Saturday, 26 September 2015

செங்கன்னி

செங்கன்னி


இருண்ட திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்தது.
விடிந்து வெகு நேரமாகி விட்டது.விடியலைக் கண்டு கொள்ளாமல் மூலையில் சுருண்டு கிடந்தது ‘அது’.

எழ எத்தனித்தது. முடியவில்லை. பிடித்தமின்றிப் பாதிக் கண்ணைத் திறந்தது. பக்கத்தில் எந்த ஆடும் இல்லை.தன்னை விட்டுவிட்டு எல்லாமே மேய்ச்சலுக்குச் சென்று விட்டதா? எப்பவும் இதுதான் உசுப்பி விடும்.இன்னைக்கு ‘இது’க்கு என்னாச்சி?

மெதுவாய் எழும்ப முயன்றது.’அந்த’ ‘செங்கன்னி’ ஆடு. மூச்சுத் திணறியது. தலைச் சுற்றியது. விந்தி விந்தித்தான் நடக்க முடிந்தது.

‘சளப் சளப்’பென்ற சத்தம், வீட்டுக்காரம்மா முற்றம் தெளிக்கிறாள் என தெரிந்தது. ஒரு தாளத்தோடு சரியான இடைவெளியில் வரும் அந்த சத்தம் ‘அது’க்கு ரொம்பப் பிடிக்கும்.

எதிர் வீட்டுப் ‘பால்கன்னி ‘கிடா’ மீது ‘அது’க்கு கொள்ளப் பிரியம். இது ‘செங்கன்னி’ போலவே ‘கன்னி’ இன ஆடு தான். கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் ‘கன்னி’ இன ஆடுகள் தான் அதிகம் . பல நாள் இராத்திரியில் அதன் நினைவு வந்து பாடாய் படுத்தும். தூக்கம் தொலைந்து கொட்டக் கொட்ட முழிச்சிட்டு இருக்கும். அந்த மாதிரி நாட்களில் விடிந்தும் விடியாமலும் வெளியில் வந்து இரண்டே தாவலில் கோட்டை சுவரில் ஏறி நின்று கொண்டு ‘மச்சானை’ எதிர் பார்க்கும். நேரம் செல்லச் செல்லப் பல வீட்டிலிருந்து பல பேர் முற்றம் தெளிக்கும் சத்தம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்துக் கரகரப்பாய் ஒலிக்கும். அத்தனை சத்தத்திலும் வீட்டுக்காரம்மா தெளிப்பது மட்டும் தனியாக விலகி இனிமையாகாக் கேட்கும்.
இன்னைக்கு அந்த சத்தம் கூட சலிப்பாகக் கேட்டது.

கொமட்டலுடன் உமிழ்நீர் சுரந்த வண்ணம் இருந்தது. மச்சானைப் பார்த்தால் இந்த மந்தத் தன்மை குறைந்து போகும், குஷியாகவும் இருக்கும். சீக்கிரம் போக வேண்டும். இந்த நேரத்துக்குத் தன்னைக் காணாமல் மச்சான் தவித்துப் போகுமே.

முடிந்தவரை நடையை வேகப் படுத்திக் கம்மாக்கரை வேலியோரம் வந்து சேர்ந்தது.
பக்கத்து வீட்டுப் ‘புல்லைபோரை’ ஆடு, தெற்கு வீட்டுச் ‘செம்போரை’ ஆடு, கீழ வீட்டுக் கிழட்டுப் ‘போரை’ ஆடு, எல்லாமே அங்கு இருந்ததன. அந்தப் பக்கம் குள்ளப் 'பள்ளை ஆடு’ அலமேலு கூட அதிசியமாக அங்கு இருந்தது. மச்சானை மட்டும் அங்கு காணவில்லை. ஒரு வேளை தெற்குப் பக்கம் போயிருக்குமோ? வாய்ப்பேயில்லை. அங்கு கொழுப்புப் பிடித்த ‘போரைக் கிடா’க்கள் அதிகமாம் எல்லாமே முரட்டு மூர்க்கன்கலாம். அலமேலுதான் சொல்லியது.

‘மச்சான்’ வந்ததா இல்லையா யாரிடம் கேட்பது? கவலையாய் இருந்தது. அலமேலுவைக் கேட்கலாமா? கேலி பேசுமே, பேசிவிட்டுப் போகட்டும். வேறு வழியில்லை. ‘புல்லைபோரை’ பரட்டை ஆடும், ‘செம்போரை’ சண்டி ஆடும் இதனைப் பார்த்ததும் ஏளனமாக சிரித்து விட்டு ரொம்ப மும்முரமாய் மேயத் தொடங்கின. மச்சானோடு இந்த இரு ‘போரை’ இன ஆடும் பார்த்த இடத்தில் எல்லாம் முட்டிக் கொகொள்ளும். ‘அது’. மச்சானோடு பேசுவது இதுகளுக்கு பிடிக்காது.

‘பள்ளை’ அலமேலு ஆடு அலுப்பாய் திரும்பிப் பார்த்தது. அப்பொழுதுதான் சடைச் சடையாகாக் காய்த்துத் தொங்கிய கருவேலங்காய் கொப்பு ஒன்று வசமாகச் சிக்கியிருந்தது. ‘பள்ளை’ இன ஆடுகள் குட்டையாக இருக்கும். ரொம்பக் கஷ்டப் பட்டுத்தான் அந்தக் கொப்பு ‘இந்த’ குள்ள அலமேலுவுக்குச் சிக்கியிருக்கும். கொப்பை நழுவ விடாமல் வசதியாய் முன்னங்காலால் மிதித்துக் கொண்டு எரிச்சலாய் கேட்டது. 
“என்ன விசயம்?”
“எங்க மச்சான் இந்தப் பக்கம் வந்தாரா?”
“உங்க மச்சானா?”
“ஹம் ,தெரியாதாக்கும். எங்க ‘பால்கன்னி’ மச்சானத் தான் சொல்லுறேன்.”

“நா பாக்கல.” பேச்சை வெட்டிவிட்டு கருவேலங்காயை ருசிப்பதில் கவனம் செலுத்தியது.

‘அது’க்கு முகம் சுருங்கிப் போனது. உடம்பில் சோம்பல் அதிகமாகிக் கொண்டு வந்தது. மச்சானின் மீது கோபமாய் வந்தது.அழுகை வந்து விடும் போல இருந்தது. தடுமாற்றத்துடன் வீட்டை நோக்கி நடந்தது.
வழியில் இரண்டு 'நாட்டு ஆடுகள்’ பேசிக் கொண்டு இருந்தன. ‘அது’ நடந்து கொண்டே பேச்சைக் கவனித்தது.
“இன்னிக்கு ரொம்ப அசதியா இருக்கு எதுக்குன்னு தெரியல!”
“எத்தனை மாசம்?”
“நாலு மாசம்.”
“ஈத்துக்கு இன்னும் ஒரு மாசந்தான இருக்கு பொறுத்துக்கோ.” 
இந்தப் பேச்சைக் கேட்டதும் பெருமூச்சு விட்டது. விசயம் புரியத் தொடங்கியது. அதேதான்! சந்தேகமில்லை. ‘சினையாயிருப்பது அதற்க்குத் தெரிந்தது. அதனால்தான் இந்த புரியாத அவஸ்தை வேதனையிலும் மகிழ்ச்சி கசிந்தது.
மச்சானுக்குத் தெரிந்தால் நிச்சயம் சந்தோஷப்படும். இப்போதே போய் சொல்லியாக வேண்டும்.

