேசுவதைக் கேட்ட
பெட்டிக்கடை பெஞ்சில் அன்றைய மாலைமலர் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் 'இசையரசு' “நேத்துகூட இப்படித்தான் ஒரு அம்மா ATM வாசலில் யூரின் போக முடியாம இரண்டு மணி நேரம்
நின்னுட்டு இருந்தாங்க, என்னமா ஆட்டோ வேணுமா என கேட்டேன், ‘இல்ல தம்பி பாத்ரூம்
போகணும், பக்கத்தில் எங்கயாவது இருக்கா... கையில் காசு இல்ல ஐநூறு ரூபாதான்
இருக்குன்னு சொன்னாங்க...’ பரவாயில்லம்மா காசு குடுக்க வேண்டாம்னு சொல்லி
கூப்பிட்டு போயிட்டு கொண்டு வந்து விட்டேன். மிலிட்டரிக்காரரு காலையில் 2000 ரூபாய மட்டும்
கையில் வச்சிட்டு நிக்குறத பாக்க பாவமா இருந்தது”
என்றார்.
வளவனுக்கு மனசு
இன்னும் வேதனை ஆகியது. “எனக்கு அவரைப் பார்த்து மன்னிப்புக் கேட்கணும், அவரு வீடு எங்க இருக்கு..?”
‘கடலையூர்’ போற வழியிலே லிங்கம்பட்டிக்கு எதிர்ல ‘பெருமாள்பட்டி’
இருக்கில்லே, அதான் அவர் ஊரு. ரங்கசாமி நைனான்னா எல்லோருக்கும் தெரியும்.” என்றார் கடைக்காரர்.
இவன் நன்றி
சொல்லிவிட்டு பைக்கில் ஏறினான். பெருமாள்பட்டி இவன் வசிக்கும் ‘NGO காலனியில்’ இருந்து
4கிமீ தான்.
பெரியவரைப் பார்த்து விட்டே வந்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டான்.
வழக்கமாக, இவன் கோபப்படுகிற ஆள் இல்லை. வங்கியில் நேர்ந்த
அவமானம் கூட கொஞ்சம் நேரத்தோடு போயிருந்தால் பணம் மாத்தி இருக்கலாம். இவனுக்கு அவ்வளவு அவசரமாக
பணம் மாற்றும் எண்ணம் இல்லை. மனைவி கேட்டுக்கொண்டதால் தான் போக வேண்டி
வந்தது.
நேற்று காலை 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு அரை மணி
நேரம் காத்திருந்து மீதி 400
ரூபாய்
வாங்கிவிட்டு வேலைக்கு தாமதமாக போனதாலும்... அமுதா வாரக் குழுவுக்கு தவணை கட்ட
பணம் வேணும் என்று கேட்டுக் கொண்டு இருந்ததாலும் தான் இன்னைக்கு வங்கிக்குப் போய்
மாற்றித் தருகிறேன் என்று இரவு வேலை முடிந்து வந்ததும் சொல்லிவிட்டுத் தூங்கினான்.
கையில் உள்ள சொற்ப
பணத்தை மாற்ற தினமும் வண்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதிப் பணம்
வாங்கினாலே போதுமானது. ‘மகளிர் குழுவுக்கு’ கட்ட வேண்டிய ‘வாரத் தவணையை’
500, 1000 ரூபாயாக வாங்க மாட்டோம்னு சொன்னதாலயே, இன்று விருப்பம் இல்லாமல் வங்கிக்குப் போனான்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று யார் கண்டது?
பெருமாள்பட்டி, வந்ததும் பைக்கை விட்டு இறங்கினான். அழகான சிறிய கிராமம். ஊரைச்சுற்றிலும்
மரங்கள் மனதுக்கு சந்தோசத்தை குடுத்தது. சேவல்கள் குப்பையைக் கிளறி “க்கொக்.. க்கொக்..” என கோழிகளைக் கவருவதில் கவனமாயிருந்தன. இரண்டு
நாய்கள் எலும்பு மாதிரி எதையோ ஒன்றைப் பங்கிட்டுக் கொள்வதில் சண்டை போட்டுக்கொண்டு
இருந்தன. சிறுவர்கள் ‘சில்லாங்குச்சி’ விளையாடிக் கொண்டிருந்தனர் ‘தாவணி’ கட்டியப் பெண்ணும் ‘பாவாடை சட்டை’ போட்ட சிறுமியும் தண்ணிக் குடம் தூக்கி நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால்
சைக்கிளில் பால் கேன்களோடு கேன்ட் பாரில் கட்டித்தொங்கிய வெண்கல மணியை “ட்டையிங்.. டிங்க்... ட்டையிங்...” என்று அடித்துக் கொண்டு வந்தவரை நிறுத்தி, “ரங்கசாமி நைனா வீடு எதுங்க?” என்று கேட்டான்.
