Monday, 26 November 2018

பள்ளியோடம் லீவே...!!!


மாடசாமி கோவில் ஆலமரத்தின் கீழ் பெரிய மாடன் சாமியாடி சின்னத்துரை கோவில் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். ஆல மர நிழலில் ஆடுகள் இளைப்பாறிக் கொண்டிருக்கவிழுதுகளில் ஊஞ்சல் ஆடியும், மரம் தொத்தி குரங்கு ஆட்டம் என விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்களை சீசன் துண்டால் சுற்றி விரட்டிக் கொண்டிருந்தார் ஒண்டிவீரன் சாமியாடி முனியசாமி.

"டேய்... ஒன்னுக்கு மணி அடிக்கிற நேரம் கூட ஆகல அதுக்குள்ள ஏன்டா வந்தீங்க?"

"இன்னிக்கி பள்ளியோடம் லீவே...!!!" என்று கூட்டமாக சேர்ந்து கத்தினார்கள்.

துண்டை வைத்து விரட்டியவருக்கு, பிள்ளைகள் போக்கு காட்டியபடியே...  முனியசாமி ஒண்டி வீரன் சாமி வந்து ஆடும் போது பக்தர்கள் படைக்கும் முறுக்கு மாலை, அதிரச மாலை, குழல் அப்பள மாலைகளைக் கழுத்தில் இருந்து பிள்ளைகளுக்கு பிய்த்துக் கொடுத்தபடியே கோவில்பட்டி நையாண்டி மேளத்திற்கு ஏற்ப கையில் உள்ள சலங்கை கட்டிய ஈட்டியைத் தரையில் குத்திகழுத்தை வளைத்து, குனிந்து நெளிந்து ஆடுவது போல் ஆடிக் காட்டி அவரிடம் வம்பு இழுத்துக் கொண்டிருந்தனர்.


"என்ன மாமா புள்ளய எல்லாம் பள்ளியோட நாள்ல யூனிபாம் சட்டையோட விளையாடுதுக என்ன வெசயம்?" என்றார் சின்னத்துரை.

"அது வந்து மாப்ள... ஏதோ லீவாம் என்னன்ட்டு தான் தெரியல பையோட இங்க வந்து ஆட்டம் போடுதுக இனி மத்யான சத்துணவு சோறு திங்காம வீட்டுக்கு போகாதுக" என்று துண்டைச் சுற்றினார் முனியசாமி.

சின்னத்துரை பிள்ளைகளை நோக்கி கை ஆட்ட, மரத்தில் ஆலம் பழம் பறித்துக் கொண்டிருந்த பிள்ளைகளும் விழுதுகளில் ஊஞ்சல் ஆடிய பிள்ளைகளும் மெல்ல வந்து அவர் முன்னால் நின்றனர். பள்ளிக்கூடம் போய் விட்டு பாதியில் வந்த காரணம் என்னவென்று கூட்டத்தில் சற்று உயரமாக இருந்த பையனை நோக்கி கேட்டார்.

"இன்னிக்கி பள்ளியோடம் லீவு... லெனின் அண்ணன் தான் பெல் அடிச்சி இன்னிக்கி ஸ்ட்ரைக் வீட்டுக்கு போங்கன்னு சொல்லிச்சி..."

"மாமா கேட்டீரா? ஒம்ம பேரனோட வேல தான் போல... கோவில் பக்கம் வராம ஒம்ம பேர மவன் மதியழகன் கெடுத்தான், இப்ப பேரன் ஆரம்பிச்சி இருக்கான் போல..." என்று நக்கலாகச் சிரித்தார் சின்னத்துரை.

மகனையும் பேரனையும் பற்றி குறை கூறுவதைக் கேட்டு முனியசாமிக்கு முகம் சிறுத்து விட்டது.