மச்சானைச் சிநேகம் பிடிப்பதற்கு முன் ‘அது’ ரொம்பச் சிரமப் பட்டது. அந்தத் தெருவில்  ‘போரை’ இன ஆடுகள்தான் அதிகம்.'இந்த'  ‘கன்னி’ இன 'செங்கன்னி’ மட்டும் சற்று வித்தியாசப்பட்டு அழகாய் இருந்தது. கருமைப் பூசினாற் போல பளபளப்பு. கோதிவிடத் தூண்டுகிற உருளைக்கிழங்கு உடம்பு. தலையில முன்பக்கமா ரெண்டு செம்பழுப்பு நிறக் கோடுகள், காதுகள்லயும் ரெண்டு செம்பழுப்பு நிறக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். செம்பழுப்பு நிறத்திற்குப் பதிலாக ‘வெண்மை’ நிறம் கொண்ட ‘கன்னி’ இன ஆடு ‘பால்கன்னி’

’செங்கன்னிக்கு’ தெருவில் மவுசு அதிகம். ’இது’ எப்போது வெளியே வரும்? என்று ‘பரட்டையும்’ ‘சண்டியும்’ மணிக்கணக்கில் மல்லுக் கட்டிக்கொண்டு காத்து கிடக்கும். கொஞ்சநாள் இரண்டும் விரட்டி விரட்டிப் பார்த்தன. ‘அது’ மசிவதாயில்லை.

மச்சானிடம் மட்டும் சொக்கிப் போனது. இட்லி விற்கும் ராக்கம்மா வீட்டு ‘பால்கன்னி’ ஆடு அது. கருப்பு நிறம், சீவி விட்ட மாதிரி கொம்புகள். தலையில் கிரீடம் மாதிரி வெள்ளை கோடுகள். கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம், ‘கன்னி’ இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா.. பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையாப் போற மாதிரி இருக்கும். ’செங்கன்னி’ சொக்கிப் போனதில் ஆச்சரியமில்லை.

ஒரு நாள் பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்து சென்றப் போது ‘பரட்டை’ பக்கத்தில் வர, ‘அது’ திடுக்கிட்டுப் போயிற்று. தப்பிக்க வழியில்லையோ என்று தவித்தது. நல்ல வேளை. மச்சான் தருணத்தில் வந்தது. செமத்தியாக நாலு முட்டு முட்டி பரட்டை ஆட்டை பதறி ஓட வைத்தது. அதைக் கேள்விப்பட்டு வம்பு செய்த கிடாவெல்லாம் இதனைக் கண்டால் வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டன.

‘அது’ மச்சானை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து வரும். தனக்குப் போடப் படும் புல்லைத் தின்ன வைக்கும். ராக்கம்மா பெரிய கருமி.அதனால் அடிக்கடி அதன் புல்லை மச்சானுடன் பகிர்ந்து கொண்டது. இப்படித் தான் இருவருக்கும் பிடித்துப் போயிற்று.

"கம்மாக்கரை, அரளிப்பூத் தோட்டம், கருவேலங் காடு என மச்சானோடு சந்தோசமாக சுற்றித்திரிந்தது. மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் மனதை மேய விட்டது.

கம்மாக்கரை வெறிச்சிட்டது. தன்னை மறந்து எங்கே போயிருக்கும்? ஒருவேளை வீட்டுக்குத் திரும்பிப் போன நேரத்தில் வந்திருக்குமோ? இருக்காது சற்று தாமதம் ஆனால் கூடத் தேடி வீட்டுக்கே வந்து விடுமே. கவலையோடு சுற்று முற்றும் பார்த்தது. அலமேலுவும் இல்லை. சற்று தூரத்தில் கிழட்டுப் போரை ’13 மாதக் குட்டி ஆடு’ ஒன்றை கவரும் காரியத்தில் கருத்தாய் இருந்தது.

‘அது’ அதிர்ச்சியுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டது. இது போன்ற கிடாக்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க எம்புட்டு கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அம்மா தன்னை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டது. அப்பப்பா..! எத்தனை தடவை ஆபத்தில் அகப்பட்டிருக்கிறது..! நினைத்தால் புல்லரிக்கிறது.

ஒரு சமயம் ஊரை ஒட்டி இருக்கிற ‘மடத்துப்பட்டி’ ஓடையத் தாண்டி மேய்ச்சலுக்குப் போயிருந்தது.திடீரென்று பலத்த மழை திமுதிமுவென்று வெள்ளம்.ஓடையில் இரண்டு குட்டி ஆடுகள் மூழ்கிப் போயின. அதில் ஒன்று இதோடு பிறந்த குட்டி ஆடும் ஒன்று. மற்ற ஆடுகள் இந்தப் பக்கம் வராததால் தப்பித்து விட்டிருந்தன. ‘அது’ ஓடிச் சென்று ஒரு செடிக்கடியில் ஒதுங்கிக் கொண்டது. ரொம்ப நேரம் அழுது நடுங்கிக் கொண்டு இருந்தது கூடப் பிறந்த ஆடு கண் முன்னால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதை அதனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குளிரில் உடல் நடுங்கியது. இருள் சூழ ஆரம்பித்தது. பயம் தொற்றிக் கொண்டது. ‘ம்மே.. ம்மே..’ என ‘அது’ கத்திப் பார்த்தது. பலனில்லை. ‘ம்மே.. ம்மே.. ம்மே.. ம்மே.. என நிறுத்தாமல் தொடர்ந்து கத்தியது. சற்று நேரத்தில் டார்ச் லைட்டின் வெளிச்சம் தெரிந்தது. மிலிட்டரிகாரரின் மகன் தான் அருகில் பதுங்கி வந்து அதைப் பிடித்து, வீட்டுக்குக் கொண்டு வந்தான். அதன் பிறகு வருடக்கணக்காக வீடு இருண்டு போனது.அதைப் போல நிறைய அனுபவம். நரியிடம் இருந்து, ஓநாய்களிடம் இருந்து தப்பித்ததெல்லாம் சகஜமான விசயம்.

மச்சான் தட்டுப் படாதது கவலை அளித்தது. நெஞ்சுக்குள் தீப் பற்றி எரிந்தது. கால்களில் வெந்நீர் ஊற்றியது போல நிலை கொள்ளாமல் துடித்தன. மச்சானின் வீட்டுப் பக்கம் ஒரு எட்டு பார்த்து வரலாம் என்று கிளம்பியது. 

அக்கம் பக்கத்தில் இருந்தாலும் சத்தம் கேட்டு வரட்டும் என்று “ம்ம்மே ம்ம்ம்மேஹ் ம்ம்மே” என கத்தியபடி சென்றது. வீட்டில் அரவமே இல்லை. கோட்டை சுவர் மீது தாவி நின்று கத்திப் பார்த்தது.பயனில்லை. மறுபடியும் கீழே இறங்கி கம்மாக்கரைக்கு வந்தது.

வலு வத்திப் போனது. கத்துவதை நிறுத்திக் கொண்டது. தெற்குப் பக்கம் போய் தேடவா வேண்டாமா என்று யோசனையாய் இருந்தபோது.. ‘குள்ள அலமேலு’ தெற்குப் பக்கத்தில் இருந்து நாலு கால் பாய்ச்சலில் தலைதெறிக்க ஓடி வந்தது. மூச்சிரைக்க அழுகையும் கண்ணீருமாக அது கூறியதைக் கேட்டதும் ஒரு நிமிடம் இதயத் துடிப்பு நின்று விட்டது. அலமேலு பின்னால் தள்ளாடியபடி நடந்து தெற்குத் தெருவை அடைந்தது.

