Monday, 26 November 2018

பள்ளியோடம் லீவே...!!!


மாடசாமி கோவில் ஆலமரத்தின் கீழ் பெரிய மாடன் சாமியாடி சின்னத்துரை கோவில் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். ஆல மர நிழலில் ஆடுகள் இளைப்பாறிக் கொண்டிருக்கவிழுதுகளில் ஊஞ்சல் ஆடியும், மரம் தொத்தி குரங்கு ஆட்டம் என விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்களை சீசன் துண்டால் சுற்றி விரட்டிக் கொண்டிருந்தார் ஒண்டிவீரன் சாமியாடி முனியசாமி.

"டேய்... ஒன்னுக்கு மணி அடிக்கிற நேரம் கூட ஆகல அதுக்குள்ள ஏன்டா வந்தீங்க?"

"இன்னிக்கி பள்ளியோடம் லீவே...!!!" என்று கூட்டமாக சேர்ந்து கத்தினார்கள்.

துண்டை வைத்து விரட்டியவருக்கு, பிள்ளைகள் போக்கு காட்டியபடியே...  முனியசாமி ஒண்டி வீரன் சாமி வந்து ஆடும் போது பக்தர்கள் படைக்கும் முறுக்கு மாலை, அதிரச மாலை, குழல் அப்பள மாலைகளைக் கழுத்தில் இருந்து பிள்ளைகளுக்கு பிய்த்துக் கொடுத்தபடியே கோவில்பட்டி நையாண்டி மேளத்திற்கு ஏற்ப கையில் உள்ள சலங்கை கட்டிய ஈட்டியைத் தரையில் குத்திகழுத்தை வளைத்து, குனிந்து நெளிந்து ஆடுவது போல் ஆடிக் காட்டி அவரிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தனர்.


"என்ன மாமா புள்ளய எல்லாம் பள்ளியோட நாள்ல யூனிபாம் சட்டையோட விளையாடுதுக என்ன வெசயம்?" என்றார் சின்னத்துரை.

"அது வந்து மாப்ள... ஏதோ லீவாம் என்னன்ட்டு தான் தெரியல பையோட இங்க வந்து ஆட்டம் போடுதுக இனி மத்யான சத்துணவு சோறு திங்காம வீட்டுக்கு போகாதுக" என்று துண்டைச் சுற்றினார் முனியசாமி.

சின்னத்துரை பிள்ளைகளை நோக்கி கை ஆட்ட, மரத்தில் ஆலம் பழம் பறித்துக் கொண்டிருந்த பிள்ளைகளும் விழுதுகளில் ஊஞ்சல் ஆடிய பிள்ளைகளும் மெல்ல வந்து அவர் முன்னால் நின்றனர். பள்ளிக்கூடம் போய் விட்டு பாதியில் வந்த காரணம் என்னவென்று கூட்டத்தில் சற்று உயரமாக இருந்த பையனை நோக்கி கேட்டார்.

"இன்னிக்கி பள்ளியோடம் லீவு... லெனின் அண்ணன் தான் பெல் அடிச்சி இன்னிக்கி ஸ்ட்ரைக் வீட்டுக்கு போங்கன்னு சொல்லிச்சி..."

"மாமா கேட்டீரா? ஒம்ம பேரனோட வேல தான் போல... கோவில் பக்கம் வராம ஒம்ம பேர மவன் மதியழகன் கெடுத்தான், இப்ப பேரன் ஆரம்பிச்சி இருக்கான் போல..." என்று நக்கலாகச் சிரித்தார் சின்னத்துரை.

மகனையும் பேரனையும் பற்றி குறை கூறுவதைக் கேட்டு முனியசாமிக்கு முகம் சிறுத்து விட்டது.

