தலையிலிருந்த ரேசன் அரிசிப் பையை இடது கையாலும் வலது கையில்
சீனி இருந்த மஞ்சள் பையையும் பிடித்தபடி நடந்து வந்தாள் ராக்கம்மா. மனதில் இன்னும்
தாங்க முடியாத கோவம். வெடித்துச் சிதறுகிற அனல் வார்த்தைகள்.
"நான் நடந்து போற தூசில அறுந்து போற தூசிக்கு பெறுவியாழா நீ...? நாசமா போக என்னையாடி பேசின ஓ வாய்ல புத்து பொறப்பட... நாசமா போக..."
தடக் தடக் என்று கால்களை அகல எட்டு வைத்து நடக்கிற நடையில்
பூமி அதிர்கிறது.
வாசலில் பையை இறக்கி விட்டு குழாயடிக்கு ஓடணும். நல்ல தண்ணி
பிடிக்கணும்.
"அந்த கொல்லிவாய் பிசாசு... வாய் புழுத்த சிறுக்கி வேற வீட்டு வாசல்ல
நிப்பா... அவா முன்னாடி போகவா? ச்சேய்..."
மண் பானையில் புளித்துப் பொங்கியிருந்த நீச்சத் தண்ணியைக்
குடித்து விட்டு, கிண்ணத்தில் சோறு
வைத்து தயிர் ஊற்றிப் பிசைந்து சுப்பிரமணிக்கு வைத்தாள். வாலையாட்டியபடி சாப்பிடத்
தொடங்கியது. "ஒனக்கு இருக்குற பாசங் கூட அவளுக்கு இல்லியே..." என பே(ய்)
மூச்சி பெருமூச்சு வாங்கியபடியே வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய பப்பாளி மரத்து அடியிலிருந்த உரல் மேல் அமர்ந்தாள். இங்குட்டு குத்தி அங்குட்டு
வாங்குகிற மாதிரி பூமாரி பேசியது இவளுக்கு இன்னும் கோவம் அடங்கவில்லை.
ரேசன் கடைக்குப் பக்கத்தில் தான் பூமாரியின் வீடு இருந்தது.
செம்மண் தெரு, வீட்டின் முன்
இருந்த காலி நிலம் தெருவைத் தாண்டி எதிரிலிருந்த ரேசன் கடை வரை பரவி இருந்தது.
பம்பரம், சில்லாங்குச்சி, மரம் தொத்தி
குரங்கு, கோழிக் குண்டு விளையாடும் அரை டவுசர் போட்ட சிறுவர்கள்
முதல் ட்ராக் சூட் போட்டு தாயம், கேரம் விளையாடும் இளவட்டங்கள் என எப்போதும் அந்த தெரு கலகலப்பாக
இருக்கும்.
வீட்டின் முன் வேப்ப மர நிழலில் நொண்டி விளையாடிக் கொண்டிருந்தாள்
பூமாரியின் மகள் மாடத்தி. சாப்பிட்ட ஈயத்தட்டைக் கழுவி வெளியே ஊற்ற வந்தவள், மகள் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த
கட்டத்திற்கு நொண்டியடித்தபடியே தாவிக் குதிப்பதைப் பார்த்ததும் மரக் கிளையை
எட்டிப் பிடித்து ஒடித்தாள். முட்டி தெரிய இடுப்பில் தூக்கிச் சொருகியிருந்த
பாவடைக்கு கீழ் முழங்காலில் பொளீர் என அடி இறங்கியது.
"எம்மோய்... எம்மோய்..." என ஒரு அடிக்கு ஒரு குதி குதித்து கத்திய
மாடத்தி, ரேசன் கடையில் வரிசையில் நின்று இருந்த
ராக்கம்மாவாவைப் பார்த்து ஓடினாள்.
"சின்னம்மா அம்மைய பாரு என்ன அடிக்கா..." என அவளுடைய முதுகுக்குப்
பின்னால் ஒழிந்து கொண்டாள்.
"எக்கோய் எதுக்கு பொட்ட புள்ளைய அடிக்கே? பச்ச
மண்ணுக்கு என்னத்த தெரியும்?"
"பள்ளியோடத்துக்கு பெரிய பரிட்ச லீவு விட்டாலும் விட்டானுக இந்தப் பயலுக
பொழுதனைக்கும் இங்கனகுள்ள தான் கெடக்கானுக... வேளா வேளைக்கு திங்க கூட போகமா இங்கனக்குள்ளயே எழவு காத்து
கிடக்கானுக... பொட்ட புள்ளனா கூச்ச நாச்சம், அடக்கம்
ஒடுக்கும் வேணாம்?"