பிள்ளைகளிடம் பேரன் பள்ளிக்கூடத்தில் இருப்பதைக் கேட்டு அறிந்து, கம்மாய் கரையில் ஏறி வேகமாக பள்ளிக்கூடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பள்ளிக்கூடத்தின் முன்பு இருந்த வாகை மரத்தின் நிழலில் சைக்கிளில் அமர்ந்து இருந்த மாணவர்களில் ஒருவன் தூரத்தில் முனியசாமி வேகமாக வருவதைப் பார்த்த உடன் சத்துணவு அமைப்பாளரிடம் வாக்குவாதம் செய்து கொண்டு இருந்த லெனின் பாரதியிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ஐயத்தோடு மைதானத்தைப் பார்த்ததும் சத்துணவு அமைப்பாளர் நாராயணனுக்கு முகம் மலர்ந்தது.

வெயிலில் நடந்து வந்த களைப்பில் மூச்சு வாங்க, வியர்வையைத் தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடியே வந்தவரைப் பார்த்து பின் வாங்கினான் லெனின் பாரதி.

"ஏலேய் பாரதி நில்லுல அங்க" அதட்டல் குரல் கேட்டதும் அப்படியே நின்றான்.

"எதுக்குலேய் இப்படி சண்டித் தனம் பண்ணிட்டுருக்க?"

"அப்படி கேளுங்க, ஸ்ட்ரைக்ன்னு சொல்லி பெல் அடிச்சி பிள்ளைகள வீட்டுக்கு அனுப்பினதும் இல்லாம இப்ப மதிய சாப்பாடும் பண்ணணுமாம்" என்று பொருமினார் நாராயணன்.

"நீ ஏன்டா பெல் அடிக்க? எத்தன வாட்டி சொல்லுறது அதுக்குன்னு அரசாங்கம் தனியா சம்பளத்துக்கு ஆள் போட்டுருக்கான்ல... நீ என்ன ஹெட் மாஸ்டரா இல்ல கலெக்ட்டராலேய் லீவு விட..."

"தாத்தா பிரச்சினை என்னான்னு தெரியாம பேசாதீங்க, லீவுன்னா என்ன? பக்கத்து ஊரு பிள்ளைக சாப்பிட்டு போட்டும், கரஸ்பாண்டன்ட் வந்ததும் பேசிட்டு நாங்களும் வீட்டுக்கு வந்துடுவோம் நீங்க போங்க..."

"அப்புடி என்னடா பெரச்சன அத சொல்லுலேய் மொத..."

"அது சொல்ல முடியாது தாத்தா, அவர் வரட்டும் சொல்லிகிடுறேன்"

நாராயணன் வாயில் கை வைத்து 'உங்க கிட்டயே சொல்ல மாட்டானாமே' என்பது போல் ஆச்சரியப் பார்வை பார்த்தது முனியசாமிக்கு இன்னும் கோபம் வரச் செய்தது.

"அவ்வளவு திமிராலேய் ஒனக்கு... ஒங்க அப்பன் புத்தி அவன மாதிரியே ஊர் வம்பு வளத்துட்டு இருக்க..."

"அப்பாவுக்கு என்ன? அவரைப் பத்தி ஊருல யாராவது ஒத்த ஆளு நாக்கு மேல பல்லப் போட்டு ஒத்த பழி சொல்லு சொல்ல முடியுமா? அவரு மட்டும் இல்லனா இந்த ஊருக்கு ரோடு, மினி பஸ், குடி தண்ணி, இலவச பட்டா, வீடு, கவர்மெண்ட் சலுகைன்னு வந்து இருக்குமா?"

"அப்போ அவன மாதிரியே நீயும் இந்த வயசுலயே கொடி பிடிச்சி திரிய போறியாலேய்... இப்படி ஸ்ட்ரைக் அடிச்சு தான போன வருசம் பத்தாப்பு பரிச்ச எழுத விடல அடுத்த வருசம் பன்னெட்டாப்பு வேற, எப்படியோ போ..."

இதை எல்லாம் ஆசிரியர்கள் அறையின் வாசலில் நின்று கேட்டுக்கொண்டிருந்த கனகவள்ளி, முனியசாமி மற்றும் லெனின் இருவரையும் அழைக்க, ஆசிரியர்கள் அறையில் முனியசாமி நாற்காலியில் அமர பக்கத்தில் லெனின் நின்று கொண்டான்.