மச்சானேதான்.!
‘இரு வெள்ளைக் கோடு உள்ள தலை...!’
‘வெள்ளை வயிறு கொண்ட கருத்த உடல்...!’
‘குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருந்த கால்...!’
‘இவை எல்லாம் தனித்தனியாகச் சிதறிக் கிடந்தது, கூடவே இரத்தக் கறையுடன் கத்தி...!’
‘பக்கத்தில் பரட்டையையும், சண்டியையும் கட்டிப் போட்டு இருந்தார்கள்.’

‘அது’ பரிதாபத்துடன் அங்கும் இங்கும் கத்தியபடி ஓடியது. மூலையில் சிந்தி இருந்த மச்சானுடைய இரத்தத்தை பார்த்ததும் அழுகைப் பீறிட்டு ஆக்ரோஷமாய் ஆரம்பித்தது.வெகுநேரம் பதறிப் பதறி உருகி உருகிக் கதறியபடியே இருந்தது.
.



"இதயமில்லா ‘பரட்டை, சண்டி’ இருவரின் 'இன' வன்மத்திற்குப் பலியான காதலனை நினைத்து நித்தமும் உருகுகிக் கொண்டு இருக்கிறாள் என் தோழி ஜெயா...!
‘அந்த’ ‘செங்கன்னி’ ஆடு ‘ஜெயா’வின் கண்ணீரை இன்றும் துடைத்துக் கொன்டிருக்கிறது, ‘இந்த’ ‘குள்ள ஆடு’ அலமேலு."- அ.வளர்மதி

செருப்படி

செருப்படி


மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அரை மணி நேரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். சலிப்புத் தட்டவில்லை. மாலை வரை விளையாடிக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. மாதம் தவறாமல் வந்து பார்க்கிற பாட்டி வீட்டு தோட்டம் தான்.

கொய்யா மரம் போன தடவை பார்க்கும் போது வெள்ளையாய் பூப் பூத்து கண் குளிரச் செய்தது. இந்தத் தடவை காய் விட்டு வியக்க வைத்து விட்டது. வாழையும் விதி விலக்கல்ல ஒரு குழந்தையைத் திடுதிப்பென்று குமரியாய் பார்த்த மாதிரி, நிகு நிகுன்னு அசத்துற வளர்ச்சி. தென்னை பற்றிக் கேட்கவே வேண்டாம் எப்போதும் போல கம்பீரமாக நிற்கிறது.கத்தரி, வெண்டை, தக்காளி செடிகள் போன தடவை நோய் வந்து சுனங்கி கிடந்தது. பாட்டி மருந்து அடிக்க மாமா கிட்ட சொல்லி இருந்தாங்க. இப்போ எல்லா செடியும் தெம்பா தெரியுது.

பாட்டி வீடு ஊரின் எல்லையில் கிழக்கு ஓரத்தில் இருந்ததால் வசதி. வீட்டு பக்கத்துலையே இந்த மாதிரி ஒரு தோட்டம் போட முடிஞ்சிருக்கு. தாத்தா இறந்த பிறகும் பாட்டி நல்ல படியா பராமரிச்சிட்டு இருக்காங்க.

“வளரு.., அங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” வீட்டினுள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது ரொம்ப நேரம் தோட்டத்தில் இருந்து விட்டேன். புட்டு ஆறிப் போயிடும்னு ஆச்சி கவலைப் பட்டுக் கிட்டு இருப்பாங்க. பின் வாசல் வழியே உள்ளே சென்றேன்..

“உன்னைப் பார்க்க பெரியப்பா வந்திருக்காரு” 

“பெரியப்பாவா?”
“ஆமா பெரியவீட்டுப்  பெரியப்பா.”

வீட்டினுள் சென்றேன். வராண்டாவிலிருந்த மூங்கில் சேரில் நாட்டாமை பெரியப்பா உட்கார்ந்திருந்தார். எனக்கு நடுக்கமாகி விட்டது. “அட, இந்த பெரியப்பாவா ? இவரு ‘விளம்பர பேனரு’ கேக்கறதுக்கில்ல வந்துருப்பாரு ?

“வாங்க, பெரியப்பா!”
ஆச்சியிடம் பேசிக் கொண்டிருந்தவர் என் குரல் கேட்டுத் திரும்பினார்.
“வாடா வளரு, சௌக்கியமா இருக்கியா ?”
“நல்லா இருக்கேன் பெரியப்பா!” எங்க கேட்டுருவாரோ என பயம். பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தேன்.
“வேற ஒண்ணுமில்லடா.. உங்கிட்ட கடையில உள்ள பழைய பேனரு கேட்டுருந்தேன்ல. அதான் கொண்டு வந்திருந்தா வாங்கிட்டு போலாம்னு வந்தேன்டா.

பெரியப்பா கேட்டே விட்டார். சடுதியா என்ன சொல்றதுன்னு தெரியல. பொய் சொல்ல நாக்கு கூசியது. எப்படித்தான் சிலரெல்லாம் அப்பட்டமான பொய்ய உண்மை மாதிரியே தெம்பா பேசுறாங்களோ..! என்னால முடியல.சின்ன சின்ன பொய் சொல்ல கூட உடம்பு உதறலெடுக்குது.

”அது.. வந்து..” என திணறினேன்.
“மறந்துடியாடா ? விடு ரொம்ப நாளாயிட்டுல்ல.. அதான். பரவால்லடா. அடுத்த தடவை வரப்போ வாங்கிக்கிறேன். பாவம், உனக்க்கே பல சோலி .இதுல நா வேற எடைஞ்ச பண்றேன்.”
“அப்படில்லாம் இல்ல பெரியப்பா.. இதுல என்ன இருக்கு ? அடுத்த தடவ கண்டிப்பா கொண்டாந்து தரேன்.”
“ரொம்ப சந்தோசம்டா.. இத கேக்கத்தான் வந்தேன். அப்ப நா வரட்டுமா?”
“போயிட்டு வாங்க .” மூன்று பேரும் சேர்ந்து சொல்லவும் சிரித்து விட்டு எழுந்து விட்டார். எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எங்களோட கடையில பண்டிகை காலங்களில் தள்ளுபடி அறிவிப்பு விளம்பர பேனர் அதிகம் வைப்பது வழக்கம். போன தடவை வந்த போது பேச்சோடு பேச்சாக இரண்டு பழைய பேனரு துணி வேண்டுமென்று கேட்டு இருந்தார். நானும் முதலாளி இடம் கேட்டு வாங்கி வருவதாக சொல்லி இருந்தேன். ராணி மதினி தடுத்து விட்டாள்.

அன்றைக்கு மதினி வீட்டுக்கு சென்றிருந்த போது சுவரில் தொங்கிய தினசரி காலண்டர் கண்ணில் பட்டது. சிவகாசி செஞ்சுரி பட்டாசு கம்பெனியின் காம்ப்ளிமெண்ட் அது. எவ்வளவு விலை கொடுத்தாலும் அது போல நல்ல காலெண்டர் கிடைப்பது அரிது. மதினியிடம் கோபித்துக்கொண்டேன்.