அவர், “யாரு இந்தப் புது ஆளு?” என்கிற கேள்விக்குறியோடு இவனைப்
உற்றுப்பார்த்து விட்டு, சற்று தூரத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து போன
இடங்களில் புதியதாய்ப் பூசி வெள்ளையடிக்கப்பட்ட ஒரு பழைய வீட்டைக் காட்டி, ‘அந்த கார வீடு” என்றார். இவன் பைக்கைத் தள்ளிக்கொண்டே, அந்த வீட்டை அடைந்தான். வாசலில் நிறைய செருப்புகள் இருந்தன.
திண்ணையில் ‘ஜமுக்காளம்’ விரித்து அஞ்சாறு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
இவன் பைக்கை சைடு
ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு, ‘அய்யா!” என்று சத்தம்கொடுத்தான். அந்தப் பெரியவரே
எழுந்து வாசலுக்கு வந்தார். இவனை அடையாளம் கண்டு கொண்டதும் புருவத்தை உயர்த்திக்
கண்கள்விரிய “அடடே! நீங்களா? வாங்க வாங்க காலையில் தெரியாம தப்பு நடந்து போச்சு. என்னை மன்னிச்சிரணும்!” என்றார்.
“அய்யய்யோ நீங்கதான் என்னை மன்னிக்கணும், காலையில் வயசு
பாக்காம உங்களைச் சத்தம் போட்டுட்டேன். நெல்லைக் கொட்டினா அள்ளிறலாம், சொல்லைக்
கொட்டிட்டனே... மனசுக்குக் கஷ்டமா இருந்தது. அதான் வந்தேன்.”
“நா செஞ்ச தப்புக்கு யாராயிருந்தாலும் கோவம்
வரத்தான் செய்யும். வாசல்லேயே நிக்கிறீங்களே, உள்ள வாங்க...”
"போக வேண்டியதுதான். இத சொல்லுறதுக்குத் தான்
வந்தேன். மனசுல ஒண்ணும் வச்சிக்காதீங்க...”
“அட நீங்க வேற, என்னவெல்லாமோ பேசிகிட்டு, ஒரு வாய் காபி சாப்பிட்டுப் போகலாம், உள்ள வாங்க!” என்று இவனுடைய கையைப் பிடித்தார். உள்ளே இருந்த கூட்டத்தைப் பார்த்து
இவனுக்குத் தயக்கமாக இருந்தது. அதைப் புரிந்து கொண்ட அவர், “அடுத்த மாசம் ஏம் பொண்ணுக்கு கல்யாணம்.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க. பந்தல், பத்திரிக்கை, சத்திரம், சாப்பாடுன்னு
நிறையப் பேச வேண்டியிருக்கு, நீங்க சும்மாவாங்க... காபி சாப்பிட்டதும் போயிரலாம்!” என்று சொல்லி, அவனை விடாப்பிடியாக உள்ளே இழுத்துக்கொண்டு
போனார்.
மாப்பிள்ளை
வீட்டைச் சேர்ந்த ஒருவர் இவனைக் காண்பித்து “இது யாரு?” என்று கேட்டார் ஆவலோடு, இவனுக்குக் கூச்சமான கூச்சம், தர்ம சங்கடத்துடன் பெரியவரைப் பார்த்தான். அவர்
தயங்கிய மாதிரியே தெரியவில்லை. “பொண்ணுக்கு அண்ணன்
முறை!” என்று அவரிடமிருந்து, புன்னகையோடு பதில் வந்தது.
அ.வளர்மதி

காவலாளி வளவனை நோக்கி வந்து கையைப் பிடிக்க முயன்ற போது... உதறிவிட்டு வெளியேறினான். பணம் இல்லாதது வெளியே நின்று இருந்தவர்களுக்குத் தெரிந்ததும் அமளி துமளி ஆனது... கூட்டம் அவனைப் பாவமாய் பார்த்து விட்டு.. என்ன செய்வது என்று தெரியாமல், வங்கி வாசலை விட்டு நகர்ந்து, சிறு சிறு கூட்டமாக நின்று கூடிப்பேசியது.
வளவன் ஆற்றாமையும்
, இயலாமையும் ஒன்று சேர்ந்து, கோவமாக வண்டி நிறுத்தி இருந்த
பெட்டிக்கடை நோக்கிப் போனான். அப்போதுதான் நடக்கக்கூடாதது நடந்து விட்டது.
வளவன் கடையின்
முன்னே வருவதற்கும் அதினுள்ளிருந்து ஒரு பெரியவர் எழுந்து வந்து எச்சில்
துப்புவதற்கும் சரியாக இருந்தது. எச்சில் இவனுடைய சட்டைக் காலருக்குச்
சற்றுக் கீழே விழுந்து விட்டது. ஒன்றிரண்டு துளிகள் இவன் முகத்திலும் தெறித்து
விட்டன. கடையில் நின்றிருந்தவர்கள், ரோட்டில் நடந்து போனவர்கள், வங்கியின் முன்னே நின்றிருந்தவர்கள் அத்தனை
பேரும் இதைப் பார்த்து விட்டனர்.