ராக்கம்மா நின்ற இடத்தில் இருந்து முன் நோக்கி வந்து பூமாரி
முகத்தை உற்றுப் பார்த்து நாடியில் கை வைத்து சிரித்தபடியே,
"அதுக்கு ஏங்கா அஞ்சாப்பு முடிச்சி ஆறாப்பு போற பச்ச புள்ளய அடிக்கே? ஒனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா? வெளயாடுற வயசில வெளயாட விடு"
இதைக் கேட்டவுடன் கோவமாக வெடுக்கென ராக்கம்மாவை ஒரு பார்வை
பார்த்த பூமாரி,
"ஞே... பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களா? இன்னிக்கோ
நாளைக்கோ எப்ப ஒக்காருவான்னு தெரியல... இவா ஒனக்கு பச்ச புள்ளயா? அது சரி... சொமந்து, முக்கிப் பெத்து, வளத்து இருந்தா தான புள்ளயோட அரும தெரியும். ஒன் வீட்டு பப்பாளி மரம் கூட மலட்டு மரம் தான வெறும் பூ மட்டும் தான் பூக்குது..."
பூமாரியின் தீக்கங்குச் சொற்களில் ராக்கம்மா ஆடிப் போனாள்.
கல்யாணமாகி ஏழெட்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ராக்கம்மாவை பூமாரியின் சொல்
அம்பு தாக்கித் தள்ளியது. நாலைந்து வருடமாக இந்த மாதிரி மறைமுகமாக பேசியவர்கள்
உண்டு. ஆனால் நேருக்கு நேர் நின்று அம்பு விட்டது பூமாரி தான். 'ஒரே குடும்பத்துல பங்காளிகளுக்கு ரெண்டு
பேரும் வாக்கப்பட்டுருக்கோம், இவாளே இப்படி பேசுறாளேன்னு'
தான் ராக்கம்மாவுக்கு வருத்தம்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நெருங்கிய சொந்த பந்தமாக
இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு போவதை நிறுத்திக் கொண்டாள்.
ரேசன் கடைக்கு வரும்போதோ, வழியில் எங்காவது பார்த்தாலோ தேன் மிட்டாய்,
கமர்கட், கல்கோணா பரிமாற்றம் என மாடத்தியுடனான
ரகசிய சந்திப்பு நடந்து கொண்டு தான் இருந்தது.
மார்கழி மாசத்து குளிருக்கு சேலை முந்தானையை இழுத்துப்
போர்த்தியபடி பால்கார முனியான்டியின் வெண்கல மணியின் கிணுகிணுப்பு ஓசை கேட்டதும்
கோலம் போடுவதை பாதியில் நிறுத்தி விட்டு எழுந்து வந்தாள் ராக்கம்மா. இரண்டு மஞ்சள்
நிற டோக்கனை கிழித்துக் கொடுத்து விட்டு சொம்பில் வாங்கிய பால் சிந்தாமல் இருக்க
கை வைத்து மறைத்துப் பிடித்தபடியே திரும்பியவள் தூரத்தில் தலையில் முக்காடு போட்டு
போகும் பெண்ணைப் பார்த்து,
"பால்காரரே யார் அது இந்த நேரத்தில்?"
"ஒங்க அக்கா தான் பிள்ளைக்கு பால் வாங்கிட்டு போகுது."
"யாரு... பூமாரியா? அவளா... எனக்கு அக்காவா? த்தூ... வாய பால் ஊத்தி கழுவுங்க... ஆமா அவா சாயங்கால பால் தான வாங்குவா இன்னைக்கு என்ன?"
"ஒனக்கு விசயம் தெரியாதா? பால் வாங்க மட்டும் இல்ல... நேத்து புள்ள வயசுக்கு வந்துட்டாளாம், அதான் தண்ணி ஊத்த கடன் கேட்டுட்டு போறா... மாச கடைசியில எங்கிட்ட ஏது
காசு... ஆந்திராவுக்கு டவர் லைன் வேலைக்கு போன ஒங்க ரெண்டு பேரோட
வீட்டுக்காரங்களும் மத்தவங்களும் அடுத்த மாசம் பொங்கலுக்கு தான்
வருவாங்களாம்..."
பால்கார முனியான்டி சொல்லி முடிக்கும் முன்,
"எக்கோய்..." என கத்தியபடியே ஓடினாள். ஓட்டமும் நடையுமாய் ஓட, ஈரப் பாவாடை டப் டப் டப் டப்பென்று கதறுகிறது. ஈரச் சேலை எல்லாம் செம்மண்
புழுதி மண் அப்பி இருக்கிறது. சொம்பில் இருந்த பால் சிந்தி வழிந்து ஓடியது.
ராக்கம்மாவின் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.
"ஏன்கா... எம் புள்ள பெரிய மனுசியா ஆனத எங்கிட்ட கூட சொல்லலைல...? மாமா வரும் வரை காத்து இருப்பியா... என்ன?" தேம்பி
தேம்பி அழுதபடியே காதில் இருந்த கம்மலைக் கழட்டினாள் ராக்கம்மா, "விடிஞ்சதும் போயி இத அடகு வைக்கா... தாலிய மஞ்சக்கயிறுல கோர்த்துகிடுறேன்
இந்த ஜெயின அவா கழுத்துல போட்டு விடு."
"அடச் சீ... கிறுக்கு கழுத... அத ஏன் இந்நேரத்துக்கு கழட்டுற?"
வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே, "வா
வந்து ஒம் புள்ளய முதல்ல பாரு..." என ராக்கம்மாவின் கையைப் பிடித்து கூட்டிச்
சென்றாள் பூமாரி.
குறள் 71:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
பொருள்:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.