"என்ன மாமா நீங்களும் மதியழகன் மச்சானப் பத்தி புரியாம பேசுறீங்க... அவரு கோவிலுக்கு வரல, சாமி கும்பிடல அது தான் உங்க பிரச்சினையா? ஊர்ல என்ன மாதிரி பல பேருக்கு அவரு தான் சாமி, ஆனா அவரு என்னைக்குமே எல்லோருக்கும் தோழர் தான். போன வருசம் லெனினுக்கு பரிட்சை எழுத ஹால் டிக்கட் தரலனு தெரிஞ்சு ஊர் மக்களே சேர்ந்து வந்து பிரச்சினை பண்ணி ஹால் டிக்கட் குடுக்க வச்சாங்களே எதுக்கு? லெனின் மேல தப்பு இருந்தா ஊர் சப்போர்ட் பண்ணி இருக்குமா சொல்லுங்க...?" என ஆசிரியர் கனகவள்ளி கேட்டதும் முனியசாமி பழைய சம்பவங்களை அசை போட ஆரம்பித்தார்.

மழைக்கு ஒழுகிய ஓட்டுக் கட்டிட பள்ளிக் கூடத்தை மதியழகன் பல முறை போராட்டம் நடத்தி, மனு எழுதிப் போட்டு இரண்டு வருடம் முன்பு இரண்டு மாடிக் கட்டிடமாக கட்ட ஆரம்பித்து இருந்தார்கள். கட்டிட வேலை முழுவதாக முடியும் முன்பே கோடை விடுமுறை நாட்கள் முடிந்து விடவே அவசர அவசரமாக சிவகாசி தொகுதி ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வந்து திறந்து வைத்தார்.

இரண்டாவது மாடியில் தடுப்புச் சுவர் முழுவதும் கட்டி முடிக்காமல் கம்பிகள் மட்டும் நீட்டிக் கொண்டு இருந்தது, ஒரு மழை நாளில் தேங்கி கிடந்த தண்ணீரில் வழுக்கி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து கால், தாடை உடைந்து உயிருக்குப் போராடி, தாடையில் பிளேட், செயற்கைப் பல் பொருத்தி அந்த மாணவி எழுந்து நடக்க ஆறேழு மாதம் ஆனது.

அந்த சம்பவம் நடந்த அன்று மாணவர் சங்க தலைவன் லெனினும் அவனுடைய நண்பன் செயலாளர் ஜோதிபாசுவும் பள்ளிக் கூடத்தின் இரண்டாவது மாடியில் ஏறி இப்பவே தடுப்புச் சுவர் கட்டணும் என்றும் அப்படி கட்டவில்லை என்றாலோ, மேலே வர யாரும் முயற்சி செய்தாலோ குதித்து விடுவோம் என்று கூறி போராட்டம் நடத்த அரசு அதிகாரிகள் எல்லாம் வந்து அன்றைய இரவுக்குள் தடுப்புச் சுவர் கட்டி முடிக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்து இராஜபாளையத்தில் மலை அடிவாரத்தில் கல்லூரி மாணவனை கொலை செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியும் பள்ளிக்கு விடுமுறை விடக்கோரி போராட்டம் செய்து மாணவ மாணவியர்களைத் திரட்டி கோவில்பட்டியில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டான். 

அரையாண்டுத் தேர்வு சமயத்தில்  அறிவியல் ஆராய்ச்சி செய்யும் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று போராட்டம் நடத்தி பள்ளி மாணவர்களை வாசலில் தடுத்தி நிறுத்தினான். இரண்டு நாட்கள் பள்ளிக்கு  விடுமுறை அறிவித்த நிர்வாகம் கருவிகளை, உபகரணங்களை வரவைத்த பின்பு பள்ளிக்கூடத்தை திறந்தது.  

இதை எல்லாம் காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஊரில் உள்ள பெரியவர்கள், பொது மக்கள் லெனினை பரிட்சை எழுத அனுமதிக்க வற்புறுத்தி போராட்டம் நடத்திய பிறகு தான் நிர்வாகம் சம்மதித்தது.