இவன் ஏற்கனவே
வங்கியில் பட்ட அவமானத்தால் மிகுந்த கோபத்தோடு இருந்தான். இந்த அசிங்கமும்
சேர்ந்து கொள்ள இவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. “உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடா நாயி?” எனத் திட்டியபடி அவருடைய துண்டைப்
பிடித்து இழுத்து அடிப்பதற்காகக் கையை ஓங்கி விட்டான்.
பெட்டிக்கடையின் முன்பு
பெஞ்சில் உட்கார்ந்திருந்த இரண்டு பேர் ஓடிவந்து இவனைப் பிடித்துக் கொண்டார்கள். “விட்டுருங்க, தம்பி பாவம், பெரியாளு, தம்பி!” என்று கெஞ்சலாகச் சொன்னார்கள்.
“இவனாய்யா பெரியாளு ? ஆளு மேல எச்சி துப்புர பய, விடுங்க , இவன இன்னிக்கி உண்டு இல்லைன்னு பார்த்திர்றேன்.”
“அய்யோ, வேணாம் , தம்பி , தெரியாம பண்ணிட்டாரு..”
“என்னய்யா தெரியாம பண்றது ? உங்க மேல எச்சியத் துப்புனா சும்மா
இருப்பீங்களாய்யா?”
“என்ன இருந்தாலும் வயசுன்னு ஒண்ணு இருக்கில்ல, தம்பி, உங்க அப்பா மாதிரி நினைச்சிக்குங்களேன்.”
இவன் சமாதானம் அடையவில்லை.
அவர் வெல வெலத்துப் போய்ப் பரிதாபமாக முழித்துக்கொண்டு
நின்றிருந்தார். தயங்கித் தயங்கி இவன் பக்கத்தில் வந்தார்.
“மன்னிச்சிருங்க தம்பி, தெரியாம நடந்துருச்சி!” என்று கையெடுத்துக்
கும்பிட்டுச்
சொன்னார். தன் துண்டை எடுத்து அவனுடைய சட்டையிலிருந்த எச்சிலை நன்றாகத்
துடைத்தார். பிறகு கடையிலிருந்து, போகணியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். “மொகம் கழுவிக்குங்க!” என்றார்.
இவன் போகணியைத்
தட்டி விட்டான். “அடப் போய்யா... முகம் கழுவுறதுக்கு
எங்களுக்குத் தெரியாது? வந்துட்டாரு, மூஞ்சியும் மொகரையும்.”
அவன் முகத்தைச்
சுளித்துக்கொண்டு பைக்கில் ஏறிக் கிளம்பினான். "கோவிச்சிக்கிடாதீங்க, தம்பி, மன்னிச்சிருங்க தம்பி" என்று
பின்புறத்திலிருந்து
பதற்றத்தோடு சொல்லிக்கொண்டிருந்தது ரொம்பத் தூரம் வரைக் கேட்டது.
வீட்டுக்
காம்பவுண்டுக்குள் பைக் வந்த வேகம், அதை விட வேகமாக வளவன் வந்த வேகம் இதை எல்லாம் பார்த்த அமுதா எதுவும் பேசவில்லை
டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்தாள்.
சாப்பிட்டில் மனம்
லயிக்கவில்லை, பாதியில் எழுந்து கை கழுவிட்டு
பெட்ரூமில் போய்ப்
படுத்துவிட்டான். அமுதா செய்வதறியாமல் என்ன நடந்தது எனப் புரியாமல் பாத்திரங்களை
எடுத்துக்கொண்டு, சமையலறையில் நுழைந்துவிட்டாள். அந்த பெரியவரின்
பரிதாபமான முகம் திரும்பத் திரும்ப கண்முன் வந்து நின்றது. ‘மன்னிச்சிருங்க, மன்னிச்சிருங்க!’ என்று கெஞ்சியது, இவன் கண்ணைமூடிப் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் தூக்கம் வரவில்லை.
நேரம் ஆக ஆக, அவனுக்கு இம்சையாக இருந்தது. ஒட்டுமொத்த அரசு,
அதன் கையாலாகாத்தன்மையின் மீதிருந்த சினத்தை ஒரு அப்பாவி முதியவரின் மீது இறக்கி
வைத்த குற்றவுணர்ச்சி. தான் நடந்து கொண்ட விதம் எந்த விதத்திலும்
நியாயம் இல்லை. என்று புரிந்தது. யாரும் யார் மீதும் வேண்டுமென்றே எச்சில்
துப்பப் போவதில்லை. எதிர் பாராமல் நடந்து விட்ட நிகழ்ச்சி அது, அதற்குப் போய்த் தான் இந்த அளவுக்குக்
கோபப்பட்டிருக்க வேண்டியதில்லை.
இவனுக்கு அந்தப் பெரியவரை உடனே பார்க்க வேண்டும் போலிருந்து. அவரிடம் மன்னிப்புக் கேட்டால் தான் மனசு ஆறும் என்று தோன்றியது. அவர் எந்த ஊர், என்ன பெயர் என்றும் தெரியவில்லை. அதற்கு முன்னே அவரைப் பார்த்ததாகவே நியாபகம் இல்லை. பின்னே எப்படி சந்திப்பது?