பிள்ளைகளிடம் பேரன் பள்ளிக்கூடத்தில் இருப்பதைக் கேட்டு அறிந்து, கம்மாய் கரையில் ஏறி வேகமாக பள்ளிக்கூடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பள்ளிக்கூடத்தின் முன்பு இருந்த வாகை மரத்தின் நிழலில் சைக்கிளில் அமர்ந்து இருந்த மாணவர்களில் ஒருவன் தூரத்தில் முனியசாமி வேகமாக வருவதைப் பார்த்த உடன் சத்துணவு அமைப்பாளரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த லெனின் பாரதியிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ஐயத்தோடு மைதானத்தைப் பார்த்ததும் சத்துணவு அமைப்பாளர் நாராயணனுக்கு முகம் மலர்ந்தது.

வெயிலில் நடந்து வந்த களைப்பில் மூச்சு வாங்க, வியர்வையைத் தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடியே வந்தவரைப் பார்த்து பின் வாங்கினான் லெனின் பாரதி.

"ஏலேய் பாரதி நில்லுல அங்க" அதட்டல் குரல் கேட்டதும் அப்படியே நின்றான்.

"எதுக்குலேய் இப்படி சண்டித் தனம் பண்ணிட்டுருக்க?"

"அப்படி கேளுங்க, ஸ்ட்ரைக்ன்னு சொல்லி பெல் அடிச்சி பிள்ளைகள வீட்டுக்கு அனுப்பினதும் இல்லாம இப்ப மதிய சாப்பாடும் பண்ணணுமாம்" என்று பொருமினார் நாராயணன்.

"நீ ஏன்டா பெல் அடிக்க? எத்தன வாட்டி சொல்லுறது அதுக்குன்னு அரசாங்கம் தனியா சம்பளத்துக்கு ஆள் போட்டுருக்கான்ல... நீ என்ன ஹெட் மாஸ்டரா இல்ல கலெக்ட்டராலேய் லீவு விட..."

"தாத்தா பிரச்சினை என்னான்னு தெரியாம பேசாதீங்க, லீவுன்னா என்ன? பக்கத்து ஊரு பிள்ளைக சாப்பிட்டு போட்டும், கரஸ்பாண்டன்ட் வந்ததும் பேசிட்டு நாங்களும் வீட்டுக்கு வந்துடுவோம் நீங்க போங்க..."

"அப்புடி என்னடா பெரச்சன அத சொல்லுலேய் மொத..."

"அது சொல்ல முடியாது தாத்தா, அவர் வரட்டும் சொல்லிகிடுறேன்"

நாராயணன் வாயில் கை வைத்து 'உங்க கிட்டயே சொல்ல மாட்டானாமே' என்பது போல் ஆச்சரியப் பார்வை பார்த்தது முனியசாமிக்கு இன்னும் கோபம் வரச் செய்தது.

"அவ்வளவு திமிராலேய் ஒனக்கு... ஒங்க அப்பன் புத்தி அவன மாதிரியே ஊர் வம்பு வளத்துட்டு இருக்க..."

"அப்பாவுக்கு என்ன? அவரைப் பத்தி ஊருல யாராவது ஒத்த ஆளு நாக்கு மேல பல்லப் போட்டு ஒத்த பழி சொல்லு சொல்ல முடியுமா? அவரு மட்டும் இல்லனா இந்த ஊருக்கு ரோடு, மினி பஸ், குடி தண்ணி, இலவச பட்டா, வீடு, கவர்மெண்ட் சலுகைன்னு வந்து இருக்குமா?"

"அப்போ அவன மாதிரியே நீயும் இந்த வயசுலயே கொடி பிடிச்சி திரிய போறியாலேய்... இப்படி ஸ்ட்ரைக் அடிச்சு தான போன வருசம் பத்தாப்பு பரிச்ச எழுத விடல அடுத்த வருசம் பன்னெட்டாப்பு வேற, எப்படியோ போ..."

இதை எல்லாம் ஆசிரியர்கள் அறையின் வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த கனகவள்ளி, முனியசாமி மற்றும் லெனின் இருவரையும் அழைக்க, ஆசிரியர்கள் அறையில் முனியசாமி நாற்காலியில் அமர பக்கத்தில் லெனின் நின்று கொண்டான்.