"எதுக்கு மாமா பேசாம இருக்கீக... பழைய நியாபகமா? இன்னைக்கு என்ன நடந்ததுன்னு இவன் சொல்லி இருக்க மாட்டானே...?"

சிந்தனை களைந்தவர்,

"ஆமா தாயி சொல்ல மாட்டக்கானே கல்லுலிமங்கன்"

"ம்ம்ம்... இந்த விசயத்தை எப்படி சொல்லுவான்? எங்கிட்ட படிக்கிற பொம்பள பிள்ளைக எங்கிட்ட கூட சொல்லல... "

இடையில் மறித்தவர் கோவமாக,

"அப்படி என்னமா பண்ணினான் இந்த பய சொல்லு..."

"அட இருங்க மாமா... இவன விட மூத்த ப்ளஸ்டூ பிள்ளைக இவங் கிட்ட சொல்லி இருக்குக... லெனின யாரும் குறை சொல்ல மாட்டாங்க."

முனியசாமி ஒன்றும் புரியாமல் அமர்ந்து இருக்க கனகவள்ளி தொடர்ந்தாள்.

"ஸ்கூல் கிரவுண்ட் வேலி தாண்டி ஓடைக்கு அந்தப்புறம் தீப்பெட்டி கம்பெனி இருக்குல அதுல மொட்டை மாடில கொஞ்ச நாள் முன்ன வர குச்சி தான் காயப் போடுவாங்க இப்ப குடிசை செட் போட்டு இருக்காங்க..." சொல்லிவிட்டு சிறிது நேரம் அமைதியானாள்.

லெனின் அதற்கு மேல் சொல்ல வேண்டாம் என்பது போல் கண்களால் கெஞ்சினான்.

கனகவள்ளி செருமிவிட்டு தொடர்ந்தாள்,

"இண்டர்வெல் பெல் அடிக்கும் கொஞ்ச நேரம் முன்னாடியும் மறு பெல் அடிச்ச பிறகும் கம்பெனில வேல பாக்குற ஆம்பளைக மாடியில் ஏறி இறங்குறாங்கலாம் கிரவுண்ட் மூலையில இருக்குற பிள்ளைகளோட பாத்ரூம் மேல ஓப்பனா தான் இருக்கு..." சொல்லி முடிக்கும் முன் கனகவள்ளியின் குரல் உள் சென்று எச்சில் முழுங்க கண்களில் கண்ணீர் வழிந்தது.

"யாத்தே... என்ன தாயி சொல்லுத... அடேய் சண்டாளப் பயலுகளா ஒங்க புத்தி ஏன்டா இப்படி போகுது...? ஏலேய் பாரதி நீ அந்த தப்பிலி பயலுகள சும்மாவாடா விட்ட...?" கோவத்தில் கத்தின முனியசாமியின் சிவந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

"பொம்பள பிள்ளைக விவகாரம் தாத்தா... அப்படி எல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண முடியாது... அவனுகளுக்கு இருக்கு... இப்ப பிரச்சினை நாளைக்குள்ள பாத்ரூம் மேல ஒரு ஆஸ்பட்டாஸ் சீட் ஆவது போடணும். கரஸ்பாண்டன்ட் வரட்டும்."

"ஒன்ன போயி தப்பா நினைச்சிட்டேனடா... நாட்டாம சின்னத்துரை மாடன் கோவில்ல தான் இருக்கான் நான் கூட்டி வரேன் நீ போயி ஒன் அப்பன கூட்டி வாடா... இன்னைக்கி பாத்ரூம் மேல மறப்பு வச்ச பிறகு தான் வீட்டுக்கு போகணும்."

கனகவள்ளி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"நீங்களும் ஒங்க ஏழேழு தலை முறையும் வாழயடி வாழயா நல்லா இருக்கணும் மாமா... மதியழகன் மச்சான வரப்போற பஞ்சாயத்து தேர்தல்ல தலைவரா அன்ன போஸ்ட்டா தேர்ந்தெடுக்க போறாங்க ஊர்ல இனி எங்க தலை முறையும் நல்லா இருக்கும்."