“ஓசில கிடைச்சா நீங்களே வச்சிகிடுறதா? எங்கள மாதிரி பாவப் பட்டவங்களுக்கு குடுக்குறதில்லையா?” 
மதினி அலுத்துக்கொண்டாள். “நல்லா சொன்ன போ, உனக்கு கிடைக்காத காலண்டரா ? என் தங்கச்சி அந்த பயர்ஆபீசுல வேல பாக்கா, ரெண்டு கெடச்சதுனு கொண்டாந்து கொடுத்தா. அதுலயும் ஒண்ணு நாட்டாம மாமா வாங்கிட்டுப் போயிட்டாரு.”
“அவரா! இன்னிக்கு காத்தால எங்கிட்ட கூட பழைய விளம்பர பேனரு கேட்டுருக்காரு.”
“அதான.. நீ மட்டும்தான் பாக்கி இப்போ நீயும் மாட்டிக்கிட்டியா?”
“என்ன மதினி சொல்லுத..?”
“அவருக்கு வேலயே இதான். எப்பபாரு யாராவது ஒருத்தர்கிட்ட என்னத்தையாவது கேட்டுகிட்டு கெடப்பாரு, இன்னிக்கி நீ மாட்டுன அம்புட்டுத்தான். அவரு கேக்காருன்னு நீ ஒண்ணும் பேனர கொண்டார வேணாம். அவரோட பொழப்பே அதான்.

அதைக் கேட்டதும் மனசு ஒரு மாதிரி ஆகி விட்டது. எல்லார் கிட்டயும் எதாவது கேடபாரா.. இந்த பெரியப்பாவுக்கு கண்டிப்பா பேனரு கொண்டு வரக் கூடாது. அவரு குணம் தெரிந்து வேண்டுமென்றே தான் கொண்டு வரவில்லை.

“பாப்பா..”
“ம்.”
“இன்னக்கி என்ன ஆச்சு உனக்கு? ஆச்சிட்ட பேசல, இன்னும் சாப்பிடல புட்டு ஆறிடப் போகுது வந்து சாப்பிடு.”
“இதோ வர்றேன் ஆச்சி.”

மளமளவென்று கை கால் முகம் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தேன். ஹாட் பாக்ஸில் இருந்து ஆச்சி புட்டை எடுத்து தட்டில் வைக்கும் போது லேசாக ஆவி பறந்தது. 
“ஆறிடும்னு சொன்னீங்க ஆச்சி” என சொல்லி சிரித்தேன். 
“ஆமாடி உங்க ஆச்சி உனக்கு ஆறிப்போன புட்டதான் குடுப்பாங்கலாக்கும்” என அம்மா அதட்டவும், “அவள ஏன் ஏசுற.. நீ சாப்பிடுப்பா” என சொல்லி விட்டு சீனியையும் துருவிய தேங்காய் தூவலையும் புட்டு மேல தூவி விட்டாங்க.
“கசலி வாழப்பழம் தான் பழுத்து இருக்கு, நாட்டுப் பழம் கடையில வாங்கிட்டு வரவா?” 
“இருக்கட்டும் ஆச்சி இதே போதும்.” 
“நாட்டு வாழை குல அடுப்படில மூட்டம் போட்டு வச்சிருக்கேன், போகும்போது வண்டில முன்னாடி வச்சி கொண்டு போ”
“வேணாம் ஆச்சி வண்டி முன்னாடி வைக்க முடியாது”
“அப்போ சீப்பா வெட்டி தாரேன் வண்டிகுள்ள வச்சி கொண்டு போ.”
“சரி ஆச்சி” என சொல்லி கசலி பழத்தை புட்டில் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தேன்.”

“எம்மா வீட்ல நாட்டு கோழி அட இருக்கு முத்து மாமாகிட்ட சொல்லி ரெண்டு மூணு சாதி கோழி முட்டை வாங்கி குடு’ என அம்மா ஆச்சி இடம் கேட்டாங்க.
“யாரு முத்து கிட்டயா?”
“ஆமாம்மா.”
“நல்லா கேட்ட போ. அவன் கோழிச் சண்டையை தலை முழுகினதுல இருந்து கோழி வளர்க்குறதில்ல.”
“அவர்கிட்ட இல்லாட்டாலும் யாருகிட்டவாவது வாங்கி தருவாரில்ல”
“அதுவும் சரிதான். பாப்பா சாப்ட்டு முடிச்சிட்டு தாத்தா வீட்ல போயி நா சொன்னேன்னு முட்டை வாங்கிட்டு வா.”
“சரிங்க ஆச்சி.”

வடக்குத் தெருவில் இருந்த அந்த பெரிய காரைவீடு அமைதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. அவை இரண்டும் அந்த வீட்டுக்கு அந்நியமான ஒன்று. எனக்கு அதை பார்த்ததும் கவலை ஆனது. சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். எப்பவும் ‘கலகல’வென்று இருக்கும். புலிகளின் தோரணையில் உயரமான அந்த சேவல்கள் நடப்பதை பார்க்கவே பயமாக இருக்கும். சண்டையில் சுற்று வட்டாரத்தில் அவர் சேவலை அடிசிக்கிட எதிர் சேவல் இல்லை. அப்பா அந்த முற்றத்தில் என்னை இறக்கி விட்டார்னா நடக்கையில் காலில் பிசுக் பிசுக் என ஒட்டும். அசிங்கப்பட்டு அப்பாவிடம் தூக்கச் சொல்லி அடம் பிடிப்பேன்.
ரொம்ப வருடத்திற்கு முன் நடந்த கோழிச்சண்டை பகையாகி கொலையில் முடிந்தது . அதற்குப் பிறகு கோழி வளர்ப்பதை விட்டு விட்டார்.

கையில் நீண்ட தொரட்டி கம்போடு தாத்தா வெளிப்பட்டார்.பேரப் பிள்ளைகளுக்கு கொடிக்காய் பறிக்க போறார் என தெரிந்தது. என்னைப் பார்த்ததும் சற்று உன்னிப்பாக கவனித்து விட்டு பின்பு உற்சாகமானார்.

”அடடே.. வளரா.! வாடா எப்ப வந்த தாயி?” 
“காத்தால தாத்தா.”
“என்னடா இந்த பக்கம் தப்புனாப்ல?”
“அப்படில்லாம் இல்ல தாத்தா. மாசத்துக்கு ஒரு முறை ஆச்சிய பார்க்க வருவோம். உங்கள எப்ப கேட்டாலும் வயக்காட்டுக்கு போயிட்டதா சொல்லுறாங்க அதான் பாக்க முடியல.” 
“சரித்தா அம்மா நல்லா இருக்காளா ?”
“ ம் நல்லா இருக்காங்க.”
“வராதவ வந்து இருக்க வீட்ல தேயிலத் தண்ணி போட கூட ஆள் இல்ல . மருமவ ஆட்டுக்கு புல்லு அறுக்க போயிருக்கா செத்த இரு வந்துருவா.” 
“வேண்டாம் தாத்தா மதியம் கிளம்புறோம். நாட்டு முட்டை வாங்கிட்டு போலாம்னு வந்தேன்.”
“ஓ.. இரு வாரேன், கோவில் கொடைக்கு வந்தப்பவே சொல்லி இருக்கலாம்ல பால்ராசு வீட்ல இருக்கும் வா.” 
தொரட்டியை மரத்தில் சாத்தி வைத்து விட்டு தோளில் துண்டை போட்டு நடக்க ஆரம்பித்தார். நான் பின் தொடர்ந்தேன்.

ஊர் கோடியில் இருந்த அந்த வீட்டு முன் நின்றார்.”ஏல பால்ராசு” சிறிது நேரத்துக்கு பின் கதவு திறந்தது.
 “வா.. வா, முத்து சொல்லி அனுப்பி இருக்கலாம்ல! கமுக்கமா வந்து நிக்க?”
“சோலியா இருப்ப.. தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான்.”