"என்ன மாமா நீங்களும் மதியழகன் மச்சானப் பத்தி புரியாம பேசுறீங்க... அவரு கோவிலுக்கு வரல, சாமி கும்பிடல அது தான் உங்க பிரச்சினையா? ஊர்ல என்ன மாதிரி பல பேருக்கு அவரு தான் சாமி, ஆனா அவரு என்னைக்குமே எல்லோருக்கும் தோழர் தான். போன வருசம் லெனினுக்கு பரிட்சை எழுத ஹால் டிக்கட் தரலனு தெரிஞ்சு ஊர் மக்களே சேர்ந்து வந்து பிரச்சினை பண்ணி ஹால் டிக்கட் குடுக்க வச்சாங்களே எதுக்கு? லெனின் மேல தப்பு இருந்தா ஊர் சப்போர்ட் பண்ணி இருக்குமா சொல்லுங்க...?" என ஆசிரியர் கனகவள்ளி கேட்டதும் முனியசாமி பழைய சம்பவங்களை அசை போட ஆரம்பித்தார்.

மழைக்கு ஒழுகிய ஓட்டுக் கட்டிட பள்ளிக் கூடத்தை மதியழகன் பல முறை போராட்டம் நடத்தி, மனு எழுதிப் போட்டு இரண்டு வருடம் முன்பு இரண்டு மாடிக் கட்டிடமாக கட்ட ஆரம்பித்து இருந்தார்கள். கட்டிட வேலை முழுவதாக முடியும் முன்பே கோடை விடுமுறை நாட்கள் முடிந்து விடவே அவசர அவசரமாக சிவகாசி தொகுதி ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வந்து திறந்து வைத்தார்.

இரண்டாவது மாடியில் தடுப்புச் சுவர் முழுவதும் கட்டி முடிக்காமல் கம்பிகள் மட்டும் நீட்டிக் கொண்டு இருந்தது, ஒரு மழை நாளில் தேங்கி கிடந்த தண்ணீரில் வழுக்கி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து கால், தாடை உடைந்து உயிருக்குப் போராடி, தாடையில் பிளேட், செயற்கைப் பல் பொருத்தி அந்த மாணவி எழுந்து நடக்க ஆறேழு மாதம் ஆனது.

அந்த சம்பவம் நடந்த அன்று மாணவர் சங்க தலைவன் லெனினும் அவனுடைய நண்பன் செயலாளர் ஜோதிபாசுவும் பள்ளிக் கூடத்தின் இரண்டாவது மாடியில் ஏறி இப்பவே தடுப்புச் சுவர் கட்டணும் என்றும் அப்படி கட்டவில்லை என்றாலோ, மேலே வர யாரும் முயற்சி செய்தாலோ குதித்து விடுவோம் என்று கூறி போராட்டம் நடத்த அரசு அதிகாரிகள் எல்லாம் வந்து அன்றைய இரவுக்குள் தடுப்புச் சுவர் கட்டி முடிக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்து இராஜபாளையத்தில் மலை அடிவாரத்தில் கல்லூரி மாணவனை கொலை செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியும் பள்ளிக்கு விடுமுறை விடக்கோரி போராட்டம் செய்து மாணவ மாணவியர்களைத் திரட்டி கோவில்பட்டியில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டான். 

அரையாண்டுத் தேர்வு சமயத்தில்  அறிவியல் ஆராய்ச்சி செய்யும் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று போராட்டம் நடத்தி பள்ளி மாணவர்களை வாசலில் தடுத்தி நிறுத்தினான். இரண்டு நாட்கள் பள்ளிக்கு  விடுமுறை அறிவித்த நிர்வாகம் கருவிகளை, உபகரணங்களை வரவைத்த பின்பு பள்ளிக்கூடத்தை திறந்தது.  

இதை எல்லாம் காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஊரில் உள்ள பெரியவர்கள், பொது மக்கள் லெனினை பரிட்சை எழுத அனுமதிக்க வற்புறுத்தி போராட்டம் நடத்திய பிறகு தான் நிர்வாகம் சம்மதித்தது.