முனியசாமியின் கண்களில் இந்த முறை ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.  
·          

குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

பொருள்:
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.


Thursday, 15 November 2018

சுமை தாங்கி

சுமை தாங்கி 

விடியற்காலை சேவல் கூவும் முன்னே எழுந்து முகம் அலம்பி, கோபால் பல்பொடியால் பல் துலக்கி, கிழக்கு வெளுக்கும் முன்னமே குளித்து கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டை போட்டுக் கொண்டாள். கொல்லப் புறத்தில் முந்தின இரவு வெட்டி வைத்து இருந்த வேலி முள் விறகை வைத்து அடுப்பு மூட்டி உலை வைத்து, பக்க அடுப்பில் காப்பி சட்டியை வைத்து கருப்பட்டிக் காப்பி போட்டு குடித்து விட்டு, மண்பானையிலிருந்த பழைய கஞ்சியை ஈயக் கும்பாயில் ஊற்றி கலக்கி குடுவையில இருந்த நார்த்தங்காய் ஊறுகாயைத் தொட்டுக் குடித்து விட்டு, அடுத்த முக்கால் மணி நேரம் அடுப்படியில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று ஆக்கிய சோறு குழம்பைக் கொதிக்கக் கொதிக்க தூக்குவாளியில் நிரப்பி ஒயர் கூடையில எடுத்துக் கொண்டு மாமியார் முத்தம்மாவை எழுப்பி வீட்டுக் காரியங்களை விளக்கினாள் செல்வி.

"எதுக்கு செல்வி ஒனக்கு இந்த வேண்டாத வேல? இங்கன வீட்டுக்கு அடுத்தாப்ல  இருக்குற வாசுகி தீப்பெட்டி ஆபிசுக்கு வேலக்கி போறத விட்டுபுட்டு மேலப்பட்டி ஆபிசுக்கு ஏன் போற?"

"இங்க சம்பளம் கட்டுபடி ஆகல அத்தே..."

"போர்மேன் நம்ம சொந்தக்காரப் பய ராமையா தான அவன் தான ஒன்ன மேப்பெட்டி ஒட்டுற வேலயில இருந்து பெட்டி கை பாக்க, தீப்பெட்டி தட்டு கணக்கு பாக்கன்னு கணக்குப்பிள்ள மாதிரி வச்சிருந்தான் அவன் கிட்ட சமபளம் கூட்டி கேக்கலாம்ல..."

"அவன் போக்கு சரி இல்லத்தே... இனிமேலும் அவன் கூட வேல பாத்து கணக்கு வழக்கு சரியா பாக்க முடியும்னு தோணல..."

"அந்த பயலுக்கு போர்மேன்னு திமிரு... அதுக்காக பத்தாப்பு வர படிச்சிருக்க நீயே இப்படி சொன்னா எப்புடி? சரி எந்த தீப்பெட்டி ஆபிசா இருந்தா என்ன? வாங்குற சம்பளத்துக்கு நியாயமா ஒழைக்கறே எங்க போனாலும் பொழச்சிப்ப"

"அவன் திமிரு எல்லாம் என்கிட்ட செல்லாது... என்ன ஒண்ணு இந்த தீப்பெட்டி ஆபிசுனா நினைச்ச போது வீட்டுக்கு வந்துட்டு போவேன் அது தான் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு..."

"சரி விடு, எல்லாமே வெரசா சரியாயிடும்."

தூரத்தில் பஸ்ஸின் அலாரம் 'கீங்க் கீங்க்' என ஒலிக்கவே அத்தையிடம் விடை பெற்று ஊர் பொது களத்தில் நின்றிருந்த பஸ் நோக்கி வேகமாக நடந்தாள்.