“அட நீ வேறப்பா. இதுல என்ன தொந்தரவு? யாரு இந்த புள்ள.. என்ன இந்த பக்கம்?”
“நம்ம ரத்தினத்தோட மகபுள்ள பேத்தியா. அட வைக்க முட்டை கேட்டு வந்துருக்கு.” 
“சரியாப் போச்சு. நேத்துதான் நாட்டாமை வாங்கிட்டு போனாரு.”
எனக்கு எரிச்சல் வந்தது அந்த பெரியப்பா முட்டையையும் விட்டு வைக்கல போல என நொந்து கொண்டேன். 
“அடடா.. அப்ப வேற யார் வீட்லயும் கிடைக்குமா.. பால்ராசு?”
“இங்க யார்ட முத்து இருக்கப் போகுது? பேசாம இளையரசனேந்தல்ல போயி வாங்கிட்டு வந்துரு.”
“அதான் சரி. வரகனூர் பஸ்ஸுக்குப் போயி வாங்கிட்டு வந்திர்றேன். நேரம்மில்ல, நாம அப்புறம் பேசலாம் வரட்டுமா? வாத்தா” என சொல்லி பதிலுக்கு காத்திராமல் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

ஓட்டமும் நடையுமாக பின் தொடந்தேன். அவசரத்தில் வழியில் இருந்த சீனிக்கல்லை கவனிக்கவில்லை, கால் தடுக்கி லம்பி விழ போனவள் தாத்தாவைப் பிடித்து நின்று கொண்டேன். 

“என்னாச்சி தாயி” என பதறி திரும்பியவர் ‘அடி கிடி” படலையே என்று காலை கவனித்தார். 

”ஒண்ணும்மில்ல தாத்தா செருப்புத்தான் பிஞ்சிருச்சி” என்றேன். 

“பஸ் ஸ்டாப்ல மாரியப்பன் கடை இருக்கு. சர்பத் குடிச்சிட்டு பக்க்கதுலையயே செருப்ப தச்சிட்டு போலாம்டா வா” என்றார்.

சரி என சொல்லி பிஞ்ச செருப்பை கால் விரலுக்கு இடையே பிடித்து கொண்டு லாவகமாக நடக்க ஆரம்பித்தேன். சிறுது நேரத்தில் அருகில் இருந்த பஸ் ஸ்டாப்புக்கு வந்து விட்டோம். மணி பதினொன்னரையை தாண்டி இருந்ததால் வெயில் உக்கிரமாக இருந்தது. நிழலுக்காக பெட்டிகடையினுள் ஒதுங்கி நின்று கொண்டேன்.

“ரெண்டு சர்பத் போடு மாரியப்பா இந்தா வாரேன்“ என சொல்லிவிட்டு தாத்தா நடந்தார் அப்போதுதான் கவனித்தேன். கடைப் பக்கத்தில் பெரியவர் ஒருவர் செருப்பு தைத்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. உச்சி வெயில் அவரை சுட்டெரித்துக் கொண்டு இருந்தது. அதை பொருட்படுத்தாமல் குனிந்து செருப்புத் தைத்து கொண்டிருந்தார். நிழலுக்காகப் போட்டிருந்த சின்ன படுதா கிழிந்து நைந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.
காலில் கிடந்த செருப்பை அவர் முன்னால் நகர்த்தினேன். அவர் அதை எட்டி எடுக்கும் முன் தலையில் ஆணி அடித்தது போல (MrMask_)கேசவனின் “செருப்புத் தைப்பவரிடம் கையால் செருப்பை எடுத்து கொடுக்க வேண்டும்.“ என்ற கீச்சு ஞாபகம் வரவே அவசரமாக கையில் எடுத்து இந்தாங்க தாத்தா என்றேன். புன்னகையோடு வாங்கிக் கொண்டார்.

“என்ன ரங்கா, ஒரு பழைய துணி அம்புடலையா? இப்படி வெயில்ல கெடந்து கருகுறியே. சங்கடமாத் தெரியலையா?” 
அவர் வெள்ளந்தியாய் சிரித்தார். ”பழகிட்டு.. பெரியவர்கிட்ட சொல்லிருக்கேன். நல்ல சாக்கு ரெண்டு தரேன்னு சொல்லிருக்கார். அது வந்தாதான் நமக்கு நிழலு.”

“பெரியவரா? யார் அது ?”

“நம்ம நாட்டாமைங்க ஐயா”

“அவர்கிட்டவா கேட்டு இருக்க?”

“ஆமாங்க ஐயா, எங்க காலனில எதும் வேணும்னா அவரத்தான் கேப்போம்.காய்ச்ச, மண்டையடி, வயித்து வலினா.. மருந்து மாத்திர கொடுப்பாரு. பள்ளியோடம் போற புள்ளைகளுக்கு நோட்டு, பேனா, பொஸ்தகம் கொடுப்பாரு. நல்ல நாள் பொழுதுன்னா காய்கறி, துணி மணி கொடுப்பாரு. 'ஜீவா படிப்பகத்துக்கு' வருசா வருசம் காலண்டரு கொடுப்பாரு. எங்களுக்காக கோழி கூட வளர்க்கப் போறாராம், நேத்து பேசிக்கிட்டாங்க.".

இதெல்லாம் கேட்டதும் எனக்கு என்னோட ‘பிஞ்ச செருப்பால பளார் பளார் என அடி’ வாங்கியது மாதிரி இருந்தது. பெரியப்பா இவருக்கு குடுக்கத்தான் பேனர் துணி கேட்டு இருக்க வேண்டும். நான் அவரை தப்பா புரிஞ்சிகிட்டதை நினைந்து கேவலமாய் உணர்ந்தேன்.

உச்சி வெயில் தலையில் சுள்ளென்று உறைத்தது.

ஆச்சி வீட்டுப் பரணில் கோவில் கொடைக்கு வைத்த இரண்டு பேனர்கள் மடித்து இருப்பது ஞாபகம் வந்தது. “தாத்தா இருங்க பஸ்ஸு வர்றதுகுள்ள வந்துடுறேன்.”

ஆச்சி வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். 



அ.வளர்மதி

மழை நீர்

                          மழை நீர்


அது ஒரு ஞாயிறு காலை அதிகாலையில் பெய்த மழையின் மிச்சமாய் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது. நனைந்து இருந்த செய்தித்தாளை புரட்டிக் குடும்ப மலருக்கு அடியில் நனையாமல் இருந்த அம்மாதத்தின் தோழி புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

 "வளரு... ஏ வளரே..." 
வெளியில் இருந்து அம்மாவின் குரல். 
சோபாவில் இருந்தபடியே தலைய மட்டும் கதவுக்கு  வெளிய நீட்டி "என்னம்மா" என்றேன், சீலையை தலைக்கு மூடி மழையில் நனைந்தபடி அம்மா நின்றுகொண்டு இருந்தாங்க, எனக்கு கோபம் தலைக்கேற... 

"யம்மா உள்ளாரவா எதுக்கு இப்படி நனைஞ்சிட்டு இருக்க" என ஏச தொடங்கினேன்.

"ஏட்டி ஏசாதட்டி  நல்ல தண்ணி திறந்து விட்டுருக்கான் அடுப்படியில இருக்க உப்பு தண்ணி குடத்த தூக்கி சில்வர் அண்டாவுல ஊத்திட்டு வெரசா குடத்த குடுடி வரிசை வந்துரும்." 
நான் திட்டியதை அம்மா காதில் வாங்கவில்லை.. 
"நான் சொல்லி நீங்க என்னைக்கு கேட்டீங்க" என முனங்கியபடி அடுப்படிக்கு விரைந்தேன்.