"எதுக்கு மாமா பேசாம இருக்கீக... பழைய நியாபகமா? இன்னைக்கு என்ன நடந்ததுன்னு இவன் சொல்லி இருக்க மாட்டானே...?"

சிந்தனை களைந்தவர்,

"ஆமா தாயி சொல்ல மாட்டக்கானே கல்லுலிமங்கன்"

"ம்ம்ம்... இந்த விசயத்தை எப்படி சொல்லுவான்? எங்கிட்ட படிக்கிற பொம்பள பிள்ளைக எங்கிட்ட கூட சொல்லல... "

இடையில் மறித்தவர் கோவமாக,

"அப்படி என்னமா பண்ணினான் இந்த பய சொல்லு..."

"அட இருங்க மாமா... இவன விட மூத்த ப்ளஸ்டூ பிள்ளைக இவங் கிட்ட சொல்லி இருக்குக... லெனின யாரும் குறை சொல்ல மாட்டாங்க."

முனியசாமி ஒன்றும் புரியாமல் அமர்ந்து இருக்க கனகவள்ளி தொடர்ந்தாள்.

"ஸ்கூல் கிரவுண்ட் வேலி தாண்டி ஓடைக்கு அந்தப்புறம் தீப்பெட்டி கம்பெனி இருக்குல அதுல மொட்டை மாடில கொஞ்ச நாள் முன்ன வர குச்சி தான் காயப் போடுவாங்க இப்ப குடிசை செட் போட்டு இருக்காங்க..." சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியானாள்.

லெனின் அதற்கு மேல் சொல்ல வேண்டாம் என்பது போல் கண்களால் கெஞ்சினான்.

கனகவள்ளி செருமிவிட்டு தொடர்ந்தாள்,

"இண்டர்வெல் பெல் அடிக்கும் கொஞ்ச நேரம் முன்னாடியும் மறு பெல் அடிச்ச பிறகும் கம்பெனில வேல பாக்குற ஆம்பளைக மாடியில் ஏறி இறங்குறாங்கலாம் கிரவுண்ட் மூலையில இருக்குற பிள்ளைகளோட பாத்ரூம் மேல ஓப்பனா தான் இருக்கு..." சொல்லி முடிக்கும் முன் கனகவள்ளியின் குரல் உள் சென்று எச்சில் முழுங்க கண்களில் கண்ணீர் வழிந்தது.

"யாத்தே... என்ன தாயி சொல்லுத... அடேய் சண்டாளப் பயலுகளா ஒங்க புத்தி ஏன்டா இப்படி போகுது...? ஏலேய் பாரதி நீ அந்த தப்பிலி பயலுகள சும்மாவாடா விட்ட...?" கோவத்தில் கத்தின முனியசாமியின் சிவந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

"பொம்பள பிள்ளைக விவகாரம் தாத்தா... அப்படி எல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாது... அவனுகளுக்கு இருக்கு... இப்ப பிரச்சினை நாளைக்குள்ள பாத்ரூம் மேல ஒரு ஆஸ்பட்டாஸ் சீட் ஆவது போடணும். கரஸ்பாண்டன்ட் வரட்டும்."

"ஒன்ன போயி தப்பா நினைச்சிட்டேனடா... நாட்டாம சின்னத்துரை மாடன் கோவில்ல தான் இருக்கான் நான் கூட்டி வரேன் நீ போயி ஒன் அப்பன கூட்டி வாடா... இன்னைக்கி பாத்ரூம் மேல மறப்பு வச்ச பிறகு தான் வீட்டுக்கு போகணும்."

கனகவள்ளி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"நீங்களும் ஒங்க ஏழேழு தலை முறையும் வாழயடி வாழயா நல்லா இருக்கணும் மாமா... மதியழகன் மச்சான வரப்போற பஞ்சாயத்து தேர்தல்ல தலைவரா அன்ன போஸ்ட்டா தேர்ந்தெடுக்க போறாங்க ஊர்ல இனி எங்க தலை முறையும் நல்லா இருக்கும்."

முனியசாமியின் கண்களில் இந்த முறை ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.  
·          

குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்:
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.


No comments:

Post a Comment

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...