ஒவ்வொரு ஊரின் பொது இடங்களில் நின்று பெண்களை ஏற்றிக்கொண்டு இளையரசனேந்தல் ரோட்டில் அய்யனேரியைத் தாண்டியதும் பஸ் வேகம் எடுத்து ஓடியது. சாலையின் இரு புறமும் இருந்த புளிய மரங்கள் விருட்விருட்டென்று பின் நோக்கி ஓடுகின்றன. கன்னங்கரேல் என்ற கரிசல் காடுகள் வட்டச் சுற்றாகச் சுற்றிச் சுழன்று பின்னோக்கி ஓடுகின்றன. எதையும் பார்த்து ரசிக்கிற மன நிலையில் இல்லை செல்வி.

ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. படியில் இருந்து இரண்டு ஸீட் தள்ளி ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தவளின் முகத்தில் அறைந்தது, காதோர முடிக் கற்றைகள் காற்றில் அலைய செல்வியின் மனசும் கிடந்து அலைபாய்ந்தது.

ராமையா அவளுடைய தூரத்து சொந்தம். செல்வியை விட மூன்று நான்கு வயது இளையவன். அவளுடைய குடும்ப சூழ்நிலை அறிந்து மேப்பெட்டி மடித்து ஒட்டியவளை தீப்பெட்டிகளைச் சரி பார்த்து போராச் சாக்கில் அளந்து கணக்குப் பார்த்து வில்லை தரும் வேலையில் அவளை அமர்த்தி நல்ல வாரச் சம்பளமும் வாங்கிக் கொடுத்தான்.

கூட வேலை பார்க்கும் பெண்கள் ஆரம்பத்தில் இவர்கள் இருவரைப் பற்றியும் இவள் காது பட கிசுகிசுத்தாலும் இவள் அதைக் காதில் வாங்கியதுமில்லை பொருட்படுத்தவுமில்லை.
'ராமையா என்னோட ஒன்னு விட்ட தம்பி' என்று தான் மற்ற பெண்களிடம் சொல்லி இருந்தாள். ராமையாவும் செல்வியை 'அக்கா' என்று தான் கூப்பிட்டு வந்தான்.

நாளாக  நாளாக, ராமையாவின் பார்வையிலும் நடத்தையிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது, டேப் ரிக்கார்டரில் மோகன் ஹிட்ஸ், T.ராஜேந்தர் பாடல்கள் மட்டுமே எப்போதும் ஒலிக்கும் இப்போது 'நேத்து ராத்திரி எம்மா' 'நிலா காயுது' 'கண்ணத் தொறக்கணும் சாமி' இப்படி முக்கல் முனகல் பாடல்களும், விதி திரைப்பட கதை வசன கேசட்டும் ஒலிக்க விட்டு செல்வியை ஓரக்கண்ணால் பார்த்து இளிக்க ஆரம்பித்தான். பேச்சின் இடையில்  இரட்டை அர்த்தம் தாராளமாக புரண்டது.

செல்வியும் அவளது எதிர்ப்பை நாசூக்காக பலமுறை  வார்த்தையிலும் செயலிலும் காட்டி வந்தாள்.

ஒரு நாள் சாப்பாட்டு வேளையில் "செல்வி கையால என்னைக்குச் சாப்பிட போறனோ ப்ச்... நமக்கு அந்த குடுப்பினை இன்னும் வாய்க்கல" எனச் சொன்னதும் அவனை முறைத்துப் பார்த்தாள் செல்வி.

"இல்ல செல்வி ஒன்ன விட ஒன்னு ரெண்டு வயசு தான கம்மி எதுக்கு அக்கான்னு கூப்பிட்டுகிட்டு?" என்று சொல்லி விட்டு கள்ளச் சிரிப்பு சிரித்தான்.

கோவத்தில் சிவந்த கண்களால் அவனை முறைத்துப் பார்த்தபடியே எழுந்து போய் தென்னை மரத்தின் அருகில் இருந்த தண்ணிக் குழாயில தூக்குவாளியையும் கையையும் கழுவ ஆரம்பித்தாள். பின்னாலயே டிபன் பாக்ஸை தூக்கிக் கொண்டு வந்தவன், 

"வீட்டுக்கு வந்தா வெறும் காப்பித் தண்ணி மட்டும் கொடுத்து ஏமாத்துற... சரி இங்கயாவது முழு சாப்பாடு இல்லனாலும் டிபன் ஆவது சாப்பிடலாம்னா அதுக்கும் வழி இல்ல..."