         இரப்பர் குடங்களில் உள்ள தண்ணீரை அண்டாவுக்கு மாற்றிவிட்டு ஜன்னலில் கிடந்த துண்டையும் கையில் எடுத்து கொண்டு வாசலுக்கு நடந்தேன், வெளியில் கண்ட காட்சி மறுபடியும் கோபத்தை தூண்டியது தாழ்வாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் மீது போர்வைய போர்த்திக் கொண்டு இருந்தாங்க, 

"யம்மா அது கெடக்கட்டும் முதல்ல தலைய துவட்டு... பிடி" என துண்டை கையில் திணித்து விட்டு வண்டியை தாழ்வாரத்தில் சற்று உள்ளே தள்ளி நிறுத்த ஆயத்தமானானேன்.

 "ஏபுள... இந்த மழைல அதோட எதுக்கு மல்லுக்கட்டுறவ விடு நனையாத உள்ள போ..." என கூறி துண்டை என் கையில தந்துவிட்டு   இரண்டு காலி குடங்களை கையில் எடுத்துக்கொண்டு  தண்ணி குழாய் நோக்கி  நடக்க ஆரம்பிச்சிடாங்க.

            வீட்டினுள் வந்து மறுபடி தோழியை புரட்ட ஆரம்பித்தேன் மனது லயிக்கவில்லை, வாசலை பார்த்தபடி அமர்ந்து விட்டேன் கால் மணி நேரம் கழிந்த பிறகு தலையில் ஒரு குடமும் இடுப்பில்  சிறிய குடம் ஒன்றையும்  சுமந்து அம்மா வருவதை பார்த்து கோபமாக வாசலை நோக்கி எழுந்து போனேன். நான் வருவதை பார்த்ததுமே.. 

"யேய் இரு.. இரு" எனச் சொல்லி வேகமாக நடை போட்டு என்கிட்ட வந்துட்டாங்க. மேல் படியில் நின்ற நான் அம்மாவின் இடுப்பில் இருந்த குடத்தை இறக்கி கீழே வைத்துவிட்டு,  தலையில் உள்ள குடத்தை வாங்கி என் இடுப்பில் வைத்தபடியே கீழே ‘A’ என்று வெள்ளை பெயின்டால் எழுதப் பட்டிருந்த சிறிய  குடத்தை பார்த்து... 

"இந்த சின்ன கொடம் யாருதுமா...?" என கேட்டேன்.

 "கொடத்த இடுப்புல வச்சிட்டு நிக்காத எறகிட்டுவா". எனச் சொல்லி தலைய துவட்ட ஆரம்பிச்சிட்டாங்க. வெளியே தூறல் நின்று விட்டது.

           அடுப்புத் திண்டில் குடத்தை இறக்கி வைத்துவிட்டு, வராண்டாவிற்கு வந்து...

"யம்மா.. இந்த கொடத்த எறக்கி வைக்கவா எதுலையும் ஊத்தவாமா...?" எனச் சத்தமா கேட்கவும்,

"இருட்டீ பித்தள அண்டால ஊத்தணும்"  என அம்மாவின் குரல் கேட்டு சத்தம் வந்த உள் அறைக்கு போனேன். பிளாஸ்டிக் சேர் மீது ஏறி பரணில் பித்தளைப் பாத்திரங்கள் அடுக்கி இருந்த மேற்கு மூலைய அம்மா ஒதுக்கிகிட்டு இருந்தாங்க.

          என்னை பார்த்ததும் இங்கவா... எனக் கூறுவது போல தலையாட்டவும் அருகில் சென்றேன். தூசி படிந்து இருந்த அண்டாவை இறக்கி கனமா இருக்கும்  பாத்துப் பிடி எனச் சொல்லி என்கிட்ட கொடுத்தவுடன்  ஒரு நொடி தடுமாறிட்டேன் உயரத்திலும் எடையிலும் என்னில் பாதி இருந்தது.

            "என்னம்மா இம்புட்டு கனங்கனக்குது" எனக் கேட்டதுக்கு... 
"பின்ன இருக்காதா என் தம்பி குடுத்த சீர் டீ..." 

"அதெல்லாம் சரிதாம்மா அந்த சின்ன குடம் யாரோடது அத சொல்லு..."

"சொல்லுறேன்டி  அந்த குடத்த தூக்கி இந்த அண்டால ஊத்து’, அடுப்படி வாசல் அருகில் வரண்டாவில் அண்டாவை வைத்து தண்ணியை ஊற்றிவிட்டு அம்மாவிடம் வந்து அமர்ந்து கொண்டேன். 

"சொல்லுமா" என நான் ஆரம்பம்பிச்சதும்...
"நானும் பாக்குறேன் அப்ப பிடிச்சி தொன தொனனு அனத்திகிட்டு இருக்க உனக்கு பதில் சொல்லிட்டு இருந்தா வரிசை வந்துரும்டி" என அம்மா சொல்லி முடிக்கும் முன், 
"ம்கும்... வருச  வர்றதுகுள்ள ‘டாப் டென்னே’ முடிஞ்சிரும்மா..." அம்மா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

       "எதுத்த வீட்டுக்கு புதுசா வாடகைக்கு குடி வந்து இருக்கிற ஆனந்தி கொடம்டி அது..."

 "ஓ அந்த எஸ்டேட்கார அக்காவா..." 

"ஆமா அந்தப் புள்ள மாசமா இருக்கான்னு அவ வீட்டுக்காரன் சிறுசா வாங்கி குடுத்து இருக்கான், அது 12லிட்டரு தான்டி பிடிக்கும் ஒரு வீட்டுக்கு நாலு வருச வரதே பெருசு அந்த தண்ணிய வச்சி என்ன செய்வான்னு தான் நம்ம பெரிய குடத்த அவா வீட்டு வாசல்ல இறக்கி வச்சிட்டு அவளோடத எடுத்துட்டு வந்தேன். நாம மோட்டரு போட்டுகிடுவோம் அவா தண்ணி பத்தலைனா அடிபம்புல தான அடிக்கணும் பாவம்" என சொல்லி முடிக்கவும் அம்மாவின் முகம் வாட தொடங்கியது. 

  "இப்ப முக்கு குழாயில தண்ணி வருதாமா..."

"வருது போன வாரம்தான் சரி பண்ணினாங்க.. அதுக்கும் அந்த செல்வி வீட்டுக்கு நடையா நடந்து இருக்கு..."

"யாரும்மா செல்வி" 

"பஞ்சாயத்து தலைவிடி..." 

"ஓ.. “செல்வி சங்கரா" 

"ஆமா அவ வீட்டுக்காரந்தான் தலைவர் மாதிரி, செல்வின்னு கையெழுத்துக் கூட போட மாட்டா ரப்பர் ஸ்டாம்புதான்" கேட்டதும் சிரித்து விட்டேன். 

"அடுப்புல கப்ப அவிச்சி வச்சிருக்கேன் எடுத்துட்டு வா..." என சொல்லவும், 'ஐய்' எனக் கூவி சிறுபிள்ளையாய் மாறி எழுந்து போனேன்.சூடான ‘கப்ப கிழங்கை’ பாத்திரத்தில் எடுத்து கொண்டு கூடவே கருவாட்டு ஊறுகாயையும் கையில் பிடித்து வருவதை பார்த்ததும்.. 

"ஏட்டி நீ எம்புட்டு சொன்னாலும் கப்பய ஊறுகாய்ல தொட்டு சாப்பிடுறதை விட மாட்ட..." என பொய்யாய் கோவித்துக் கொண்டாள் அம்மா. வானம் மறுபடி இடி இடிக்க ஆரம்பித்தது.
       
"மழை வரப் போகுது டீவி போட்டுகிட்டு இருக்காத அடி ஆகிடும், நானு கொளம்ப கூட்டி வச்சிட்டு வாரேன் அது வர கப்பைய ஊறுகாயில தொட்டுத் தின்னு.. கூட்டு மாதிரி ஊறுகாய அள்ளித் திண்ணுறாத..." என சொல்லிவிட்டு ஈயச் சட்டியையும், குத்துப் பானையையும் எடுத்து வாசல் அருகில் வைத்து விட்டு சமையல் அறையில் நுழைந்தாள் அம்மா. 

‘டாப் டென்’ பார்க்காம நடு அறையில  நமக்கு என்ன வேலை நானும் பின்னாலே சென்று அடுப்பு பக்கத்தில் இருந்த திண்டில் ஏறி அமர்ந்து கப்பையை ருசிக்க ஆரம்பித்தேன்.

       "இங்க என்னடி பண்ணுறவ..." என அம்மா கரண்டியை ஓங்கவும்.. "யம்மோய் உனக்கு ஒத்தாசை பண்ணதான் வந்தேன்." எனச் சொல்லி ஒதுங்கிக் கொண்டேன். 

"உன்னப் பத்தி எனக்குத் தெரியாதாக்கும்... தேங்காய் சில்லு திங்கத்தான வந்த... 'கெவினும்','மௌனிகா'வும் காலையிலையே வந்து அரச் சில்ல காலி பண்ணிட்டாங்க இருக்குறதையும் திண்ணுப்புடாத..." எனவும் எனக்கு கோவம் வந்து விட்டது. 

"ஓஹோ பேரன் பேத்தினா ஏச மாட்டீங்க! ம்ம்ம்...," 

"ஆமாட்டி நான் தான் இப்போ அதுகளத் தூக்கிக் கொஞ்சிட்டு இருக்கனாக்கும் பேசாமயிரு சொல்லிப்புட்டேன்." என அம்மா சொல்லி முடிக்கவும் அக்கா மகன் கெவின் "ஆச்சி தண்ணி பிடிக்க வருவீங்கலாம் அம்மா கூப்பிடாங்க..." என சொல்லி உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

"அம்மாச்சி வரிசைய உங்க அம்மாவ பிடிக்கச் சொல்லுடா..." என அம்மா சொல்லவும்  என் தட்டில் இருந்து இரண்டு  துண்டு கப்பக் கிழங்கை எடுத்துக்கொண்டு  வந்த வேகத்துலையே திரும்பி ஓடிட்டான். அம்மா அதை பார்த்த மாதிரி  காட்டிக் கொள்ளவேயில்லை.
  
"ஏம்மா ரெண்டாவது வரிசை தண்ணி பிடிக்கலையா நான் வேணும்னா பிடிச்சிட்டு வரட்டாமா?" என நான் கேட்டதற்கு.. 

"எதுக்கு சூரியன் கிழக்க உதிக்கிறது உனக்கு பிடிக்கலையா பேசாட்டிருனு’.. சொல்லுவாங்கன்னு நினைச்சி கூட பாக்கல.

   "நம்ம ரெண்டு பேருக்கு நாலு கொடம் நல்ல தண்ணி போதும்டி.. முன்ன உங்க அப்பா இருக்கும் போது ரெண்டு கிலோ மீட்டரு சைக்கிள்ல போய் ‘மாடசாமி கோவில்’ பம்புல வரிசைல நின்னு தண்ணி எடுத்துட்டு வருவாரு... இப்போ வாரத்துல ரெண்டு நாளு நல்ல தண்ணி விடுறான் நமக்கு போதும்"  அம்மா சொன்னவுடன் எங்களோட கிராமத்து வீட்ல இருந்த அடி பம்பு  ஞாபகம் வந்தது. 

அப்போது எனக்கு 5’வயசு இருக்கும் போர்வெல் லாரிய அவ்வளவு பக்கத்தில் பார்த்ததில் அளவில்லா சந்தோசம்.வீட்டின் முற்றத்தில் கூடி இருந்த சிறுவர்,பெரியவர் கூட்டத்தை பார்த்ததும் பெருமையும் கூடச்
சேர்ந்து கொண்டது. நீரோட்டம்  பார்க்க வந்த பொன்னையா தாத்தா கையில் தேங்காயை படுக்க வசத்தில் வைத்து கொண்டு கொய்யா, நெல்லி, பப்பாளி,மாதுளை மரங்களை சுற்றி நடந்துகிட்டு இருக்கும் போது வடக்கு மூலைல இருந்த கொய்யா மரத்த தாண்டி  நாலு அடி வச்சதும் தேங்காய் ‘சட்டென.. எழுந்து நிற்கவும்’ பயத்தில் நான் அலறி விட்டேன், இப்போ நினைத்து பார்த்தாலும் பயமாயிருக்கு.

.அந்த இடத்தில் பொன்னையா தாத்தா வட்டம் போட்டு கொடுத்தார்.அங்க போர்போட்டதுல அறுபது அடி ஆழத்தில் தண்ணி வந்தது.தண்ணி நல்ல சுவையாக இருந்தது.   

  எப்போதும் யாராவது எங்க வீட்டு அடி பம்புல தண்ணி எடுக்க வந்து கொண்டு இருப்பாங்க.
 அம்மா எனக்குச் சிறிய பச்சைக் குடம் வாங்கிக் குடுத்து இருந்தாங்க.. காலை எக்கி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஒரு முறை தொங்கினாலே போதும் குடம் நிரம்பி தண்ணி கீழே வழிந்து வாய்க்கால் வழியா செடிகளுக்கு தண்ணி போகும். கிராமத்தை விட்டு வந்ததும் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டோம். இப்போது அந்த ‘அடி பம்பு’ இருந்த இடம் கூட தெரியவில்லை மோட்டார் போட்டதால தரையோடு தரையாக ஆகிவிட்டது மேலே மூடப்பட்டிருக்கும் கருப்பு கடப்பா கல்லுதான் இப்போது அடையாளம் ."வெய்யகாலத்துல... 750லிட்டரு டேங்கு நிறைய ஒன்னேகால் மணிநேரம் ஆகுதுக்கா" என அந்தோணி மாமா வாடகை குடுக்க வரும்போது சொன்னது ஞாபகம் இருக்கு. இப்ப இருக்கிற வீட்ல போர்போட்டபோது 230அடியில தண்ணி வந்தது,500 லிட்டர் நிறைய ஐம்பது நிமிடம் ஆகுது.

     மசாலா வாசனையும், பிரிட்ஜ்ல மீனு இருக்கு எடுத்துட்டு வாங்கிற அம்மாவோட குரலும் பழைய நினைவுகளை களைத்தது. நவர மீனை எடுத்து வந்து அம்மாவிடம் குடுத்துவிட்டு திண்டில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஏம்மா மாடன்கோவில் பம்பில் இப்போ தண்ணி வருதாம என கேட்டு விட்டு பதிலுக்கு அம்மாவின் முகத்தை பார்த்துகிட்டு இருந்தேன். ‘அதுல இப்போ முன்னமாதிரி தண்ணி சுவையாவும் இல்ல தண்ணியும் கம்மியாகிட்டு அதுவுமில்லாம கோவில சுற்றி கோட்டை சுவரு வேற கட்டிட்டாங்க அதனால அவ்வளவா இப்போ யாரும் அங்க போறதில்ல.. அந்த கோவில சுத்தி கம்மாயில நாலைஞ்சு போர்போட்டுதான் நம்மூருக்கும் வடக்கூரு தண்ணி தொட்டிக்கும் தண்ணி வருதுன்னு சொன்னாங்க.