"என்ன உளர்ற கோட்டி கீட்டி பிடிச்சிட்டா ஒனக்கு?" என்று கோவமாக கேட்க,

"ஆமா செல்வி ஒம்மேல கோட்டி பிடிச்சிட்டு..." 

மறுநொடி அவனைக் கண்களால் எரிப்பது போல் முறைத்துப் பார்த்த செல்வி, தூக்குவாளியில் இருந்த தண்ணீரைக் கீழே உதறிவிட்டு ஜெனரேட்டர் இருந்த அறையின் உள் சென்று தூக்குவாளியைக் கவிழ்த்து காய வைக்க குனிந்தவள் திடுக்கிட்டு அலறினாள், அவளின் இடுப்பில் கை வைத்தபடி இளித்தபடி பின்னால்  நின்றிருந்தான் ராமையா. அடுத்த நொடி கையில் இருந்த தூக்குவாளியால் அவனைத் தாக்க, தூக்குவாளியின் காது அறுந்து பறந்தது, அது கொடுத்த அடியில் தலையில் கீறி ரத்தம் கொட்ட... அவன் சமாளித்து நிமிரும் முன் இடது காது ஓரம் செல்வியின் வலது கை அடி சுளீர் என விழுந்தது. கீழே கிடந்த தூக்குவாளிய எடுத்து மறுபடி ஓங்க... ராமையா இரு கைகளையும் கூப்பியபடி,

"எக்கா என்ன மன்னிச்சிக்கோக்கா, தெரியாம பண்ணிட்டேன்கா மன்னிச்சிறுக்கா இனி இப்படி பண்ண மாட்டேன் விட்டுரு..." என்று கதறினான். ஜெனரேட்டர் அறைக்குப் பக்கத்தில் தீக்குச்சிகளை சலிக்கும் இயந்திரத்தின் சத்தத்தில் ராமையாவின் கதறல் வெளியே கேட்கவில்லை. அவனுடைய  அலறல் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் வேகமாக அறையை விட்டு வெளியே சென்று விட்டாள் செல்வி.

செல்வி நெஞ்சு கொதித்தது. அத்துமீறிய அவனுடன் இனிமேல் ஒரே இடத்தில் வேலை செய்வது சரி வராது என்று தான்  20 மைல் தள்ளி இருக்கும் மேலப்பட்டிக்கு  வேலைக்குப் போகிறாள் செல்வி.

எட்டு மணி இரவுக்கு பஸ்ஸில் இருந்து இறங்கியவள் ஓட்டமும் நடையுமாக வீடு நோக்கி நடந்தாள். தெருமுனையில் இவள் திரும்பியதுமே வீட்டின் முற்றத்தில் மின் விளக்கின் வெளிச்சத்தில் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த குழந்தைகள் இவளைப் பார்த்ததும் ஓடி வந்து ஆளுக்கு ஒரு கையைப் பிடித்துத் தொங்கிக் குதித்தபடியே வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

"எம்மோய்... இன்னைக்கி கடன் வாங்கி கழித்தல் கணக்கு நானே போட்டேன், ஆனா செல்வா தான் இன்னும் ஆணா  ஆவண்ணா  எழுதி முடிக்கல." என்றாள் மகள் செவ்வந்தி.

"எம் புள்ளைக்கு எம்புட்டு அறிவு!" என்று மகளின் கன்னத்தில் முத்த மிட்டு... "அம்மா வந்துட்டேன்ல, செல்லத்துக்கு கையப் பிடிச்சு ஆணா ஆவண்ணா எழுதி தரேன்"என்று மகனின் கன்னத்தைக் கிள்ளி வாயில் கையை முத்தமிட்டாள்.