  நாலைஞ்சு போர்போட்டும் ஏன் வீட்டுக்கு 8 கொடம் தண்ணி மட்டும்தான் கிடைக்குன்னு யோசிசிட்டு இருக்கும் போது என் முகத்த பார்த்து என்ன ரோசனை பலமாயிருக்குனு அம்மா கேட்டாங்க.. சந்தேகத்த கேட்டதும்.."கண்மாயில தண்ணி இருந்தாதான போர்ல தண்ணி வரும், கண்மாயில் தண்ணி நிறைஞ்சு வருஷ கணக்கா ஆச்சிது.. இப்போல்லாம் மடைல தண்ணி கொஞ்ச நாள் தான் நிக்குதுடி".. எனக்கு அம்மா சொன்னது புரியல..

,"ஏன்மா அவ்வளவு சீக்கிரமாவா  தண்ணி எல்லாம் தீர்ந்துடும்.?"

."தண்ணி  எல்லாம் மண்ணு எடுக்க தோண்டுன கிடங்குலதான்டி  நிக்கும் அதையும் இந்த ‘சீமை கருவேலமரம்’ உறிஞ்சி குடிச்சிரும் பெறகு எங்குட்டு நமக்கு தண்ணி வரும். ஊருக்குள்ள தண்ணி தங்குறதுக்கு எங்க இடம் இருக்கு.. சிமெண்ட் ரோடு, சிமெண்டு வாய்க்காலுனு போட்டுடாங்க.. போதா குறைக்கு வீட்டு முற்றமும் சிமெண்டுல போட்டாக்க எப்படி தண்ணி நிக்கும்!" சொல்லிட்டு ஆசுவாசப் படுத்திக்கிட்டாங்க.

  எங்க வீட்டு ‘மண் முற்றம்’ அப்போதுதான் ஞாபகம் வந்தது. போர்டிகோ இல்லை இரண்டு டூவீலர் நிற்கிற அளவுக்கு வீட்டு முன் சின்ன செட் மட்டும்தான் மீதி இடங்களில் செடிகளும் மரங்களும் தான் இருந்தது. எவ்வளவோ முறை என்னோட தாய்மாமா போர்ட்டிகோ கட்டி தலத்தில் கிரானைட் போட சொல்லியும் அப்பா உயிரோட இருந்தவரை அதற்க்கு ஒத்துக் கொள்ளவில்லை. எப்போதும் தோட்டத்து செடிகளை பராமரிப்பதிலும் கோழிகளுக்கு உணவிடுவதிலுமே நேரத்தை போக்குவார்.

       அப்பா இறந்த பின்  கிராமத்தை விட்டு வந்து விட்டோம்.எங்களோட வயல்காட்ட சித்தப்பாவால  சரியா கவனிக்க முடியல தெக்காட்டுல ‘சீமை கருவேலமரம்’ முளைசிட்டு.. அம்மா ஊர்ல இருந்த தங்கராசு மாமாகிட்ட... 
" கிணத்துல தண்ணி குறைஞ்சிடும் விடும் ராசு.. மரத்த வெட்டி வேர தோண்டி நிலத்த சரி பண்ணி குடு"ன்னு சொன்னாங்க.. மரத்த வெட்டி 10000ரூபாய்க்கு வித்ததும் இல்லாம வெட்டுகூலிக்கு சரியாகிட்டு இனி  வேரைத் தோண்டி எடுக்கனும்னா கூடுதலா 5000 ரூபா வேணும்னு சொன்னாரு.. அம்மா மறு பேச்சு பேசாம பணத்த குடுத்துட்டாங்க.. தாய்மாமா ரெண்டு பேரும் ஏசுனதுக்கு..
"போனா போட்டும்டா.. அந்த பணத்த வச்சி என்னத்த அள்ளிக்கிட்டு போக போறான் விடு நமக்கு நிலம் சுத்தமான போதும்" என
சொன்னாங்க.. ரெண்டு மாமாவும் அதுக்கு அப்புறம் அத பத்தி எதும் பேசவில்லை.

     எதுவும் பேசாம கப்பை கிழங்கையும் சாப்பிடாம நான் இருந்ததை பார்த்து விட்டு... 
"போயி கையகழுவு.. உனக்கு மீனு வாசம் வந்த பிறகு கப்ப எப்படி இறங்கும், செத்த நேரத்துல குளம்பு ரெடியாகிடும் சாப்பிடு."

 நான் அப்புறம் சாப்பிட்டுகிடுறேன்னு சொன்னத சில நொடிகள் ஆச்சரியமா பார்த்து விட்டு.. சமையல் வேலைல மும்முரமா ஆகிட்டாங்க. எனக்கு மனசுல  ஏனோ சின்ன இறுக்கம் எதனால் என்று காரணம் சொல்ல தெரியல. கை கழுவ தொடங்கினேன். வெளியே இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

வாசலில் இருந்த  ஈயச் சட்டியையும், குதுப் பானையையும் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் ஓடிப் போய் மாடியில் இருந்து வலிந்தோடி வந்த மழை நீரை நனைந்தபடி  ஆசையாய் பானைகளில் சேகரித்து வீட்டினுள் பாத்திரங்களில் ஊற்ற ஆரம்பித்தேன். கால் மணி நேரத்தில் முக்கால்வாசி பெரிய பாத்திரங்கள் நிறைந்து விட்டது. 

"ஏட்டி இப்படி எல்லாப் பாத்திரத்துலையும் தண்ணி ஊத்தி பலசாக்கிட்டா புருசன் வீட்டுக்கு வாழப் போகும் போது எதக் கொண்டு போவியாம்"

"ம்கும்... அவங்க வீட்ட்ல பாத்திரமே இருக்காதாக்கும்.?"

“அப்படினா ‘வாஷிங் மிஷின்’ நாலு குடம் பிடிக்கும் அதுலயும் பிடிச்சி ஊத்தி வைடி."


      குடத்தை கையில் எடுத்துக் கொண்டு குஷியாக மழையில் இறங்கி.. நடக்க தொடங்கினேன், இந்த முறை அம்மா ஏசவில்லை மாறாக..
 “ஏட்டி நீயெல்லாம் இப்படி தண்ணி பிடிக்க ஆரம்பிச்சா பெய்யாத மழை எல்லாம் ஒரே நாளில் பெய்து பெருவெள்ளம் வரப் போகுதுட்டி..." சொல்லிட்டு சிரிக்கவும் நானும் அம்மா கூடச் சேர்ந்து சிரித்துக் கொண்டே மழை நீரைக் கைகளில் பிடித்து விளையாட... 
வானத்தில் தோன்றியது 
வண்ணமிகு வானவில்.


அ.வளர்மதி

நடுவுல கொஞ்சம் நெலத்தக் காணோம்...

ஊரின் மத்தியில் இருந்த சமுதாயக் கூடத்தின் திண்ணையை நோக்கித் தோளில் கிடந்த துண்டால் வியர்வை வடிந்த முகத்தைத் துடைத்தபடியே வந்த வேலுச்சாமி...