திண்ணையில் அமர்ந்து இருந்த மாமியாரைத் தாண்டி வீட்டிற்குள் சென்றாள். மூலையில் கயிற்றுக் கட்டிலில் கட்டிட விபத்தில் அடிபட்டு கைகால் உடைந்து கட்டு போட்டுக் கிடந்தான் கதிரேசன். அவனைக் கண்ட செல்வி,

"மருந்து குடிச்சீங்களா? ராணி மதினி நாட்டுக்கோழி முட்டை தரேன்னு சொன்னாங்க மறந்துட்டேன். இப்ப இருட்டுன பொறவு எப்புடி போயி கேட்க? மதியம் சாப்டீங்களா?" என்று கேட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றாள் செல்வி.

"வந்ததும் வராததுமா ஏன் அடுப்படிக்கு போற? ஏன் வாசுகி தீப்பெட்டி ஆபிசு போகாம மேலப்பட்டி தீப்பெட்டி ஆபிசு போற? காலையில எட்டு, ஒம்பது மணிக்கு வேலக்கி போயி சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வர்ற வேலய விட்டுபுட்டு இப்படி விடிஞ்சதும் வேலக்கி போயி ராத்திரி எட்டு எட்டரைக்கு வீட்டுக்கு வந்து ஏன் கஷ்டப்படுத?"

"கஷ்டம் எல்லாம் ஒன்னும் இல்லீீங்க, சம்பளம் கூட கிடைக்குமேன்னு தான் அந்த தீப்பட்டி ஆபிசுக்கு போறேன்."

"இல்ல, வேற என்னமோ காரணம் இருக்கு... தெனமும் வேல முடிஞ்சு வந்து என் கூட பேசிட்டு காப்பி தண்ணி குடிச்சிட்டு போற ராமையா ரெண்டு நாளா வரல ஒனக்கும் அவனுக்கும் என்னமும் பிரச்சினையா?"

"அட நீங்க வேற  அப்படி ஒன்னுமில்ல, நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்காதீங்க."

"சரி சரி நீ என்கிட்ட எதையும் மறைக்க மாட்ட ஒனக்கா எப்போ சொல்ல தோணுதோ அப்ப சொல்லுவ" என்றான் கதிரேசன்.

"ம்ம்ம்.. நாளைக்கு வீரப்பட்டி வைத்தியர பார்த்துட்டு என்னைக்கு கட்டு பிரிக்கலாம்னு கேட்டு வருவமா?" என்று பேச்சைத் திசை திருப்பினாள்.

"கை வலி முன்னைக்கு இப்ப பரவாயில்ல கால் தான் வலி குடையுது... கோழி கூவும் முன்ன எழுந்து வீட்டு வேல பாத்து, சோறு குழம்பு ஆக்கி வேலக்கி போயி வந்து, மறுபடி வீட்டு வேல புள்ளயளுக்கு பாடம் சொல்லி கொடுத்து என்னயவும் புள்ள மாதிரி பாத்து எங்கம்மாவையும் கவனிச்சிக்கிடுற, எப்படி ஒன்னால முடியுது?"

"இப்ப எதுக்கு இதெல்லாம் எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்ங்க..." எனச் சொல்லிவிட்டு கட்டிலில் கிடந்த கணவனைத் தூக்கி கைத் தாங்கலாக வீட்டின் பின் புறம் தென்னம் மட்டையில் வேய்ந்து இருந்த நெரசலுக்கு கூட்டிச் சென்றாள்.கணவனின் முன் கோவத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்ததாலையே ராமையாவைப் பற்றி இப்போது கூறவில்லை.

இரண்டு மாதங்களுக்கு மேல் படுத்த படுக்கையானதிலிருந்தே தன்னோட மனைவி ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல், முகம் கோணாமல் மொத்த குடும்பத்தோட பாரத்தையும் தாங்கிக்கொண்டு வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கிற கதிரேசனுக்கு செல்வி ஒரு சுமை தாங்கி ஆகவே தோன்றுகிறாள்.

குறள் 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
-அ.வளர்மதி 

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...